முக்கிய செய்திகள்

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கரோனா : பாதிப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்வு..

தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:

தமிழகத்தில் இன்று மட்டும் 75 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 74 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர்.

இதன் மூலமாக ஏற்கனவே தமிழகத்தில் கரோனா பாதிப்பு 234 ஆக இருந்த நிலையில், தற்போது 309 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக, டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 264 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசின் கோரிக்கையை ஏற்று, டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் 1,103 பேர் தானாக முன்வந்து தகவல் தெரிவித்தனர்.

அவர்களில் 658 பேருக்கு மாதிரிகள் நேற்று எடுக்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ளவர்களுக்கும் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. முடிவுகள் இன்னும் வரவில்லை என்று தெரிவித்தார்.

இதன் மூலமாக இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் 2 ஆம் இடத்திற்கு வந்துள்ளது. மகாராஷ்டிரம்(416 பேர்) முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.