அரசின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுத்தான் ஆக வேண்டும் : அமைச்சர் ஜெயக்குமார்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்குமாறு ஆளுநருக்கு பரிந்துரைக்க முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் 2 மணி நேரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இந்த தகவலைத் தெரிவித்தார். அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவின் அடிப்படையில் ஆளுநருக்கு இந்தப் பரிந்துரை அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். தமிழக அரசின் இந்தப் பரிந்துரையை ஆளுநர் நிராகரிக்க இயலாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் ஜெயல்லிதாவிற்கு பாரத ரத்னா வழங்க வேண்டும், செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலிநுறுத்தியும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதாக அவர் தெரிவித்தார்.

ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம்அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இது தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, தமிழக அமைச்சரவை கூடி தற்போது முடிவெடுத்துள்ளது.

Governor must accept tn cabinet’s recommendation