இந்திய எல்லையை மிதித்தார் அபிநந்தன்: வாகா எல்லையில் இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன், வாகா எல்லையில் இந்திய விமானப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்தக் காட்சியைக் காண, தேசிய கொடிகளுடன் வாகா எல்லையில் பொதுமக்களும் ஏராளமாக திரண்டிருந்தனர். அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட போது, ஆட்டபாட்டத்துடன் அவர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக இன்று பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. அதில் ஒரு விமானம் தவிர மற்ற இரண்டு விமானங்களும் தப்பி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தின் போது இந்திய விமானி அபிநந்தன் என்பவர் பாகிஸ்தான் கையில் சிக்கியுள்ளார். அவர் பத்திரமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் நேற்று பாகிஸ்தான் அரசால் பகிரப்பட்டது.

இதனையடுத்து அபிநந்தன் ஓட்டிய விமானம் என்ன ஆனது, அவர் எப்படி பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார் போன்ற விவரங்களைப் பாகிஸ்தானின் டான் என்ற நாளேடு வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் எல்லைக்குள் வந்த இரண்டு விமானங்கள் சுடப்பட்டன. ஒன்று எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து இந்திய எல்லைக்குள் விழுந்தது. மற்றொரு விமானம் வெடித்து, அதிலிருந்து புகை வர ஆரம்பித்தது. பாராசூட் மூலம் பத்திரமாகத் தரையிறங்கினார் அதிலிருந்த விமானி அபிநந்தன். துப்பாக்கியுடன் இருந்த அவர், அங்கிருந்த இளைஞர்களிடம் இது இந்தியாவா, பாகிஸ்தானா என்று கேட்டுள்ளார். அவர்கள் வேண்டுமென்றே இது இந்தியா என்று கூறியுள்ளனர். உடனே இந்தியாவை ஆதரித்து கோஷமிட்டார் அபிநந்தன்.

அந்த கோஷங்களைக் கேட்ட இளைஞர்கள் கற்களை கொண்டு அபிநந்தனைத் தாக்க ஆரம்பித்தனர். தன் துப்பாக்கியால் வானில் சுட்டவாறே ஓட ஆரம்பித்தார் அபிநந்தன். அப்போது அருகில் இருந்த சிறிய குளத்துக்குள் குதித்தார். தன்னிடமிருந்த இந்திய ஆவணங்களையும் வரைபடங்களையும் நீருக்குள் மூழ்கடித்து அழிக்க முயற்சித்துள்ளார். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் ராணுவம் அவரை அவர்களிடம் இருந்து மீட்டது.

இந்நிலையில், இந்தியாவின் வேண்டுகோளையும், சர்வதேச நாடுகளின் அழுத்ததையும் தொடர்ந்து விமானப்படை வீரர் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்தார்.

அதன்படி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அவரை ஒப்படைப்பதாக கூறிய பாகிஸ்தான் 6 மணி நேர தாமத்திற்கு பின்னர் ஒப்படைத்தது.

இந்திய போர் விமானி அபிநந்தனை  சர்வதேச நிர்பந்தம் காரணமாக இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் வியாழக்கிழமை முதலே தொடக்கம் பெற்றன. அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான ஆவணங்களை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்கத்திடம் அளித்தது. இதனையடுத்து அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கிய பாகிஸ்தான் அரசு, ராவல்பிண்டியில் வைக்கப்பட்டிருந்த அபிநந்தனை சர்வதேச செஞ்சிலுவை சங்க அதிகாரிகளிடம் காட்டியது. ஜெனீவா ஒப்பந்தப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து அவரை ராவல் பிண்டியில் இருந்து லாகூருக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.

அங்கிருந்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மற்றும் செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் ராணுவ வாகனங்கள் அணிவகுக்க பாகிஸ்தான் – இந்தியா எல்லையில் உள்ள வாகாவுக்கு அழைத்து வந்தனர்.

மாலை 4 மணி அளவில் அபிநந்தனை வாகாவில் ஒப்படைப்பதாக கூறி இருந்த பாகிஸ்தான், பின்னர் ஒப்படைக்கும் நேரத்தை மாற்றியது. லாகூரில் இருந்து அவரை வாகாவிற்கு அழைத்து வராமல், வாகாவில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள படாபூர் முகாமில் தங்க வைத்தனர். அபிநந்தனை ஒப்படைக்கும் நேரத்தை இரு முறை மாற்றிய பாகிஸ்தான் தரப்பு இரவு ஒன்பது மணிக்கு மேல் வாகாவுக்கு அழைத்து வந்தனர். அவருடன் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் வந்தனர்.

எல்லையில் அபிநந்தனை வரவேற்க காத்திருந்த இந்திய தரப்பிடம் அதற்கான ஆவணங்களை  பாகிஸ்தான் தரப்பு முதலில் அளித்தது. அந்த ஆவணங்களை சரிபார்த்த இந்திய அதிகாரிகள் அதில் கையெழுத்திட்டு கொடுத்தனர்.

இதனை பெற்றுக் கொண்ட பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அபிநந்தனை இந்திய எல்லையை நோக்கி அனுப்பி வைத்தனர். அதுவரை ராணுவ கம்பீரத்துடன் காத்திருந்த அபிநந்தன் வீர நடை போட்டு தாயக மண்ணை நோக்கி நடந்தார்.

பாகிஸ்தானில் பிடிபட்ட போது விமானிக்கு உரிய போர் உடை அணிந்திருந்த அவர், தாயகத்திற்கு வீராதி வீரான திரும்பி வரும் போது கோட், சூட் அணிந்திருந்தார். இடது கண்ணில் காயம் பட்டிருந்தாலும் கூட கம்பீரம் குறையாத முகத்துடன் இந்திய மண்ணில் மீண்டும் கால் வைத்தார்.

அவரை இந்திய விமானப்படை ஏர் வைஸ் மார்ஷல்கள் பிரபாகரன், கபூர் ஆகியோர் அரவணைத்து தாய் மண்ணுக்கு அழைத்து வந்தனர். சொந்த நாட்டின் வீர மண்ணுக்கு அவர் திரும்பி வருவதை எதிர்பார்த்து தாயகமே காத்திருந்த அந்த தருணத்தை இந்திய ராணுவம் முறைப்படி நிறைவேற்றியது.

வாகா எல்லையில் இருந்து கார் மூலமாக அவர் வாகன அணிவகுப்புடன் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு வழி நெடுகிலும் பல மணி நேரமாக காத்திருந்த மக்கள் வரவேற்பு அளித்தனர்.

இதனிடையே, நேற்றிரவு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அபிநந்தனை விமானப்படையினர் வரவேற்று காரில் அமிர்தசரஸ் அழைத்துச் சென்றனர். அங்கிருந்து விமானம் மூலம் உடனடியாக அவர் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். டெல்லியில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ள அபிநந்தனுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டு, சிகிச்சையும் அளிக்கப்பட்டது.