தீ பரவாமல் போனதேன்? : செம்பரிதி

anna swearingநூற்றாண்டு கண்ட அந்த மணிமண்டபத்தில் சில விரிசல்கள். இடிந்து விழுந்து விடும் என்று சிலர் ஆரூடம் கூறுகின்றனர். இடிந்து விழட்டும் எனச் சிலர் எக்காளம் கொப்பளிக்க எள்ளி நகையாடுகின்றனர். இடியாவிட்டால் நாங்களே இடிப்போம் என்றும் ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது.

 

தென்னிந்திய மக்கள் சங்கமாக தொடங்கப்பட்டு, சுயமரியாதை இயக்கமாக தத்தித் தவழ்ந்து, நீதிக்கட்சியாக நிமிர்ந்து நடந்து, திராவிடர் கழகமாக திமிறி எழுந்து, திராவிட முன்னேற்றக் கழகமாக பீடுநடை போட்ட பேரியக்கம்…. தற்போது சற்றே தடுமாறி நிற்பது உண்மைதான்… சில யதார்த்தங்களை ஏற்கும் துணிவு இல்லாமல் போனால், தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளும் இல்லாமலே போய்விடக் கூடும்.

 

செப்டம்பர் திங்கள் திராவிட இயக்கத்திற்கு முக்கியமான மாதம். செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள். செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள். ஆம் அந்த செப்டம்பர் 17ஆம் தேதி தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிறந்தநாளும்! அந்த வகையில், செப்டம்பர் மாதத்தின் இந்த முக்கிய நாட்களில், திராவிட இயக்கம் கடந்து வந்த கம்பீரமான சுவடுகளைத் திரும்பிப் பார்க்க வேண்டியது வரலாற்றுக் கட்டாயம். அதன் மூலமாகத் தான், சூனியமாக திரண்டு நிற்கும் எதிர்காலத்தை வென்றெடுப்பதற்கான கருத்துத் திராணியை நம்மால் பெற முடியும்.

 

anna - periyarஏன் நம்மை எல்லாம் இந்தி படிக்க விடாமல் செய்தார்கள்… ஏன் நீட் தேர்வை இத்தனை அழுத்தமாக திராவிட இயக்கம் எதிர்க்கிறது…? ஏன் இன்னும் தமிழ், தமிழ் என்று கூறியே அரசியல் செய்கிறார்கள்?… இப்படியாக நீளும் கேள்விகளையெல்லாம் யாரோ கல்வி அறிவில்லாத அப்பாவி இளைஞர்கள் கேட்கவில்லை. முன்னணி ஊடகங்களிலும், நாளேடுகளிலும், செய்திகளை இந்தச் சமூகத்திற்கு அளிக்க வேண்டிய முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த சிலரே கேட்பதுதான், நெஞ்சில் வேலைப் பாய்ச்சுவது போல வலிக்கிறது. அரசியல் அறிவற்ற கல்வியால், ஒரு சமூகம் தன்னுணர்வைப் பெறவே முடியாது என்பதற்கு, தமிழ்ச் சமூகம் பிரசவித்திருக்கும் இத்தகைய அறிவுத் தக்கைகளே கடைந்தெடுத்த உதாரணம்.

 

தமிழ்ச் சமூகத்தின் இன்றைய தலைமுறையினரில் பெரும் பகுதியினர், இப்படி அரசியல் தக்கைகளாக மிதப்பதற்கு யார் காரணம்? கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கம் சார்ந்து இயங்கி வரும் அத்தனை பேரும்தான்!

 

அண்ணாவின் உரைகள் என்று தேடிப்பார்க்கும் போது, அவர் நிறையப் பேசி இருக்கும் இடங்கள் எவை தெரியுமா? படிப்பகங்களைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சிகள் தான்! அடுத்த படியாக கல்லூரிகள், இளைஞர்கள் அதிகம் கூடும் மாநாடுகள்! உலகிலேயே மறைவின் போது அதிக அளவிலான மக்கள் கூடிய இரண்டாவது பெரும் தலைவராக திகழ்ந்த அவரது வழியை, பின் வந்தோர் சரியாக பின்பற்றி இருந்தால், கருத்துப் பயணத்தில் இந்தத் தேக்கநிலை வந்திருக்குமா?

 

