தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்


தெற்கு அந்தமானில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த சில நாட்களில் தமிழகம் நோக்கி வர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் நல்ல மழை பெய்ய கூடிய சூழல் உருவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. வெப்ப சலனத்தால் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் சென்னை நகரில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகரில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்துறைபூண்டியில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நாகப்பட்டினத்தில் 7 செ.மீ மழை பதிவானது. இரணியல், செங்குன்றம், எண்ணூர், மாமல்லபுரத்தில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.