ஸ்டெர்லைட் தீர்ப்பு: பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி: கமல்ஹாசன் வரவேற்பு..

ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கோரிய வழக்கில் இன்று (ஆக.18) நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், வி.பவானி சுப்பராயன் அமர்வு தீர்ப்பளித்தது.

அதில், ஆலையைத் திறப்பதற்கான தடை நீடிக்கும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், “ஸ்டெர்லைட் தடை தொடரும் என்கின்ற நீதிமன்றத் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்தில் கிடைத்துள்ள நீதி. இத்தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை, அருகில் இருந்து உணர்ந்த சகோதரன் நான். மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு இது மற்றுமொரு சான்று” என பதிவிட்டுள்ளார்