முக்கிய செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையத்தை முழுவீச்சில் எதிர்க்க கர்நாடகா முடிவு

 

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதுடன், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி போராடுவதெனவும் கர்நாடாகாவில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2ம் தேதி  நடைபெற உள்ள நிலையில், அதுகுறித்தது ஆலோசிப்பதற்காக கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

பெங்களூரு விதான் சவுதாவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா இதில் கலந்துகொள்ளவில்லை. இந்தக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்ப்பதென முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்கீம் என்ற சொல்லுக்கு விளக்கம் கேட்டு மேல்முறையீடு செய்ய இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்கவும், மாற்றவும் நாடாளுமன்றத்திற்கு உரிமை இருப்பதால், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயே கர்நாடக எம்.பிக்கள் குரல் எழுப்பவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் கர்நாடக பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் தரப்பு வாதத்தை வலியுறுத்துவது எனவும் இந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.