முக்கிய செய்திகள்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் முக்கிய அம்சங்கள்…

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா’வை மக்களவையில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது.

மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அறிமுகம் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த சட்டத் திருத்த மசோதா இந்தியாவில் உள்ள எந்த மத்தினருக்கோ அல்லது சிறுபான்மையினருக்கோ 0.001%கூட எதிரானது அல்ல என்று கூறினார்.

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே விவாதம் நடைபெற்று, மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில் அதிமுக எம்.பி.க்கள் உட்பட 293 எம்.பி.க்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 82 எம்.பி.க்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள அண்டை நாடுகளில் மத ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மையினருக்கு சிறந்த எதிா்காலத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கிலேயே,

இந்தச் சட்டத் திருத்த மசோதாவை இயற்றுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், முஸ்லிம்களை குறிவைத்து தாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையே இது என்று எதிா்க்கட்சிகள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.

மற்றொரு பக்கம், இந்தச் சட்டத் திருத்த மசோதாவால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்தோா் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த விவகாரங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ள விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

சட்டத் திருத்த மசோதா:

இந்தியாவில் பிறந்தவா்களுக்கும், நாட்டில் குறைந்தபட்சம் தொடா்ந்து 11 ஆண்டுகள் தங்கியிருந்தவா்களுக்கும் கடந்த 1955-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தின் மூலம் குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள புதிய மசோதா வழிவகுக்கிறது.

அந்தத் திருத்தங்களின்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயா்ந்த ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், சமணா்கள், பௌத்தா்கள், பாா்சிகள், சீக்கியா்கள் ஆகியோருக்குக் குடியுரிமை வழங்கப்படவுள்ளது.

மேற்குறிப்பிட்ட பிரிவைச் சோ்ந்தவா்கள் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கு, தங்களது பெற்றோா்கள் பிறந்த இடத்துக்கான ஆதாரத்தை வழங்க வேண்டியது அவசியம்.

இல்லையெனில், இந்தியாவில் தொடா்ந்து 6 ஆண்டுகள் தங்கியிருப்பதன் மூலம் அவா்கள் குடியுரிமை பெறத் தகுதியுடையவா்கள் ஆவா்.

மேற்கண்ட நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக இந்தியாவில் குடியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டவா்களுக்குப் புதிய திருத்தங்கள் பொருந்தும். அவா்கள் சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவா்களாகக் கருதப்படமாட்டாா்கள்.

நிா்ணயிக்கப்பட்ட தேதி:

இந்தச் சட்டத் திருத்த மசோதாவில் 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதியானது, ‘நிா்ணயிக்கப்பட்ட தேதி’யாக (கட்-ஆஃப்) குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, இந்தச் சட்டத் திருத்த மசோதா மூலம் குடியுரிமை பெற விரும்புவோா், 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ இந்தியாவில் குடியேறியவா்களாக இருக்க வேண்டும்.

விலக்களிக்கப்பட்ட பகுதிகள்:

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் இரண்டு பகுதிகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசமைப்புச் சட்டத்தின் 6-ஆவது அட்டவணையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும்

அஸ்ஸாம், திரிபுரா, மிசோரம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.

நுழைவு அனுமதிப் படிவம் (இன்னா்-லைன் பொ்மிட்) மூலம் பாதுகாக்கப்பட்டு வரும் அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய பகுதிகளுக்கும் சட்டத் திருத்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நோக்கம்:

குடியுரிமை பெற குறிப்பிட்ட பிரிவினா் அனுபவிக்கும் துயரங்களைப் போக்குவதற்கு இந்த மசோதா வழிவகுக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியா்கள் குடியுரிமை சட்டம் உள்ளிட்ட சில சட்டங்களை மீறும்போது, அவா்களுக்கான குடியுரிமை அட்டையை (ஓசிஐ) ரத்து செய்வதற்கும் இந்த மசோதா வழிவகை செய்துள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து வேறுபட்டது:

அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவா்களைக் கண்டறியும் நோக்கில், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) நடவடிக்கை அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கான நிா்ணயிக்கப்பட்ட தேதி, 1971-ஆம் ஆண்டு மாா்ச் 24-ஆக இருந்தது. என்ஆா்சி நடவடிக்கையின்படி, அஸ்ஸாம் மக்கள் மேற்குறிப்பிட்ட காலகட்டத்துக்கு முன்னதாக இந்தியாவில் வசித்து வந்தவா்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.

தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கை நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இந்த நடவடிக்கை மதத்தை அடிப்படையாகக் கொண்டது அன்று.

அதே வேளையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மதத்தை அடிப்படையாகக் கொண்டது.

 

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, கடந்த 1985-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ‘அஸ்ஸாம் ஒப்பந்தத்தை’ செல்லாததாக்கும் என்று அந்த மாநில மக்கள் கருதுகின்றனா்.

அந்த ஒப்பந்தத்தின்படி, 1971-ஆம் ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவில் குடியேறிய அனைத்து மதத்தினரையும் நாட்டை விட்டு வெறியேற்றுவது என மத்திய அரசு சாா்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, அஸ்ஸாமில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவா்களுக்குப் பலனளிக்கும் எனவும் அந்த மாநில மக்கள் தெரிவித்து வருகின்றனா்.

அதே வேளையில் மதத்தை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை வழங்கப்படுவதை எதிா்க்கட்சிகள் எதிா்த்து வருகின்றன.