பிரதமர் மோடியை நெகிழவைத்த கனடா பிரதமரின் குழந்தைகள்…


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் கனடா பிரதமர் ட்ரூடோவை, பிரதமர் மோடி வரவேற்காதது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று காலை ராஷ்ட்ரபதி பவனில், கனடா பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்தினரை மோடி உற்சாகமாக வரவேற்றார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்திக்க ஆவலாக உள்ளதாகவும், குறிப்பாக அவரின் குழந்தைகளான சேவியர், இல்லா கிரேஸ், மற்றும் ஹட்ரியெனை சந்திக்க மிகுந்த ஆவலாக உள்ளேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி நேற்று தெரிவித்திருந்தார். மேலும், இந்தியா – கனடா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகப் பேச உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இன்று காலை ராஷ்ட்ரபதி பவனில், கனடா பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்தினரை மோடி உற்சாகமாக வரவேற்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, முதன்முறையாக ஏழு நாள் சுற்றுப் பயணமாக இந்தியாவுக்கு வருகைதந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று, தாஜ்மகாலுக்கு குடும்பத்தினருடன் சென்று சுற்றிப்பார்த்தார். அதன்பின், குஜராத் சென்ற அவர், காந்தி ஆசிரமத்துக்குச் சென்று பார்வையிட்டார்.

அதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். கனடாவில், காலிஸ்தானுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில், அந்நாட்டின் பிரதமர் கலந்துகொண்ட காரணத்தால்தான், ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி வரவேற்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.