உடனடியாக உங்கள் கரங்கள் கலைஞரை நோக்கி நீள்வது தெரிகிறது. திராவிட இயக்கத்தின் எதிரிகளைப் போலவே, ஒட்டுமொத்தக் குற்றச்சாட்டையும் அவர் மீது சுமத்துவது, மற்றவர்கள் தப்பித்துக் கொள்வதற்கான தந்திரமே தவிர, நேர்மையான அணுகுமுறையாகாது. சொல்லப் போனால், அண்ணாவிற்கு அடுத்து, அவர் ஒருவர் தான், திராவிட இயக்கத்தின் காத்திரமான கருத்துகளை ஓரளவேனும் பேசியும், எழுதியும், கடைப்பிடித்தும் வந்தார். கருத்து ரீதியாக அரசியல் வாழ்வில் கலைஞரைத் தாண்டி சாதித்தவர்கள் இருந்தால், அவர்கள் அவரை விமர்சிப்பதைச் சகித்துக் கொள்ளலாம். இந்துத்துவச் சூட்டில், வர்ணாசிரம முட்டைகள் பொறித்த லக்கான் கோழிக் குஞ்சுகள் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க முடியாது. ‘இந்தக் கருணாநிதியால் தான் எல்லாம் கெட்டது’ என்ற முரட்டுச் சனாதனிகளின் மூர்க்கம் தெறிக்கும் முட்டாள்தனமான விமர்சனமாகத்தான் அது விரவிக் கிடக்கிறதே தவிர, அறிவுத் தளத்தில் நின்று ஆய்ந்தோர்ந்து பார்த்துக் கூறப்படும் கருத்துகளாக அவை இருப்பதில்லை. திராவிட இயக்கத்தின் அடிநாதக் கோட்பாடுகளான இடஒதுக்கீடு, சமூகநீதி, சாதி,மத எதிர்ப்பு ஆகியவற்றை, அவர் முதலமைச்சர் பதவியில் இருந்த போதும் சரி, இல்லாமல் போனபோதும் சரி karunanidhi 20.1.14விட்டுக்கொடுத்ததில்லை. சனாதன வாதிகளுக்கு, வேறு யார் பெயரைக் கேட்கும் போதும் வராத கோபம் கலைஞர் என்று சொல்லும் போது மட்டும் கொப்பளித்துக் கொண்டு வருகிறதே…. அதுதான் கருத்து ரீதியாக தன் காத்திரத்தை நீர்த்துப் போக விடாமல் அவர் வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு சான்று! இன்றும் கூட, தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் கிளர்ந்தெழ வழி வகுக்க வேண்டாம் என்று, மத்திய சனாதன அரசை நேரடியாக எதிர்த்துக் கூறும் திராணி, திமுகவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டும்தானே எஞ்சி இருக்கிறது! மற்றவர்கள் எல்லாம் அவர் கூறிய பின்னர்தானே அணிவகுக்கவும் முடிகிறது.

 

கலைஞர் சார்ந்த விமர்சனங்களும், அதற்கான பதில்களும் வேறு தளங்களில் விரிவாக விவாதிக்க வேண்டியவை. ஆனால், திராவிட இயக்கக் கருத்துகள் நீர்த்துப் போனதற்கு அவர் மட்டுமே காரணம் எனக் குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது. அவருடன் அரசியல் செய்த அனைவரும்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஆட்சிக்கு வந்ததும் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதில் இருக்கும் அக்கறை, கொள்கைகளை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும் என்பதில் எத்தனை தலைவர்களுக்கு இருந்தது… இருக்கிறது…? பாசறைகளும், பகுத்தறிவு வகுப்புகளும் நடத்தியே வளர்ந்த இயக்கம், அவை அனைத்தையும் முற்றாகக் கைவிட்டது ஏன்?

 

தலித்துகளுக்கு எதிராக பெரியாரை முன்னிறுத்தும் அளவுக்கு இந்தச் சமூகத்தின் அறிவு தலைகீழ் பரிணாமம் அடைவதற்கு அத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்போர் காரணமல்ல… இடஒதுக்கீடு இன்னும் தேவையா என்று திராவிட இயக்கத் தலைவர்களின் வீடுகளிலேயே பிள்ளைகள் கேட்கும் அளவுக்கு சமூகநீதிச் சிந்தனையில் இந்தச் சமூகம் தேங்கிப் போனதற்கு, அந்தப் பிள்ளைகளும் காரணமல்ல…

 

நாம் தான். நாம் எல்லோரும் தான்.

 

70களில் கல்லூரிகளிலும், பொது இடங்களிலும் சாதி அடையாளத்துடன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதை இளைஞர்கள் அநாகரிகமாக கருதினார்கள். ஆனால் இன்றைய நிலை என்ன…

 

இவற்றுக்கெல்லாம், திராவிட இயக்கக் கருத்துகளையும், கோட்பாடுகளையும் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தும் அறிவுசார் பணியை நாம் தொடராமல் போனதே காரணம்…. சமூகநீதி என்பது திராவிட இயக்கத்திற்கு மட்டும் சொந்தமான கோட்பாடல்ல… ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகம் அனைத்திற்குமான கருத்தியல் தேவை… சமூகநீதிக் கோட்பாட்டால் திராவிட இயகத்தைச் சேர்ந்தவர்களது பிள்ளைகள் மட்டுமா உரிமைகளைப் பெற்றார்கள்… இன்றைக்கு திராவிட இயக்கத்திற்கு எதிராக, இந்துத்துவாவின் தளபதிகளாக முன்னின்று சேற்றை வாரி வீசும் அனைவருக்குமாக சேர்த்துத்தான் நீதிக்கட்சிப் பெரியவர்களும், பெரியாரும், அண்ணாவும் போராடி அந்த உரிமைகளைப் பெற்றுத் தந்தார்கள்.

