கஜா… பேரிடர் மட்டுமல்ல… பேரழிவு….! : மேனா.உலகநாதன்

 

பேராவூரணி அருகே உள்ள ஜீவன்குறிச்சி கிராமம்.

அந்த நவம்பர் 15ஆம் தேதி இரவு அத்தனை பெரிய பேரழிவு தனது தென்னம் “பிள்ளை”களுக்கு நேரும் என அந்த முதியவர் நினைத்திருக்கவில்லை.

வயது 80 ஐத் தாண்டிய நிலையில், தான் வளர்த்த 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், ஒரு மாமரம் இவற்றின் நிழலில் இளைப்பாறி வந்தனர் அந்த முதிய தம்பதியர்.

பிள்ளைகள் நான்கும் வெளியூர்களில் இருந்தாலும், தங்களது தள்ளாத வயதிலும் தென்னைகளையே பிள்ளைகளாக கருதி வாழ்ந்து வந்தனர்.

பொழுது விடிந்து பார்த்த போது, எதிர்காலம் இருண்டது தெரிய வந்தது.

தனது எஞ்சிய ஆயுட்காலம் வரையிலான எதிர்காலம் மட்டுமல்ல, தனது பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லலாம் என்ற அடுத்த தலைமுறைக்கான எதிர்காலத்தின் கனவும் சேர்ந்தே சரிந்து கிடந்ததைப் பார்த்த முதியவரின் மனம் நடுங்கி ஒடுங்கியது.

விவசாயியாக பிறந்தவனுக்கு தான் வளர்த்த பயிர்தானே உயிர்!

பயிர் வீழ்ந்து விட்டால் உயிர் போய்விட்டது என்றுதானே பொருள்.

அப்படி உயிராக வளர்த்த 15க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும், ஒரு மாமரமும் வேரடி மண்ணோடு சாய்ந்து கிடந்தன.

சமூக வலைத்தளங்களில், கஜா எனப் பெயரிடப்பட்டு கிண்டலாகவும், கேலியாகவும் பலரால் பகடி செய்யப்பட்ட அந்தப் புயல்தான்,  அந்த ஏழை விவசாயியின் எதிர்காலத்தையே வேருடன் சாய்த்தது.

சரிந்த மரங்கள். இடிந்த மனம். நொறுங்கிய நம்பிக்கை.

இழப்பதற்கு எதுவுமில்லை என்ற விளிம்பில் கண்ணீரைத் தவிர வேறு எந்தக் கரையும் அவர் கண்ணுக்கு தெரியவில்லை.

தள்ளாத வயதிலும் தனது காலத்ததைத் தள்ளிச் செல்ல உதவிய பிள்ளைகள் போனதே… 30 ஆண்டுகள் உழைத்த உழைப்பு… வாழ்வின் கடைசிக்கால நம்பிக்கை…  கண் முன்னே சரிந்து கிடந்தது….

கஜா என்ற கோர நர்த்தனம் ஏற்படுத்திய அழிவின் வலிக்கு ஒரு சிறு துளி உதாரணம்தான் இது.

கண்ணிமைக்கும் நேரத்தில், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் 30 ஆண்டு கால உழைப்பை வாரிச் சுருட்டிச் சென்று விட்டது கஜா புயல்.

வாழ்வாதாரத்துடன் வாழும் வீடு, ஆடு, மாடு, வளர்ப்புப் பிராணிகள் என அனைத்தையும் இழந்து நிற்கின்றனர், அந்த மாவட்டங்களின் மக்கள்.

நிவாரணம், சீரமைப்பு பணிகள் என நடைபெற்று வருவதாக கூறப்பட்டாலும், நடைமுறையில் என்னவோ பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் குக்கிராமப் பகுதிகளில் மின்சாரம், தொலைத்தொடர்பு போன்ற வசதிகள் இயல்பு நிலைக்கு இன்னும் கூடத் திரும்பவில்லை.

புயல் தாக்கி பேரழிவு ஏற்பட்டு விட்டது என்ற செய்தியறிந்தும், அதிகாரத்தில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்க்கவே ஐந்தாண்டுத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர்.

