முக்கிய செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸார் சோதனையில் அது புரளி எனத் தெரியவந்தது.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராயப்பேட்டையில் உள்ள போயஸ் கார்டனில் வசித்து வருகிறார். நீலாங்கரையிலும் அவருக்கு ஒரு வீடு உள்ளது. ஆனால், அவர் வசிப்பது போயஸ் இல்லத்தில்தான்.
இந்நிலையில் இன்று காலை 108 ஆம்புலன்ஸ் சேவை எண்ணுக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்குக் குண்டு வைத்துள்ளேன். வெடிப்பதற்குள் போய் எடுத்துவிடுங்கள் எனத் தெரிவித்து, தொடர்பைத் துண்டித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுகுறித்துக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக தேனாம்பேட்டை போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் ரஜினி வீட்டுக்குச் சென்றனர்.

அங்கு தகவலைத் தெரிவித்த அவர்கள் வீட்டைச் சுற்றி சோதனை நடத்தினார்கள். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. மர்ம நபர் மிரட்டல் விடுக்க போன் செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து போன் செய்த நபரைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.