நிகழும் அதிசயம் : ரவி சுப்ரமணியன் (கவிதை)

தொடர் பிரார்த்தனையால் மன்றாடிப் பெற்ற அனுக்கிரஹத்தை
புலர் காலையில் பூஜைக்கு முளைத்த செவ்வரளியைச்
சாதகப்பறவைக்கு இசைதான்யமிறைத்த வள்ளலைச்
சித்திரப்பொற்புதையலைத்
தாளம் தப்பா நர்த்தனத்தை
அருநிதியக் கலசத்தைத் தவறவிட்டேன்

கங்குகள் தீய்த்த விதியன்றி வேறென்ன
ஸ்வரத்துக்குள் வராத சொல்லானேன்
அவதூறின் உருவாகி குற்ற உணர்வில் பித்தானேன்
இரவுகளின் கண்ணெல்லாம் ரணமெழுதிச் சிவந்தன
விளையாட்டாய் சிதைந்தது ஜீவிதம்
ஆனாலும் பிழைத்திருந்தேன்

பரிகார சங்கற்பம் செய்து 
ஆண்டுபலவாய் நோன்பிருந்து திருநாமம் செப்பி
நிஷ்களங்க நெய்யூற்றி நிவேதனம் செய்துவந்தேன்

திடீரென பிரளய இடி இடித்து மின்னல்தெறிக்க
அனுகூல நிமித்தம் தோன்ற
இன்றின் முற்றத்தில் பெய்த பேய்மழையில்
நின் வருகை நிகழ அடித்துச் செல்கிறது எல்லாம்.

Ravi subramanian’s Poem