வெளியானது “தி ஆக்சிடண்டல் பிரைம் மினிஸ்டர்” ட்ரைலர்: சர்ச்சையும் வெடித்தது

“தி ஆக்சிடண்டன் பிரைம் மினிஸ்டர்” என்ற திரைப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கி உள்ளனர்.

தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது அவரிடம் ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த சஞ்சய்யா பாரு எழுதிய தி ஆக்சிடெண்டல் பிரதமர் என்ற புத்தகத்தைத் தழுவி இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகர் அனுபம் கெர் (இவர் பாஜகவைச் சேர்ந்தவர்) மன்மோகன் சிங் காக நடித்துள்ளார்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது நிகழ்ந்த சர்ச்சைக்குரிய சம்பவங்கள் குறித்து இந்தத் திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், மகாராஷ்ட்ர மாநில காங்கிரஸ் கட்சியினர் இந்தத் திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளருக்கு மகாராஷ்ட்ரா இளைஞர் காங்கிரஸ் சார்பில் எழுதியுள்ள கடிதத்தில், தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்தை முதலில் தங்களுக்கு திரையிட்டுக் காண்பிக்க வேண்டும் என்றும், அதில் உண்மைக்கு மாறான காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் அவற்றை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர். இல்லாவிட்டால் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள படத்தில் மன்மோகன்சிங்காக நடித்துள்ள அனுபம் கெர், வரலாற்றை யாரும் மாற்றிச் சொல்ல முடியாது எனவும், காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவிப்பதன் மூலம் படத்திற்கு விளம்பரம் தேடித் தருவதாகவும் கூறியுள்ளார்.

தி ஆச்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் படம் குறித்த சர்ச்சை வலுத்து வரும் நிலையில், ஜனவரி 11 ஆம் தேதி அத்திரைப் படம் வெளியாக உள்ளது.

இதனிடையே, காங்கிரஸ் தொடங்கப்பட்ட தின விழாவுக்கு வருகை தந்த மன்மோகன் சிங், தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்பட சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.