ஸ்டாலின் வெற்றி மேல் வெற்றி குவித்து தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்க வேண்டும்: வைகோ வாழ்த்து..


மு.க.ஸ்டாலின் வெற்றி மேல் வெற்றி குவித்து, வரும் காலத்தில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பினையும் ஏற்று பல்லாண்டு வாழ வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “உலக வரலாற்றில் எங்கும் காண முடியாத வகையில் திமுகவுக்கு அரை நூற்றாண்டு காலம் தலைமை வகித்து வழிநடத்திய கருணாநிதியின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகத்தை உலுக்கியது. திமுக தொண்டர்களுக்குத் தீராத் துன்பத்தை அளித்தது.

கருணாநிதியின் தொண்டு தொடரவும், மக்கள் பணியிலும் திமுகவுக்கு காவல் அரணாக இனம், மொழி, நற்றமிழ் நாடு காக்கும் சீரிய கடமைகளை நிறைவேற்றவும், திமுகவின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வளரும் பயிர் முளையிலே என்ற முதுமொழிக்கு ஒப்ப, இளம் வயதிலேயே கோபாலபுரத்தில் இளைஞர் திமுக, என்னும் சார்பு அமைப்பைத் தொடங்கி நடத்தி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முன்னணியினரை அழைத்துக் கூட்டங்கள் நடத்தி, திமுகவுக்கு வலுசேர்த்த இளைஞர்தான் மு.க.ஸ்டாலின். 1975 இல் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, திருமணம் ஆன ஐந்தாவது மாதத்தில் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கொட்டடியில் அடைக்கப்பட்டார். சென்னை சிறையில் காவலர்களின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகிய ஸ்டாலினைக் காப்பாற்ற முயன்ற முன்னாள் மேயர் சிட்டிபாபு, காவல்துறை தாக்குதலால் உயிர் இழக்கும் நிலைமை ஏற்பட்டது. அந்த இளம் வயதில் சிறை சித்ரவதைகளை தாங்கிக் கொண்டதால்தான் பின்னாளில் திமுகவுக்கு வலிய படைக்கலனாக, இளைஞர்களின் ஈட்டி முனையாக ஸ்டாலின் வார்ப்பிக்கப்பட்டார்.

1980 ஜூலை 20 இல் மதுரை மாநகர் ஜான்சிராணி பூங்காவில் திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்டபோது, அதன் அமைப்பாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் திமுக இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பினை ஏற்று, இளைஞர் படையை திறம்பட வழிநடத்தி கழகப் பாசறையின் தளபதியாக உயர்ந்தார்.

திமுக என்னும் ஆலமரத்துக்கு விழுதாக இருந்து தாங்கும் வகையில் கழக இளைஞர் அணியை வலிமை உள்ளதாக்கிட நாடெங்கும் அயராமல் சுற்றுப் பயணம் செய்து, அமைப்புப் பணிகளை முடுக்கிவிட்டார்.

1989 இல் தேசிய முன்னணி தொடங்கப்பட்டபோது, வெள்ளைச் சீருடை அணிந்த இளைஞர்களின் அணி வகுப்பிற்கு தலைமை தாங்கி, ஸ்டாலின் நடை போட்டது இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த வி.பி.சிங் உள்ளிட்ட தலைவர்கள் திமுகவின் இளைஞர் சக்தியைக் கண்டு வியந்து பாராட்டினார்கள்.

1989 ஆம் ஆண்டு முதன் முதலில் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்த ஸ்டாலின், அதே தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்று மக்கள் பணியாற்றினார்.

1996 இல் சென்னை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றார். அதனால்தான் 2001 ஆம் ஆண்டிலும் இரண்டாவது முறையாக சென்னை மேயராகும் பெருமை அவருக்குக் கிடைத்தது.

கருணாநிதியால் ஆட்சிப் பொறுப்புக்குப் பயிற்றுவிக்கப்பட்டு, உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், துணை முதல்வர் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்று, சிறப்பாக கடமையாற்றினார். தற்போதும் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக ஜனநாயகக் கடமைகளை சீரிய முறையில் ஆற்றி வரும் மு.க.ஸ்டாலினை மக்கள் பாராட்டுகிறார்கள்.

திமுகவின் இளைஞர் அணி செயலாளர், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர் என்று தனது கடும் உழைப்பால், தியாகத்தால் படிப்படியாக உயர்ந்த ஸ்டாலின், கருணாநிதி உடல்நலம் குன்றியிருந்த நிலையில் செயல் தலைவராக பொறுப்பு ஏற்று, கழகத்திற்கு அரும்பணி ஆற்றினார்.

ஸ்டாலின் சோதனைகளை எல்லாம் கடந்து தமிழக அரசியலில் திமுக ஏறுநடை போடுவதற்கு நாடெங்கும் சுற்றிச் சுழன்று பணியாற்றியதும், குமரி முனையில் தொடங்கி சென்னை வரை நமக்கு நாமே பயணத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்துக் கழகத்திற்கு வலிவும் பொலிவும் சேர்த்தார்.

திராவிட இயக்கம் அறைகூவல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க தமிழ்நாட்டின் நலன் காக்கவும், மாபெரும் இயக்கமாம் திமுகவின் தலைவர் பொறுப்பை ஏற்கும் மு.க.ஸ்டாலின் வெற்றி மேல் வெற்றி குவித்து, வரும் காலத்தில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பினையும் ஏற்று பல்லாண்டு வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.

கல்லூரி மாணவர் பருவத்தில் அண்ணாவின் அன்பைப் பெற்றவராக, கருணாநிதிக்கு பக்க பலமாக தக்க துணையாக இருந்து கழகத்திற்கு பெருமை சேர்த்தவர் என்னருமை நண்பர் துரைமுருகன். பல ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றி அனுபவம் பெற்றவர். அமைச்சர் பொறுப்பை ஏற்று, கருணாநிதியின் கண் அசைவுக்கு ஏற்ப பணியாற்றி, அமைச்சர் பதவிக்கு பெருமை சேர்த்தார். திமுகவின் பொருளாளர் பொறுப்பை ஏற்கும் நண்பர் துரைமுருகனுக்கும் வாழ்த்துகள்” என வைகோ தெரிவித்துள்ளார்.