முக்கிய செய்திகள்

எடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா ? கவிழுமா ?: இராஜா சண்முகசுந்தரம்

 

மே 23 என்ற அந்த ஒரு தேதிக்காக ஒட்டுமொத்த தமிழகமே காத்துக்கிடக்கிறது.

இராஜா சண்முகசுந்தரம்

டீ கடையில் இருந்து டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் வரை அன்று என்ன நடக்கும் என்பதை பற்றிதான் ஒரே பேச்சாக இருக்கிறது.

எடப்பாடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று மு.க.ஸ்டாலினும், தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23ஆம் நாளன்று மதியமெல்லாம் மு.க.ஸ்டாலினால் வாயை கூட திறக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமியும் பேசி வருகிறார்கள்.

ஆட்சியை தக்க வைக்க அதிமுக எத்தனை தொகுதிகள் ஜெயிக்க வேண்டும் ? ஆட்சி அமைக்க திமுகவுக்கு எவ்வளவு தொகுதிகள் வேண்டும் எனறெல்லாம் கணக்கபோட்டு பார்த்தப்படி இருக்கிறார்கள் ஓட்டுபோட்டு வீட்டில் இருக்கும் மக்கள்.

எடப்பாடி பழனிசாமியோ தன் ஆட்சியை நிலைநாட்ட, வெண்ணிலா கபடி குழு சூரிபோல “எல்லா கோட்டையும் அழிங்க… நான் மொதல்ல இருந்து சாப்டுறேன் ” என எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் உத்தியை மீண்டும் கையிலெடுத்திருக்கிறார்.

இப்போதைய நிலையில் சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் சபாநாயகர் தனபாலை தவிர்த்து 113 என்ற எண்ணிக்கையில் இருக்கிறது.

இந்த 113 என்பது சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோரையும், இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு ஆகிய ஆறு பேரும் அடக்கம்.

இந்த ஆறு பேரில் தனியரசு மட்டுமே அதிமுக அரசுக்கு இப்போது ஆதரவாக இருக்கிறார்.

22 தொகுதி இடைதேர்தலுக்கு பின்னர் பேரவையில் பெரும்பான்மையை எடப்பாடி பழனிசாமி அரசு நிரூபிக்க வேண்டுமானால் 118 எம்.எல்.ஏக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அதற்கு, கட்டாயம் அதிமுக 10 தொகுதிகளில் வென்றே ஆக வேண்டும் என்ற நிலை இருக்கிறது.

இந்த ஆட்சியை மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு அனுப்ப வேண்டுமானல் திமுக 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

அப்படி 21 தொகுதிகளில் வெற்றி பெற்றால், இப்போது திமுகவிற்கு பேரவையில் இருக்கிற கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 97 எம்.எல்.ஏக்கள், வெல்ல வேண்டிய 21 எம் எல்.ஏக்கள் என இரண்டையும் கூட்டினால் 118 என்ற எண்ணிக்கை வரும்.

கூடுதலாக அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 5 பேர், சுயேட்சை எம்.எல்.ஏவான டிடிவி தினகரன் என இந்த 6 பேரும் ஆட்சிக்கு எதிராக வாக்களிக்கும் பட்சத்தில் ஆட்சி கவிழ்வது உறுதி ஆகிவிடும்.

ஆனால், இதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காகதான் தகுதி நீக்கம் என்ற தன் பிரம்மாஸ்திரத்தை மீண்டும் கையில் எடுத்து, சபாநாயகர் மூலம் 3 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய அடுத்த அரைமணி நேரத்தில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்டப்பேரவை செயலரிடம் கொடுத்து செக் வைத்திருக்கிறது திமுக.

நோட்டீஸ் வழங்கப்பட்ட இந்த மூன்று எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றத்தை நாட, இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது , எதன் அடிப்படையில் நோட்டீஸ் வழங்கப்பட்டது என்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் விட்ட சபாநாயர் தனபாலுக்கே நோட்டீஸ் விட்டுருக்கிறது உச்சநீதிமன்றம்.

நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கும் நிலையில், இந்த வழக்கின் அடுத்த விசாரணை தேர்தல் முடிவுக்கு பிறகே நடைபெறும் என கூறப்படுகிறது.

அப்படி இருக்கையில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி இந்த மூன்று எம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் தனபால் தகுநீக்கம் செய்ய முடியாது என தினகரன் தரப்பும், திமுகவும் மூச்சுவிடும்போது, நீதிமன்றம் சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிடவோ அவரது நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவோ முடியாது என குண்டை தூக்கிப்போட்டிருக்கிறார் வானளாவிய அதிகாரம் என்ற சொல்லுக்கு பெயர்போன முன்னாள் அதிமுக சபாநாயகர் பி.எச்.பாண்டியன்.

ஆனால், முன்னாள் திமுக சபாநாயகர் ஆவுடையப்பனோ நீதி பரிபாலனத்தை சபாநாயகர் மீறும்பட்சத்தில், உச்சப்பட்ச அதிகாரம் கொண்ட உச்சநீதிமன்றம், சபாநாயகரின் நடவடிக்கைகளில் தலையிட்டு, தடைவிதிக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

எது எப்படியோ, வரும் 23ஆம் தேதியும், அதற்கு முன்னரும் தமிழகத்தில் நடைபெறபோகும் அரசியல் ஆட்டங்கள் என்னென்ன என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் பார்க்கத்தான் போகிறார்கள் !

– இராஜா சண்முகசுந்தரம்