முக்கிய செய்திகள்

திவால் ஆகிவிட்ட தமிழக அரசுக்கு முதல்வர் தேவையா? : ராமதாஸ் கேள்வி..


இன்று சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறியது..
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் ஊழல், லஞ்சம் பெருகி உள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் ரூ.3,000 கோடிக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கோடம்பாக்கத்தில் இருந்து சேத்துப்பட்டு வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு ஒரு மேம்பாலம், உஸ்மான் ரோடு மேம்பாலம், தி.நகர், மயிலாப்பூர், எழும்பூர், பாரிமுனை ஆகிய இடங்களில் பலஅடுக்கு வாகன நிறுத்துமிடங்கள் என பல கட்டுமானப்பணிகள் நடத்தப்படும் என அறிவித்தார்கள்.
ஆனால், ஒரு திட்டம் கூட நடந்ததாக தெரியவில்லை. சென்னை மாநகராட்சி பல ஆயிரம் கோடி கடனில் மூழ்கி கிடக்கிறது. சென்னைக்கு மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளுக்கும் இதே நிலைதான் உள்ளது.
ஜெ. முதல்வராக இருந்தபோது 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதற்கும் நிதி ஒதுக்கவேயில்லை. அதற்காக மட்டும் தற்போதைய சூழலில் ரூ.1.50 லட்சம் லோடி செலவாகும். இந்த மொத்த நிதியையும் திரட்டவே 10 ஆண்டுகள் ஆகிவிடும்.
போக்குவரத்துக் கழக சொத்துகள் ரூ.11 ஆயிரம் கோடிக்கு அடமானத்தில் உள்ளது. தமிழக அரசு ரூ.3.14 லட்சம் கோடி கடனில் உள்ளது. இதற்கான வட்டியாக மட்டும் ஆண்டொன்றுக்கு ரூ. 25 ஆயிரத்து 982 கோடி செலுத்தப்படுகிறது.
இந்தக் கடன் வளர்ச்சிக்கு உதவாது. தமிழக அரசு வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதற்குக் காரணமான எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும். பா.ம.க தலைமையிலான அரசு ஆட்சியமைக்க அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இவ்வாறு பேசியுள்ளார்.