முக்கிய செய்திகள்

இந்தியாவுக்கும் தடா தான்: அமெரிக்கா திடுக்

ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால்இந்தியாவுக்கும் பொருளாதாரத் தடை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

டெல்லியில் டூ ப்ளஸ் டூ பேச்சுவார்த்தை முடித்து விட்டு விமானம் ஏறிய சிறிது நேரத்திலேயே, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ இத்தகைய கருத்தைத் தெரிவித்திருப்பது அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற இருநாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு பின்னர், அமெரிக்கா செல்லும் வழியில் விமானத்தில் மைக் போம்பியோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா உட்பட அனைத்து நாடுகளுமே நிறுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு எனக் கூறினார்.

வரும் நவம்பர் 4ஆம் தேதியுடன் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாத நாடுகளுக்கு பொருளாதாரத் தடை விதிப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், இந்தியா போன்ற முக்கியமான நட்பு நாட்டை தண்டிக்க அமெரிக்கா விரும்பவில்லை என்றும் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார். 

டூ ப்ளஸ் டூ பேச்சுவார்த்தை என பிரலாபிக்கப்பட்ட இந்திய – அமெரிக்க இருதுறை அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தையில், ராணுவ தகவல் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வது உட்பட பல்வேறு அம்சங்கள் அடங்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், அமெரிக்காவை விட இந்தியா விட்டுக் கொடுத்ததே அதிகம் என கூறப்படுகிறது. இந்திய ராணுவ தொழி்ல் நுட்ப ரகசியங்களை என்கிரிப்சன் எனப்படும் குறியீ்ட்டு பாதுகாப்பு முறையில் கையாளும் முழு உரிமையும் அமெரிக்காவே வைத்துக் கொள்ளப் போகிறது. இந்தியாவின் ஒப்புதலின்றி எந்தத் தகவலும் பகிரப்படாது என்ற உறுதி மொழியை மட்டும் அளித்து விட்டு., அத்தனை தொழில்நுட்ப ரகசியங்களையும் அமெரிக்கா கபளீகரம் செய்துள்ளது. டெல்லியை விட்டு புறப்படும் வரை நல்ல பிள்ளையைப் போலப் பேசிக் கொண்டிருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பியோ, விமானத்தில் ஏறியதுமே வேறு மாதிரிப் பேசத் தொடங்கி விட்டார். ஈரான் விவகாரத்தில் அனுசரித்துப் போகாவிட்டால் மற்ற நாடுகளுக்கு நேரும் கதிதான் இந்தியாவுக்கும் என்பதை அவர் விமானத்தில் செல்லும் போது தம்முடன் வந்த செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இதற்குப் பெயர்தான் ஒப்பந்தமாக்கும்.  ​

US Say no Compromise in Iran Oil Cut issue Even on Indai

 

 – புவனன்