சென்னையில் வெள்ளம் வந்ததும் ஹெலிகாப்டர்கள் பறந்தன. பொட்டல மழைகள் பொழிந்தன. மனிதாபிமானக் கொடி வானுயறப் பறந்தது.

ஆனால், கஜா புயலால் பாதிக்கப்பட்டது டெல்டா மாவட்ட விவசாயிகள் என்பதால், வானில் ஹெலிகாப்டர்களுக்கு பதிலாக கழுகுகளும், பருந்துகளும் தான் வட்டமடித்தன.

இந்துக்களுக்கு ஓர் ஆபத்து என்றால் என்ன செய்வோம் தெரியுமா என்று எதற்கெடுத்தாலும் கொக்கரிக்கும் காவிப் பரிவாரத்தினர் போய் பதுங்கிய இடம் தெரியவில்லை.

மத்திய அரசு கடந்த காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு என்ன செய்ததோ அதைத்தான் இப்போதும் செய்யப் போகிறது.

அவர்களுக்கு ம.பி, உ.பி, குஜராத், உத்தரகாண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்ட்ரா மாநிலங்கள் தானே முக்கியம்… தன் வசப்படாத தமிழகமும், தமிழர்களும் அழிந்தொழிய வேண்டும் என்பதுதானே அவர்களது அவாவும், இலக்கும்.

 நிவாரணப் பணிகள், நிதி உதவிகள் குறித்த விமர்சனங்கள் ஒரு புறம் இருக்கட்டும்.

இந்த அழிவின் ஆழத்தையும், அளவையும், அரசு மட்டுமின்றி சில தனி நபர்களும் கூட  மிக மெத்தனமாக மதிப்பிடுவதுதான் வேதனைக்குரிய செய்தி.   

சில மாத உழைப்பைக் கோரும் நெற்பயிர் வேளாண்மை பாதிக்கப்பட்டு அதனால் ஏற்படும் இழப்பில் இருந்தே விவசாயிகள் அத்தனை எளிதில் மீண்டு விட முடிவதில்லை.

தென்னை அப்படி அல்ல. கன்று நட்டு 10 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் காய்க்கவே தொடங்கும். சில ஒட்டு ரகங்கள் 5 ஆண்டுகளில் பலன் தரும். தற்போது  சாய்ந்திருப்பவை 20 முதல் 30 ஆண்டுகள் வரையிலான தென்னை மரங்கள். பத்து, பதினைந்து ஆண்டுகளாக பலன் தந்து கொண்டிருந்தவை.

இவற்றை வைத்துத்தான் அவர்களுக்கு அன்றாட உணவு.

இவற்றை வைத்துத்தான் அவர்களுக்கு தீபாவளி, பொங்கல்.

இவற்றை வைத்துத்தான் அவர்களுக்கு பிள்ளைகள் படிப்பு.

இவற்றை வைத்துத்தான் அவர்களுக்கு பிள்ளைகள் திருமணம்.

இவற்றை வைத்துத்தான் பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதான விவசாயிகளுக்கு வாழ்க்கை.

இன்னும்.. இன்னும்… எல்லாமும் அவர்களுக்கு “மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்”

கஜா புயலால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை இந்த புரிதலுடன் மதிப்பிட்டால் மட்டுமே, இழப்பின் அளவையும், வலியையும் முழுமையாக உணர முடியும்.

பலகோடி தென்னை மரங்கள் சாய்ந்து வீழ்ந்தன என்றால், இழப்பு பல ஆயிரம் கோடிகள் என்று பொருள்.

பல லட்சம் குடும்பங்கங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது என பொருள்.

போர்வைகளும், தட்டு, டம்ளர்களும், அரிசி, பருப்புகளும் அவர்களுக்கு தற்காலிக நிவாரணம் தான். நிரந்தரமானவை அல்ல.

நிரந்தரத் தீர்வுக்கு மிக விரிவான திட்டங்களும், அதற்கான நிதி ஒதுக்கீடும், அவை நேரடியாக விவசாயிகளைச் சென்றடைய வேண்டியதும் தேவை. அதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் மீது நேர்மையான அக்கறை மிக்க அரசுகள் தேவை.