உவப்பற்ற வெளி : மேனா. உலகநாதன் (கவிதை)

 

 

கூண்டின் கதவுகள் திறந்து விட்டதாக

சிறகை விரிக்கும் சிட்டுக்குருவியே

அத்தனை உவப்பானதாக இல்லை

உனக்கான வெளி

 

செல்பேசி கோபுரங்களின்

மின்காந்த அலைகள்

வளி மண்டலம் முழுமைக்கும்

வலை பின்னி வைத்திருக்கின்றன

உனைத் தடுப்பதற்காக

 

மிகச் சில மனிதர்கள்

காணாமல் போன

உன் நினைவு

வந்து தேடுகிறார்கள்தான்

மறுப்பதற்கில்லை

 

மனிதர்களின் சந்தடி

உனக்குப் பிடித்ததுதான்

வெகுதூரம் சென்ற பின்னரும்

 

கதிரறுக்கப்பட்ட வயலில்

தாளடிகளுக்கு இடையே

சிதறிக்கிடக்கும் நெல் மணிகளை

நீ கொத்திப் பறக்கும் காட்சிகள்

அவ்வப்போது வந்து போகின்றன

கனவில்

 

இதோ

கூண்டின் கதவுகளைத் தோற்கடித்து

திமிறிச் சடசடத்து வெளியேறும்

உன் சிறகுகள்

காற்றில் சிலிர்த்துதறி வரைந்த கோலம்

மாயப் பாயென மிதந்து வருகிறது

எனைச் சுமந்து செல்ல

 

வெளியெங்கும் உதிர்ந்து மிதந்த

எனது சிறகுகள் மீதேறி

பயணிக்கத் தொடங்கினேன்

 

பேரண்டச் சிறையின் சுவர்களில் மோதி

எதிரொலித்துக் கொண்டிருந்த

விடுதலைக்கான கூக்குரல் மட்டும்

அடங்கவே இல்லை

 

Uvapatra Veli : Mena Ulaganathan’s Poem