தினகரன் விழாவுக்காக பிரம்மாண்ட பேனர்கள்: டிராபிக் ராமசாமி தர்ணா போராட்டம்..


மதுரை மாவட்டம், மேலூர் அருகே டிடிவி. தினகரன் தொடங்கும் புதிய அமைப்பின் பெயர், கொடி அறிமுக விழாவுக்காக வழிநெடுகிலும் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி நடுரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினகரனின் புதிய அமைப்பு தொடக்க விழாவுக்காக மேலூர் – அழகர்கோவில் சாலையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடை, பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மேலூர் மற்றும் நெடுஞ்சாலைகளிலும் வழிநெடுகிலும் பேனர், தோரணங்களை தினகரன் ஆதரவாளர்கள் வைத்துள்ளனர். மதுரை மீனாட்சிமிஷன் மருத்துவமனை அருகே மெயின் ரோட்டில் டிடிவி. தினகரனை வரவேற்கும் வகையில் பிரம்மாண்ட பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மாலையில் திடீரென மதுரை வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மீனாட்சிமிஷன் மருத்துவமனை அருகே வைக்கப்பட்டுள்ள பேனர் மற்றும் சாலை நெடுகிலும் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றக்கோரி போலீஸாரிடம் வலியுறுத்தினார். அவர் திடீரென சட்டையைக் கழற்றிவிட்டு சாலையின் நடுவே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம்

இதுபற்றி தகவல் அறிந்த அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் ராமலிங்கம் உள்ளிட்ட போலீஸார் அங்கு வந்து டிராபிக் ராமசாமியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். நடிகை சிஆர்.சரஸ்வதி உள்ளிட்ட தினகரனின் ஆதரவாளர்களும் அங்கு வந்து டிராபிக் ராமசாமியிடம் பேனர்களை அகற்ற முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின், பேனர்கள் அகற்றப்படும் என போலீஸார் உறுதி அளித்ததால் டிராபிக் ராமசாமி போராட்டத்தை கைவிட்டார். இதையடுத்து, அங்கிருந்த சில பேனர்கள் மட்டும் அகற்றப்பட்டன. இதனால், தினகரன் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து டிராபிக் ராமசாமியிடம் கேட்டபோது, ‘‘ மதுரையில் விதிமீறல் ஆட்டோக்கள் வழக்கு தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்குச் சென்றுவிட்டு, திரும்பியபோது, நீதிமன்றம் எதிரிலும், அதே சாலையில் பல்வேறு இடங்களிலும் விதிகளை மீறி தினகரன் ஆதரவாளர்களின் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை அகற்ற வலியுறுத்தி மீனாட்சிமிஷன் மருத்துவமனை அருகில் போராட்டம் நடத்தினேன். போலீஸார், தினகரனின் ஆதரவாளர்கள் என்னைத் தடுத்தனர். பின்னர் சில பேனர்களை மட்டும் அகற்றினர். இருப்பினும், இது தொடர்பாக இன்று (மார்ச் 15) நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன் என்றார்.