முக்கிய செய்திகள்

கோவை சுந்தராபுரத்தில் கார் ஆட்டோ மீது மோதி விபத்து : 7 பேர் உயிரிழப்பு


கோவை சுந்தராபுரத்தில் இன்று காலை சொகுசு கார் ஆட்டோ மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

கோவையில் இருந்து இன்று காலை 10.30 மணியளவில் சுந்தராபுரம் நோக்கி ஒரு சொகுசு கார் வேகமாக சென்றது. அந்த கார் சுந்தராபுரம் ஐயர் பஸ்நிறுத்தம் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மற்றும் அருகில் இருந்த ஆட்டோ மீது மோதியது.

இதில் கண்இமைக்கும் நேரத்தில் சம்பவ இடத்திலேயே 4 ஆண்கள், 3 பெண்கள் உள்பட 7 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து நடந்தவுடன் காரில் வந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். சம்பவம் பற்றி தெரியவந்ததும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான 7 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியானவர்களின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தின் காரணமாக அந்த பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.