பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை — வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு திட்டம்: ஞாயிறு கூடுகிறது தமிழக அமைச்சரவை

வரலாற்று வாய்ப்பைப் பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் முடிவை அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக, ஞாயிறன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை  விடுவிப்பது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதுதொடர்பாக தமிழக அரசு என்ன முடிவு எடுக்கும் என எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், ஞாயிறன்று மாலை 4 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அக்கூட்டத்தில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு பரிந்துரைப்பது குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், பல்வேறு முக்கிய முடிவுகளும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது.

நீண்ட காலமாக இழுபறியில் இருந்து வரும் இந்த விவகாரத்தில், தற்போது கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி முடிவெடுத்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவித்தால், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வரலாற்றில் அழிக்க முடியாத பெருமையை அது தேடித்தரும் எனக் கூறப்படுகிறது.

Tamil Nadu Cabinet to take decision about Perarivalan and others release on Sunday