முக்கிய செய்திகள்

கேரளாவில் ஆட்டத்தை ஆரம்பித்தது மத்திய பாஜக அரசு: மாநில அரசிடம் அவசர அறிக்கை கேட்டார் ஆளுநர் சதாசிவம்

சபரிமலை விவகாரத்தில் மாநிலத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநர் சதாசிவம் அவசர அறிக்கை கேட்டிருக்கிறார். சபரி மலை விவகாரத்தை பயன்படுத்தி, மத்திய பாஜக அரசு,  மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் அரசுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கி இருப்பதன் அறிகுறியாகவே இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து மற்றும் மலப்புரத்தை சேர்ந்த கனக துர்கா (50 வயதுக்குட்பட்ட) என்ற 2 பெண்களும் நேற்று அதிகாலை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்தினர்.

இதையடுத்து சபரிமலை தந்திரி ஆலோசனை நடத்தி, சாந்தி பரிகாரம் செய்வதற்காக ஐயப்பன் கோயில் நடை மூடப்பட்டது. பின்னர் சுமார் ஒருமணி நேரம் கழித்து பக்தர்கள் தரிசனத்திற்காக கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.

இந்நிலையில். சபரி மலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, கேரளாவில் இந்து அமைப்புகளும், பாஜகவும் போராட்டத்தில் குதித்தன. புதன் கிழமை பல இடங்களில் வன்முறை வெடித்தது. வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது, பேருந்துகள், ஆட்டோக்களைத் தடுத்து நிறுத்தி இந்து அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர். வாகனங்களுக்கு தீவைத்தனர். திட்டமிட்டு மாநிலம் முழுவதும் வன்முறையை பரப்பி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியும் சபரி மலை விவகாரத்தில் மாநில மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிராக கைகோர்த்துள்ளது.

இதனிடையே, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பினரயி விஜயன் கூறியதாவது:

கனகதுர்கா, பிந்து ஆகிய இருவருக்கும் சபரிமலை செல்ல பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இருவரும் வான்வழியாக அழைத்துச்  செல்லப்படவில்லை. சாதாரண பக்தர்களைப் போலவே சந்நிதானம் சென்றார்கள். பக்தர்களே முன்வந்து பெண்கள் இருவருக்கும் உதவி செய்தனர். எதிர்ப்பு தெரிவித்து எந்த ஆர்ப்பாட்டமும் நடைபெறவில்லை. ஆனால் தற்போது வெளிப்படும் எதிர்ப்புகள் சங் பரிவார் அமைப்புகளால் திட்டமிடப்பட்டு, வன்முறையைத் தூண்டும் நோக்கம் கொண்டவை.

இத்தகைய தீய நோக்கங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை.  உச்சநீதிமன்ற தீர்ப்போடு உடன்படவில்லை எனில், சபரிமலை தலைமைப் பூசாரியான தந்திரி ராஜினாமா செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை எனில் அரசமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய கடமை அவருக்கு உண்டு. 2 பெண்கள் சென்றுவந்த பிறகு சபரிமலை கோவில் கதவை தந்திரி பூட்டியது உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறிய செயல்.

 

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் தருமாறு குறித்து அறிக்கை அளிக்குமாறு ஆளுநர் சதாசிவம், கேட்டுள்ளார். சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தி, கேரள மாநிலத்தில் ஆட்சி நடத்தி வரும் மார்க்சிஸ்ட் அரசை ஸ்தம்பிக்க வைக்க மத்திய பாஜக அரசு காய்களை நகர்த்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.