படித்து என்ன செய்ய? : பேராசிரியர் டோமினிக்..

ஆந்திராவில் ஒரு தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள். இவர்கள் மடனப்பள்ளி என்ற ஊரில் வாழ்ந்து வந்தனர். இந்த ஊர் குடியாத்ததில் இருந்து வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

26/01/2021-ல் அந்த தம்பதியினர் படித்துக் கொண்டிருக்கும் பெண் குழந்தைகளை வைத்துப் நிர்வாண பூஜை நடத்தி இருக்கிறனர். பின் இந்த இரண்டு குழந்தைகளையும் கடவுளுக்குப் பலி கொடுத்து இருக்கிறனர்.

தகவல் கசியக் காவல் துறை பலியுண்ட குழந்தைகளைப் பார்த்து அதிர்ந்துள்ளனர். உடனே பெற்றோர்களைக் கைது செய்துள்ளனர். குழந்தைகளைப் பலி கொடுத்த பெற்றோர்கள் காவல் துறையினரிடம் ஒரு இரவு கால அவகாசம் கேட்டு உள்ளனர். பூஜையைக் காலை வரை தொடர்ந்தால் பலி கொடுத்த குழந்தைகள் உயிருடன் வந்து விடுவார்கள் எனக் கெஞ்சியுள்ளனர்.

பெற்றோர் படிப்பறிவு இல்லாத பாமர மக்கள் இல்லை. குடும்பத் தலைவர் வேதியியலில் முதுகலைப் பட்டம் (MSc) பெற்றார். பின் ஆராய்ச்சி மேற்படிப்பு முடித்து M.Phil மற்றும் PhD பட்டங்களையும் வாங்கியவர். அதாவது இவர் டாக்டர் பட்டம் பெற்றவர். இதற்கு மேல் படிப்பு இல்லை. பொதுவாக இந்த பட்டம் பெற்றவர்கள் அந்தத் துறையில் ஆராய்ச்சி செய்து புதிதாக எதாவது கண்டுபிடித்து துறையின் வளர்ச்சிக்கு உதவுவது வழக்கம். அதற்கு மேலாக இவர் ஒரு கல்லூரியில் இணைப் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் பெயர் டாக்டர் புருஷோத்தமன் MSc., M.Phil., PhD. கல்லூரியில் இதற்கு மேல் பதவி உயர்வு கிடையாது. அதாவது கல்லூரியில் பதவி உச்சத்தில் இருக்கிறார்.

குடும்பத் தலைவி கணிதத்தில் முதுகலைப் பட்டம் (MSc) பெற்றார். அதுவும் தங்கப்பதக்கம் வென்று பட்டம் பெற்றுள்ளார். இவர் ஒரு பள்ளிக்கூடத்தை நடத்திவருகின்றனர். இவர் பெயர் பத்மஜா, M.Sc (Gold medalist) .

அதாவது இருவரும் மெத்தப் படித்தவர்கள். கல்வியின் அடிப்படையில் அவர்களை அறிவுஜீவிகள் எனலாம்.

இவர்கள் எப்படி வளர்ந்தார்களோ?

என்னத்த படித்தார்களோ?

படித்தவற்றை எப்படி புரிந்து கொண்டார்களோ?

இல்லை.

மதிப்பெண்களுக்காக மனப்பாடம் செய்து தேர்ச்சி அடைந்தார்களா?

வாழத் தேவையான அறிவு எள்ளளவும் இல்லாமல் எப்படி வாழ்ந்து வந்தார்களோ?

அதிக ஆசை மூளையை மழுங்கச் செய்ததா?

என்ன வேண்டுதல் தெரியுமா?

என்ன நடந்தது எனக் கேள்விகள் பல எனக்குள் எழுகிறது.

இறந்த உடலுக்கு உயிர் கொடுக்க முடியும் என ஒரு சாமியார் சொன்னால் இந்த படித்த முட்டாள்கள் நம்பலாமா?

குழந்தைகளைப் பலி கொடுக்க துணியலாமா?

படித்து என்ன செய்ய?

இந்த பலி பூஜையை நடத்தினால் பத்மஜாவுக்கு இருந்த வலிப்பு நோய் குணமாகுமாம்.

மருத்துவரை நம்பவில்லை. சாமியாரை நம்புகின்றனர்.

