தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு..

வெப்ப சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று மூலம் தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருநெல்வேலியில் தென் மேற்கு பருவக்காற்று மூலமாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடலோர மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலா, நடுவட்டத்தில் தலா 4 செண்டி மீட்டரும், கோவை மாவட்டம் வால்பாறை, வேலூர் மாவட்டம் மேல் ஆளத்தூரில் தலா 3 செண்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

தென் தமிழக கடற்கரை பகுதி மற்றும் மன்னார் வளைகுடாவில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வலுவான காற்று வீசவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.