முக்கிய செய்திகள்

உங்களுக்கும், சிந்துவெளிப் பண்பாட்டுக்கும் என்ன சம்மந்தம்? : நிர்மலா சீதாராமன் பேசியது குறித்து எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி…

சிந்துவெளி நாகரிகத்தை ‘சரஸ்வதி நாகரிகம்’ என்று பட்ஜெட் உரையின்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் அடுத்தடுத்து அதிர்ச்சிகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இம்முறை பொருளாதாரம் தாண்டி வரலாறு, பண்பாடு என்று தனது தாக்குதல் எல்லையை விரிவாக்கிக் கொண்டிருக்கிறார்.

சிந்துவெளி நாகரிகத்தை, “சரஸ்வதி சிந்து நாகரிகம்” என்று புதுப்பெயர் சூட்டி இதுவரை நடந்த ஆய்வுகளையும், நிரூபணங்களையும் முற்றிலும் மாற்றி அமைக்க நினைக்கிறார்.

வேதப் பண்பாட்டினை சரஸ்வதி நாகரிகம் என பெயர்சூட்டி அதனை சிந்துவெளி நாகரிகத்தின் மீது பொருத்த தொடர்ந்து இந்துத்துவவாதிகள் முயற்சி செய்து வருகிறார்கள். அந்த முயற்சியின் அதிகாரபூர்வமான குரலாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் குரல் அவையில் எதிரொலிக்கிறது.

நாகரிகத்தின் அடிப்படை அடையாளம் செங்கலும், பானையும் கண்டுபிடித்ததில் இருக்கிறது. ஆனால் வேதத்தில் செங்கலையும், பானையையும் செய்பவர்களை அசுரர்கள் என்று வசைபாடப்படுகிறார்கள்.

பின் எப்படி உங்களை நாகரிகவாதி என்று உரிமை கொண்டாடுகிறீர்கள்? உங்களுக்கும் சிந்துவெளிப் பண்பாட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

சடங்குகளுக்காக ஆங்காங்கே கற்களையும் சுடாத செங்கலையும் பயன்படுத்தி ஹோமம் செய்து, பின்னர் கலைத்துவிட்டுப் போகிற பழக்கத்தை தான் வேத காலத்தில் பார்க்க முடிகிறது.

சடங்குகள் பற்றிய வேத இலக்கிய குறிப்பில் சதபத பிராமனத்தில் அக்னிசேனா என்ற சடங்குக்குத்தான் முதன் முதலில் செங்கலைப்பற்றிய குறிப்பே வருகிறது.

அதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி நாகரிகத்தில் சுட்ட செங்கல் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

இன்றைய கீழடி கண்டுபிடிப்பிலும் சுட்ட செங்கல் பயன்பாட்டினை பார்க்க முடியும். எனவே இதுவரை நிரூபிக்கப்பட்ட வரலாற்றினை புராணங்களோடு இணைத்து உங்களின் கதைகளை தேசத்தின் வரலாறாக மாற்ற நினைக்காதீர்கள்.

ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட அறிவியல்பூர்வமாக உலகமே அறிந்த ஹரப்பா, சிந்துவெளி நாகரிகத்தின் வரலாற்றையே இவ்வளவு அப்பட்டமாக மாற்றி பதிவிடும்போது ஆதிச்சநல்லூருக்கான தொல்லியல் திட்டத்தையும் இந்தப் பிண்ணனியை விலக்கிவிட்டுப் பார்க்க முடியவில்லை.

ஒளவை தனது ஆத்திச்சூடியில் “மண் பறித்து உண்ணேல்” என்பாள். வரலாறும், பண்பாடும் கொண்ட மனிதக்கூட்டத்தின் வாழ்விடம்தான் மண். அதனை ஒரு போதும் அதிகாரத்தால் பறித்துவிட முடியாது’என்று தெரிவித்தார்.