முக்கிய செய்திகள்

காவலர்கள் தற்கொலைகளை தடுக்க காவல்துறை சீர்திருத்தம் தேவை: அன்புமணி…

காவல் பணியை மன உளைச்சல் அற்றதாக மாற்ற, காவல்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து பரிந்துரைக்க ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த சதீஷ் என்ற இளைஞர் காவல் நிலைய வளாகத்தில் இன்று அதிகாலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். உதவி ஆய்வாளர் சதீஷை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னையில் அதிர்ச்சி: காவல் நிலைய வாசலில் எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
சதீஷ் எழுதி வைத்துள்ள கடிதத்தில் தமது தற்கொலைக்கு யாரும் காரணமல்ல என்று குறிப்பிட்டுள்ளார். அவரது தற்கொலைக்கு மன உளைச்சல் தான் காரணம் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சென்னை கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அருண்ராஜ் என்ற காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பொதுவாகவே காவல்துறையில் பணியாற்றும் ஆய்வாளர் நிலைக்கு கீழ் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியான பணி, விடுமுறை மறுப்பு, மேலதிகாரிகளின் நெருக்கடி போன்றவைதான் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன.

இதை தாங்கிக் கொள்ள முடியாத சிலர் தற்கொலைப் பாதையை தேர்ந்தெடுத்து விடுகின்றனர். இந்த நிலையை மாற்றி காவல் பணியை மன உளைச்சல் அற்றதாக மாற்ற வேண்டும். அதற்காக காவல்துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து பரிந்துரைக்க ஆணையத்தை அமைக்க வேண்டும்” என்று அன்புமணி கூறியுள்ளார்.