தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணை..


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 13 பேர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாகத் தலையிட்டு விசாரணை நடத்த உள்ளதால், தமிழக அரசுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கான அதிகாரிகள் குழு குறித்து ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம்

டெல்லி உயர் நீதிமன்றத்தில் தமிழக வழக்கறிஞர் ராஜ ராஜன் தாக்கல் செய்த மனுவையடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ராஜ ராஜன் தாக்கல் செய்திருந்த மனுவில், தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையால் சுகாதாரக்கேடு, சுற்றுச்சூழல் ஆபத்து இருப்பதால், அதை நிரந்தரமாக மூடக் கோரி மக்கள் கடந்த 22-ம்தேதி நடத்திய போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் இரக்கமின்றி, சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் விரைந்து செயல்பட்டு வேகமாகத் தலையிடாவிட்டால், சட்டவிரோத நடவடிக்கைகள் தொடரும். போலீஸார் மக்களைச் சுடும் சம்பவங்கள் தொடர்ந்துவிடும். போலீஸார் தங்களுக்கு எதிராக இருக்கும் ஆதாரங்களை எல்லாம் அழித்துவிடுவார்கள்.

ஆதலால், தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாகத் தலையிட்டு துப்பாக்கிச்சூடு நடந்த இடங்களைக் கள ஆய்வு நடத்த வேண்டும், அல்லது, சார்பில்லாத அமைப்பு மூலம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தார்

உத்தரவு

இந்த மனு கடந்த 25-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து தூத்துத்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளதால், அவர்களிடம் அணுகி நிவாரணம் பெறலாம். அந்த மனுவை 29-ம் தேதிக்குள் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என்று ராஜ ராஜனுக்கு நீதிபதி ராஜீவ் ஷக்தர் உத்தரவிட்டு இருந்தார்.

தமிழக வழக்கறிஞர் ராஜ ராஜன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரடியாக தங்கள் குழுமுழு மூலம் விசாரிக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து தேசியமனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:

தலைமைச்செயலாளர், டிஜிபி அறிக்கை
தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த 22ம் தேதி போராட்டத்தின் போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் போராட்டக்காரர்கள் 11 பேர்(தற்போது 13 ) கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தமிழகத்தின் தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபி ஆகியோர் 2 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்கக் கேட்டு கடந்த 24-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் விவரங்கள், காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் சிகிச்சைகள், வசதிகள் குறித்து அந்த அறிக்கையில் இடம் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தோம்.

இதற்கிடையே வழக்கறிஞர் ராஜ ராஜன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீதி உயர் நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை தெரிவித்து இருந்தது. அதில், தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்த இடத்துக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அல்லது அதன் பிரதிநிதிகள் நேரடியாகச் சென்று விசாரணை நடத்த வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம், அதில் பொதிந்துள்ள உண்மைகள், வழக்கின் சூழல் ஆகியவற்றை விசாரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

எஸ்பி, 2டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள்

அந்த அடிப்படையில் மனுதாரரின் மனுவை ஏற்று கீழ்க்கண்ட உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளோம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் உண்மை நிலவரம், அங்கு மீறப்பட்ட மனித உரிமைகள், பாதிப்புகள், கொல்லப்பட்ட 13 பேரின் உறவினர்களிடம் வாக்குமூலம், நேரில் பார்த்த சாட்சியங்கள், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் ஆகியவற்றைப் பெற மூத்த போலீஸ் எஸ்.பி.க்கு குறைவில்லாத அதிகாரத்தில் உள்ள ஒருவர் நியமிக்கப்படுவார். அவருக்குக் கீழ் 2 டிஎஸ்பிகளும், இன்ஸ்பெக்டர்களும் நியமிக்கப்பட்டு விசாரணையில் ஈடுபடுவார்கள்.

தூத்துக்குடியில் ஒரு நாள் முகாமிட்டு, எங்கள் அதிகாரிகளிடம் பொதுமக்களிடம் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து குறைகேட்பு முகாம் நடத்துவார்கள். இந்த முகாமில் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் யாவரும் சென்று தங்களின் பாதிப்புகளை தெரிவிக்கலாம்.அவை அதிகாரிகளால் பதிவு செய்யப்படும். இந்த அறிக்கைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு அடுத்த இரு வாரங்களுக்குள் அளிக்க வேண்டும்.

தமிழக அதிகாரிகள் இல்லை

இந்த விசாரணைக்குச் செல்லும் மூத்த போலீஸ் எஸ்பி., 2 டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் தமிழகத்தில் இருந்து நியமிக்கப்படமாட்டார்கள். தேசிய மனித உரிமை ஆணையத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் இந்தவிசாரணையில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையம் அமைத்து ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இதற்கிடையே தேசிய மனித உரிமைகள் ஆணையமும், தாமாக முன்வந்து, தமிழக தலைமைச்செயலாளர், போலீஸ் டிஜிபியும் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு இருக்கிறது. இந்த இரு விசாரணைகளையும் சேர்த்து, தற்போது 3-வதாக தேசிய மனித உரிமைகள் ஆணையமும் நேரடியாக விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.