வெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்

பொறுக்க முடியாத துயரத்தின் விளிம்பில் நின்று

கொண்டிருக்கும் நாம்

தவறி விழுந்தால் வன்முறையாளர்களாக

தவறி விழுவதைத் தவிர வேறு வழியில்லை

கண்களில் ததும்பி நிற்கும் கண்ணீர்

கீழே விழும் போது

வெடிகுண்டாகத்தான் விழும்

என்பது தெரியாமல்

விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்

என்ன செய்தாலும்

தாங்கிக் கொள்வோம்

என்ற மமதையோடு நடந்து கொள்ளும்

எந்த சர்வாதிகார ஆட்சியும்

சர்வாதிகாரியும்

அடையாளமில்லாமல் போனதுதான்

வரலாறு

 

நாங்கள் எங்கள் படிப்பைப் படித்தோம்

மருத்துவரானோம்

ஆண்டாண்டு காலமாக

மருத்துவம் பார்த்தோம்

எத்தனை பேர் செத்துப் போனார்கள்?

எங்கள் படிப்பில்

எங்கள் மருத்துவத்தில் என்ன குறைபாட்டைக் கண்டீர்கள்?

 

தரமான படிப்பு என்றீர்கள்

தரமான மருத்துவம் என்றீர்கள்

எங்கள் பாடத்தை நாங்கள் படித்து

எத்தனைதான் மதிப்பெண் எடுத்தாலும்

உங்கள் விருப்பத்திற்கு ஒரு வினாத்தாளைத் தயார் செய்து

எங்களை எழுதச் சொல்கிறீர்கள்

கேட்க வேண்டியவர்கள்

கைகட்டி நிற்கிறார்கள்

எங்களுக்கென்று நாங்கள் தேர்ந்தெடுத்தவர்கள்

எதிர்க்க வேண்டியவர்கள்

ஆட்சியில் இருக்கிறார்கள்

இனி நாங்கள் செய்ய வேண்டியது என்ன

என எங்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள்..

இனியும் சும்மா இருக்காதீர்கள் இளைஞர்களே

இனியும் சும்மா இருக்காதீர்கள் தாய்மார்களே

இனியும் சும்மா இருக்காதீர்கள் மாணவர்களே

என்று மறுபடியும் மறுபடியும்

அவர்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்

 

தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும்

சூடு சொரணை இல்லாதவனுக்கும் கூட

சூடு சொரணையை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்

 

அதிகாரம் மட்டுமே

உங்களை

அதிக நாட்களுக்குக் காப்பாற்றாது

 

இதற்கு முன்பு டெல்லியில் இருந்தவன்

பக்கத்து நாட்டில் எங்கள் சொந்த பந்தங்களை

கொத்துக் கொத்தாய்க் கொன்ற போது

அதற்கு உதவி செய்தான்

இப்போது

டெல்லியில் இருப்பவன்

எங்களையே கொத்துக் கொத்தாய்க்

கொன்று கொண்டிருக்கிறான்

 

எங்களைக் கொலை செய்வதற்கு

அவன்

பல ஆயுதங்களை ஏவுகிறான்

மீத்தேன்

ஸ்டெர்லைட்

நீட்

இன்னும் இப்படியாகப் பலவாக்கில்

ஆயுதங்களை ஏவுகிறான்

 

போபால் விஷ வாயுவை விடக்

கொடூரமான ஆயுதங்கள் இவை

இத்தனை கொடுமைகளுக்கு

மத்தியிலும்

இருக்கும் ஒரே ஒரு ஆறுதல்

இவை அத்தனையையும்

எதிர்க்கும் நெருப்புப் பிழம்பு

ஒன்று குமுறிக் கொண்டிருப்பதுதான்

அது

வெடிக்கக் காத்திருக்கிறது

– க.சிவஞானம்

 

Sivanganam Poem