பேராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்: முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்..

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொடக்கப்பள்ளியை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்

உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று இரவுக்குள் பணியில் சேராவிட்டால், அது காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் என்று கல்வித்துறை எச்சரித்துள்ளது.

தமிழக அரசின் எச்சரிக்கைகை்கு கட்டுப்பட்டு பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியில் சேர்ந்து விட்டதாக உயர்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக இன்று மாலை முதல்வர் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், கல்வித்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், விரைவில் முதல்வர் தரப்பிலிருந்து விரிவான அறிக்கை வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக, ஜாக்டோ ஜியோ அமைப்புக்கு ஆதரவாக தலைமை செயலக ஊழியர்களும் நாளை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

மேலும், ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாத நிலையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்தனர்