 

திராவிட இயக்கத்தையும், பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களையும் வாய்க்கு வந்தபடியெல்லாம் விமர்சிப்பவர்கள், கருத்தியல் ரீதியாக இந்தச் சமூகத்திற்கு செய்தது என்ன? திராவிட இயக்கக் கருத்தியலை இவர்கள் வளர்த்தெடுக்க வேண்டாம்… கிருஷ்ணசாமிகளாக மாறி, எதிரிகளிடம் கொண்டு போய் சுயமரியாதையை அடகுவைக்காமலாவது இருக்கலாம்தானே?

 

புரட்சியாளர்களின் சிந்தனைகளை ஒருங்கிணைத்து, அதன் மூலம் தமிழ்ச்சமூகத்தை உணர்வு ரீதியாக ஒன்று திரட்ட வேண்டியதுதான் காலத்தின் தேவையே தவிர, ஒருவரை ஒருவர் விமர்சித்துத் தாக்கி, வீழ்ச்சிக்கு வழி வகுப்பதன்று!

 

அண்ணன்களும் தம்பிகளும் அடித்துக் கொள்வதற்கான காலமல்ல இது… வர்ணாசிரம கூட்டம், தமிழகத்தை சுற்றி வளைக்கத் தொடங்கி இருக்கிறது.. அவர்களுக்கு ஏதுவான அரசியல் அடிமைகள் மலிவான விலைக்குக் கிடைக்கிறார்கள், நீட் நுழைவுத் தேர்வின் மூலம், சனாதனம் தனது முழு அங்கவாரத்தையும் தமிழகத்திற்குள் நுழைத்து விட்டது, வருமுன்னரே தடுத்திருக்க வேண்டும், தவறி விட்டோம், தடுக்க முடியாதவர்களை அரியாசனத்தில் அமரவும் வைத்துவிட்டோம். இனியாவது திராவிட இயக்கத்தின் தேவையை நமது இளையதலைமுறைக்கு எடுத்துரைத்துப் புரியவைக்கும் பணிகளை மேற்கொள்வோம்.

 

நீட் என்பது சமூக நீதிக்கு வைக்கப்பட்ட வேட்டு என்பதைப் புரிய வைப்போம்…

 

நவோதயா பள்ளிகள் என்பது புராணிக இந்தியைத் திணிக்கும் நவீன வடிவத்திலான முயற்சி என்பதை நம் இளைஞர்களுக்கு எடுத்துரைப்போம்…

 

இந்தி படித்தவர்கள் பிழைப்புத் தேடி தமிழகத்தில் தஞ்சமடையும் காலம் இது. இருமொழிக் கொள்கையால், தாய் மொழி மூலம் இயல்பான படைப்பாற்றலையும், ஆங்கிலத்தால் அகில அளவிலான தொடர்புத் திறனையும் தமிழ் இளைஞர்கள் பெற்றிருக்கிறார்கள். அதனாலேயே, தமிழ்ப் பிள்ளைகள் இன்று உலகம் முழுவதும் தகவல் தொழில் நுட்பம் முதல் மருத்துவம் ஈறாக அனைத்துத் துறைகளிலும் கோலோச்சத் தொடங்கி இருக்கின்றனர். தமிழ்ச் சமூகம் முற்றிலும் முன்னேறிவிடவில்லை என்பது உண்மைதான், அணுகுமுறைகளில் குறைகள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. அதற்கு ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுப்போம். அருவெறுப்பான பேச்சுகளால் எந்தப் பயனும் இல்லை. மாற்றத்தை நாம் தான் உருவாக்க வேண்டும். 100 ஆண்டுகளுக்கு முன்னர் உதித்த சிந்தனையில் சில தகவமைப்புகள் தேவைப்படலாம். அதைப் பெரியாரே உணர்ந்திருந்தார். அதற்கான சிந்தனையை அனைவரும் வளர்ப்போம்.

 

ஆதிக்க சக்திகளுக்கு எதிராக பெரியாரும், அம்பேத்கரும், அண்ணாவும் தந்த அறிவாயுதத்தை கூர் தீட்டி ஏந்த வேண்டிய தருணம் இது.

 

நமக்குள் இருக்கும் முரண்பாடுகளை பின்னர் பேசித் தீர்க்கலாம். முதலில் பொது எதிரியை வீழ்த்துவதற்கான வியூகங்களை வகுப்போம்… திராவிட இயக்கமும், அதன் தலைவர்களும் தோன்றிய இந்த நாட்களில் இதுவே நாம் ஏற்க வேண்டிய சூளுரை! இதுவரை இந்தத் தீ பரவால் போனதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். இனி இந்தத் தீ பரவியே தீர வேண்டும் என்பதற்கு வலுவான ஒரே ஒரு காரணம் போதும். வந்து விட்டது வர்ணாசிரம தர்மம்!

 

Thee Paravamal Ponathen?: Chemparithi

 

__________________________________________________________________________