கடந்த 13 வருடங்களாக முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களை நான் வழிநடத்தி வருகிறேன். பல மாணவர்களின் மனோநிலை மற்றும் நம்பிக்கைகளை நான் சோதனை செய்தும் உள்ளேன்.

இதன் மூலம் நான் அறிந்தவற்றைக் கூறுகிறேன்.

சில துறையில் படித்து அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்வடைந்தாலும் அதே துறை சார்ந்த மூடநம்பிக்கைகளை இந்த மாணவர்களால் விட முடியவில்லை.

உதாரணத்திற்குச் சூரிய கிரகணம் அன்று பூமியின் ஈர்ப்பு விசை மிகவும் அதிகமாவதாக ஒரு மூடநம்பிக்கை உள்ளது. இது இயற்பியல் துறை சார்ந்த சங்கதி. கிரகணம் அன்று சில மில்லி கிராம் அளவு கூட பூமியின் ஈர்ப்பு சக்தியில் வித்தியாசம் கிடையாது. அவர் அதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இயற்பியல் படித்தவர்களும் உலக்கையை நிற்கவைப்பது மற்றும் உலகை மேல் தேங்காயை நிற்கவைப்பது என முயன்று வருவதைக் கண்டுள்ளேன்.

பல்கலைக்கழக மற்றும் கல்லூரி பாடத்தில் படித்ததை விடச் சமுதாயத்தில் பேச்சுவழக்கில் உலாவும் பல மூட நம்பிக்கைகளை மாணவர்களின் மனதிலிருந்து அகற்றுவது அவ்வளவு எளிது இல்லை. இதனைப் பல முறை உணர்ந்துள்ளேன்.

பல மாணவர்கள் படிப்பது வேலை வாங்க மட்டுமே என ஆழமாக நம்புகின்றனர். வாழ்க்கையை நடத்தப் படிப்பு உதவாது என வாதிடும் மாணவர்களும் உள்ளனர்!!

இறந்த உடலுக்கு உயிர் கொண்டு வரமுடியாது. அதற்கான தொழில்நுட்பம் இதுவரை இல்லை என அறிவு மேற்கண்ட தம்பதியினருக்கு இருந்திருந்தால் குழந்தைகளைப் பலி கொடுத்திருக்கமாட்டார்கள். இவர்கள் படித்ததைத் துளியும் நம்பவில்லை என அரத்தமாகிறது.

இப்படிப் பட்ட படிப்பு தேவையா?

இப்படிப் படித்தவர்களால் நாட்டுக்கு என்ன லாபம்?

இத்தனைக்கும் இவர்கள் போராசிரியர்கள்.. என்னத்த சொல்ல.

இவர்கள் எத்தனை‌ மாணவர்களை உதவாக்கரையாக மாற்றினார்களோ?

இன்னும் எத்தனை கொடுமைகளை பார்க்க வேண்டியுள்ளதோ?

இவர்களுக்குப் பட்டங்களை வாரி வழங்கிய பல்கலைக்கழகம் தலைகுனிய வேண்டும். மற்றும் வெட்கப்பட வேண்டும்.

உலக அரங்கில் நம் நாட்டிற்கு இது பெருத்த அவமானம்.

படிப்புக்கும் பொது அறிவுக்கும் சம்மந்தம் இல்லை என இது நன்கு விளக்குகிறது.

படிப்பது வேலை வாங்க மட்டும் இல்லை..

கற்றதை வைத்து நல்ல வாழ்க்கை வாழ்வும் தான்.

சமுதாயம் கல்வியால் முன்னேற வேண்டும். முட நம்பிக்கைகள் என்ற இருள் கல்வி என்ற விளக்கால் காணாமல் போக வேண்டும்.

கல்வியில் முற்போக்கான மாற்றங்கள் தேவை என ஆழமாக நம்புகிறேன்.
இதற்காக நம் கல்வித் துறை அதிகம் உழைக்க வேண்டும். கல்லூரியில் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஊடகத் துறை கட்டாயம் துவங்க வேண்டும். இந்த ஊடகத் துறைகள் பல்வேறு துறைகளை இணைத்து மூட நம்பிக்கைகளை ஒழிக்கும் சேவையைத் திறம்படச் செய்ய வேண்டும் என எண்ணுகிறேன்.