தமிழக காவல்துறையில் புதிய முயற்சி: மாணவர் காவல் படை தொடக்கம்

தமிழக காவல்துறையில் முதன்முதலாக மாணவர் காவல் படை தொடங்கப்பட்டுள்ளது. இதை சென்னை காவல் ஆணையர் மற்றும் சென்னை ஆட்சியர் தொடங்கி வைத்தனர்.

குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் வேளையில் இளம் தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் நோக்கில் பள்ளிப் பருவத்திலேயே விழிப்புணர்வையும் நற்சிந்தனையையும் வளர்க்க கல்வித்துறை, காவல்துறை இணைந்து பள்ளி மாணவர்களைத் தயார் செய்யும் நிகழ்வு இன்று தொடங்கியது.

தமிழக காவல்துறை, வருவாய்த் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து மாணவர் காவல் படை (Student Police Cadet) என்ற புதிய மாணவர் படையை உருவாக்கியுள்ளனர். இதற்கான விழா சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை மாவட்ட ஆட்சியர் ஏ.சண்முகசுந்தரம், மற்றும் சென்னை மாவட்டக் கல்வி அலுவலர் (வடக்கு) வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாணவர் காவல் படையைத் தொடங்கி வைத்தனர்.

இன்று நடந்த நிகழ்ச்சியில் 138 பள்ளிகளிலிருந்து 6,072 மாணவ, மாணவியர்கள், மாணவர் காவல் படையில் உறுப்பினர்களாக இணைந்தனர்.

இப்படையில் சேரும் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு, சைபர் குற்றங்கள் விழிப்புணர்வு, சமூகத் தீமைகளுக்கு எதிராகப் பணிபுரிதல், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி பெற்ற மாணவ மாணவியர், சென்னை காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் உள்ள காவல் ஆணையரகங்களில் முதன்முறையாக சென்னை பெருநகர காவல்துறையில் மாணவர் காவல் படை தொடங்கப்பபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் சென்னை காவல் கூடுதல் ஆணையர்கள் மகேஷ்குமார் அகர்வால், ஆர்.தினகரன்,
காவல் துணை ஆணையர்கள் எஸ்.மல்லிகா, (மத்திய குற்றப்பிரிவு), ஆர்.திருநாவுக்கரசு, (நுண்ணறிவுப்பிரிவு-1),

அர்ஜுன் சரவணன் (தலைமையிடம்), விமலா (நுண்ணறிவுப்பிரிவு-2), மற்றும் காவல் அதிகாரிகள், காவலர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.