பேரவையில் கலைஞரைப் போற்றிப் பேசிய அனைவருக்கும் நன்றி: ஸ்டாலின் நெகிழ்ச்சி

கலைஞருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, அவரது பெருமைகளை போற்றிப் பேசியதற்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வாழ்ந்த நாள்களில் பாதி நாள்களுக்கும்மேல், தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து தொடக்கம் முதல் இறுதிவரை விவாதங்களில் ஒவ்வொரு நாளும் அன்று புதிதாக வந்த உறுப்பினரைப் போலப் பேரார்வத்துடனும் துடிப்புடனும் பங்கெடுத்து, அவையின் நடவடிக்கைகளுக்கு உயிரோட்டம் தந்து, “மக்கள் பணியே, மகேசன் பணி” என்ற இலட்சியத்திற்காக இடையறாது தொண்டாற்றிய வாஞ்சைமிகு தலைவர் கலைஞருக்குப் பேரவையில் இன்று (03.01.2019) இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. போட்டியிட்ட அனைத்து சட்டமன்றத் தேர்தலிலும் வென்று, 13 முறை வெற்றி வீரராக சட்டப்பேரவைக்குள் நுழைந்து, அரை நூற்றாண்டுக் கால வரலாறு படைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். ஐந்து முறை தமிழக முதல்வராக பொறுப்பேற்று 19 ஆண்டுகள் நாடும் ஏடும் வீடும் ஏற்றிப் போற்றிட நற்பணியாற்றியவர் கலைஞர்.

ஏராளமான திட்டங்கள், எத்தனையோ சட்டங்கள், கணக்கில் அடங்காத உதவிகள், சலுகைகள், பல்வேறு பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், திரும்பிய பக்கம் எல்லாம் பள்ளிகள், கட்டடங்கள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் என அமைத்து கோட்டம் முதல் குமரி வரை தமிழகத்தை நிர்மாணித்த நவீன சிற்பி தான் தலைவர் கலைஞர் அவர்கள்.

சிலருக்கு கனவுகள் இருக்கும்; ஆனால் அதனை நிறைவேற்றும் பதவிக்கு அவர்களால் வரும் வாய்ப்பு இருக்காது. சிலர் பதவிகளை அடைவார்கள்; ஆனால் அவர்களுக்கு தொலைநோக்குச் சிந்தனைகள் இருக்காது. தொலைநோக்குச் சிந்தனையும் சீரிய கனவும் அவற்றை மெய்ப்பட வைத்து, செயல்படுத்திக் காட்டும் பொறுப்பும் பதவியும் அதிக ஆண்டுகள் தலைவர் கலைஞருக்கே வாய்த்தது. வாழ்ந்த காலத்தில் பாதி அவர் சட்டப்பேரவையில் உலா வந்துள்ளார். அதில் மூன்றில் ஒரு பங்கு காலம் முதல்வராக இருந்துள்ளார். அவருடைய காந்தக் குரல் எதிரொலித்துக் கொண்டே இருந்த இந்தப்பேரவையில், நினைவுகளாய் நீக்கமற நிறைந்துள்ளார்.

அத்தகைய தலைவர் கலைஞரின் மறைவையொட்டி, இரங்கல் தீர்மானம் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், அவர் பெருமையைப் போற்றிப் பேசிய மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு துணை முதலமைச்சர், மாண்புமிகு சபாநாயகர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவரும் கழகப் பொருளாளருமான அண்ணன் துரைமுருகன், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் திரு கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர் திரு முகமது அபுபக்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு தனியரசு, திரு. தமீமுன் அன்சாரி ஆகியோருக்கு, திமுக தலைவர் என்ற முறையிலும் கலைஞரின் மகன் என்ற தனிப்பட்ட முறையிலும் தலைதாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர் கலைஞர் அவர்களின் மறைவையொட்டி, பல்துறைச் சான்றோர்கள் பங்கேற்ற புகழ் வணக்க நிகழ்வுகள் நாடெங்கும் நடந்தன. அந்த வரிசையில் இன்று பேரவையில் நிறைவேறிய இரங்கல் தீர்மான நிகழ்வு தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றுவிட்டது. தந்தை பெரியார் அவர்களின் சிந்தனையுடன், அறிஞர் அண்ணா அவர்களின் வழியில், தலைவர் கலைஞர் உருவாக்கிக் கொடுத்த ஜனநாயக மாண்பை எந்நாளும் காப்போம்!

இவ்வாறு அதில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சட்டப்பேரவைக் கூட்டத்திற்குப் பிறகு, சபாநாயகர் அறைக்கு நேரில் சென்று கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதற்காக, சபாநாயகர், முதலமைச்சர் – துணை முதலமைச்சர் ஆகியோருக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.