முக்கிய செய்திகள்

வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் சுதந்திரதின உரையில் முதல்வர் அறிவிப்பு..

தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமான வேலூர் மூன்றாகப் பிரிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்

வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாகும் என சென்னை தலைமை செயலகத்தில் கொடியேற்றி 73 வது சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.

நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்துக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தலைமைச் செயலர் முப்படை அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். பின்னர் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

நாடு செழிக்க நன்னீர் அவசியம் என்ற அவர், அனைவரும் மழைநீரை சேமிக்க வலியுறுத்தினார். நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும் என்றும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிவித்த அவர், மக்களை பாதிக்கக்கூடிய எந்த திட்டமாக இருந்தாலும் அரசு அதனை எதிர்த்து மக்கள் நலனை பாதுகாக்கும் என்றார்.

காவிரி ஆற்றினை சீரமைக்க “நடந்தாய் வாழி காவிரி” என்ற திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதி, “தமிழ்நாடு நாள்” கொண்டாடப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.