இந்தியா உதவியுடன் இலங்கையில் அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் : காணொளி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..


இந்தியா உதவியுடன் இலங்கை முழுவதும் அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தும் திட்டத்தினை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும், இந்திய பிரதமர் மோடியும் இன்று கூட்டாக தொடங்கி வைத்தனர்.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில், இந்திய அரசின் உதவியுடன் அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்திய பிரதமர் கடந்த 2015-ம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, இந்தியாவின் உதவியுடன் முதற்கட்டமாக இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் 2016-ம் ஆண்டு அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவை தொடங்கிவைக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கை முழுவதும் இந்த அவசர ஆம்புலன்ஸ் திட்டத்தை இன்று இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக துவக்கி வைத்தனர்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும், இந்திய பிரதமர் மோடியும் காணொளி காட்சி மூலம் இந்த சேவையை தொடங்கி வைத்தனர்.

இதுதொடர்பாக பேசிய பிரதமர் மோடி, இலங்கை முழுவதும் இந்த சேவையை விரிவுபடுத்த இந்தியா உதவியதில் பெருமிதம் கொள்வதாகவும், இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் நிகழ்வுகளில் இது முக்கியமான ஒன்றாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.