காவிரிக்காக போராடிய மாணவர்கள் மீது தடியடி : கலவரமான திருச்சி..


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சி நீதிமன்றம் அருகே மாணவர்கள் திடீரென போராட்டம் நடத்தினர். இவர்களை தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள சாலையில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் திடீரென அப்பகுதியில் கூடியதுடன், சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் தொடங்கினர். நிமிடத்துக்கு நிமிடம் மாணவர்கள், பொதுமக்கள் கூட்ட எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார், மாணவர்களை கலைந்துச் செல்ல முயன்றன

மேலும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த இடம் என்பதால் கூடுதல் பதற்றம் காணப்பட்டது. இதனையடுத்து போராட்டம் நடக்கும் இடத்தை போலீஸார் சுற்றி வளைத்துடன் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. பல மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னதாக திருச்சி பட்டாபிராமன் தெருவில் அரசு பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதேபோல் திருச்சி அரசு மருத்துவமனை அருகே கர்நாடக பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் திருச்சி நீதிமன்ற வளாகம் கலவர இடமாக மாறியது.