முக்கிய செய்திகள்

திருமுருகன் காந்தியை சென்னை அழைத்து வர திட்டம்..


தேச துரோக வழக்கில் நேற்று காலை பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தனிப்படை போலீசார் மூலம் இன்று அதிகாலை சென்னைக்கு கொண்டுவரப்பட்டார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறையை தூண்டியதாகவும், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியது என பல்வேறு வழக்குகளில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இதற்கிடையே தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்து திருமுருகன் காந்தி ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பதிவு செய்தார்.

போலீசாரின் கெடுபிடிகளை தொடர்ந்து அவர் கடந்த சில நாட்களாக வெளிநாட்டிலேயே தங்கி இருந்தார்.

அவரை காவல்துறை கைது செய்ய பல்வேறு வகையில் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அவர்களால் திருமுருகன் காந்தியை கைது செய்ய முடியவில்லை.

மேலும், தமிழக காவல்துறை சார்பில் தேடப்படும் குற்றவாளியாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஐ.நா மன்றத்தில் இருந்து நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திருமுருகன் காந்தி விமான மூலம்

பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது விமான நிலைய அதிகாரிகள் அளித்த தகவலின்படி திருமுருகன் காந்தியை பெங்களூரு விமான நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இதுகுறித்து பெங்களூரு போலீசார் தமிழக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி தமிழக போலீசார் திருமுருகன் காந்தியை சென்னைக்கு அழைத்து வர பெங்களூரு சென்றனர்.

பின்னர் தனிப்படை போலீசார் மூலம் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு இன்று அதிகாலை சென்னைக்கு கொண்டுவரப்பட்டார்.

மேலும் அவர் மீது புதிய வழக்குகள் போடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.