அது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா? : செம்பரிதி

பல ஆண்டுகளாக அறிமுகமான மருந்துக்கடை நடத்தி வரும் அந்த நண்பர் கேட்ட கேள்வி என்னைத் தலை குனிய வைத்துவிட்டது.

“என்ன சார்… உங்க பத்திரிகை… மீடியாவெல்லாம்… நாட்டின் உயிர்நாடியான பிரச்சினைகளில் கூட மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறாங்கன்னு சொல்லிட்டு மேலோட்டமா கடந்து போயிர்றீங்க… அரசு தரப்புல சொல்றதத்தான் நீங்களும் எடுத்து ஊதுறீங்க… போராட்டம்னா போலீஸ் சொல்றதத்தான் கிளிப்பிள்ளை மாதிரி நீங்களும் திருப்பிச் சொல்றீங்க. டிவில பேசுறவங்களப் பார்த்தா எல்லாம் தெரிஞ்சவங்களாத்தான் இருக்காங்க… ஆனா… ரூபா நோட்ட செல்லாததுனு அறிவிச்சது முதல், இப்போ ஸ்டெர்லைட், சேலம் பசுமைவழிச் சாலைனு எந்தப் பிரச்சினை குறி்த்தும் இதுதான் சரின்னு எந்தப் பத்திரிகையாளரும் நெஞ்சில் பட்டதை நேராக திறந்து எழுதவோ, பேசவோ மாட்டங்கிறீங்களே…”

ஜனநாயகத்தின் சிண்டைப்பிடித்து உலுக்கும் அவரது இந்தக் கேள்விக்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது. மக்கள் தரப்பில் முன்வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகளைக் கூட உரத்துப் பேச முடியாத ஊமைகளாகத்தானே இன்றைய பத்திரிகைகளும், ஊடகங்களும் இருக்கின்றன. குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற்ற போது காங்கிரஸ் தரப்பு செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்ட விதமும், குறிப்பாக ராகுல்காந்தி திட்டமிட்டு கிண்டலடிக்கப்பட்ட தரம் தாழ்ந்த போக்கும், இந்த நாடு நான்காரம் தர அரசியலுக்கு மீண்டும் தள்ளப்பட்டதையே உணர்த்தியது. நானறிந்து எந்த ஊடக, பத்திரிகை அலுவலகத்திலும் இதனை எதிர்த்து யாராலும் பேச இயலவில்லை. மேலாளர் இட்ட பணியைத் தலைமேல் சுமந்து செய்யும் குமாஸ்தாக்களைப் போல பத்திரிகையாளர்கள் மாறிப் போன காலம் இது. இயந்திரகதியோடு அரசதிகாரத்தின் விருப்பத்தை அட்டி ஏதுமின்றி அரங்கேற்றும் விசுவாச அடிமைகளாவதைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த வழியும் இல்லை. சிறந்த விசுவாசிகள் அடையாளத்திற்காக போட்டி போடுவதும், அலுவலக அரசியலில் திளைப்பதுமாக சாக்கடையில் உழலும் அறிவுப் புழுக்களாக மாறி நெளிந்து கொண்டிருக்கின்றனர், இன்றைய பெரும்பாலான பத்திரிகையாளர்கள். கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசுகளின் விருப்பத்தை மீறி அதன் பின்னால் உறைந்திருக்கும் உண்மைகளைச் சொல்லும் சிறு முயற்சிகளைக் கூட, பத்திரிகை, ஊடகங்களால் மேற்கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. அதற்கு முன்னரும் அறிவுலகத்திற்குள் ஆளும் கரங்களின் ஆதிக்கம் இருந்தததுண்டுதான். ஆனால், இப்போது அரசுகளின் விருப்பத்திற்கு எதிராக அணுவும் அசையாது என்ற நிலைக்கு அது முற்றிவிட்டது. மத்தியிலும், மாநிலங்களிலும் ஆள்வோரின் மிரட்டலுக்கு அஞ்சியா, அல்லது நமக்கெதற்கு வம்பு என உள்வாங்கிக் கொள்ளும் ஊடக முதலாளிகளின் பாதுகாப்பு சார்ந்த அச்ச உணர்வா… இந்த நிலைக்குக் காரணம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால், மக்கள் திரளுக்கான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய திராணியை பத்திரிகைகளும், ஊடகங்களும் இழந்து விட்டன என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. நேர்மையும், துணிவும் மிக்க பத்திரிகையாளர்களே பத்திரிகைகளைத் தொடங்கி நடத்திய போது, அதிகாரம் அவர்களைப் பார்த்து அஞ்சி நடுங்கியது. அழுக்கு ஜிப்பாவும், வியர்வை நாற்றமுமாக அலைந்து கொண்டிருக்கும் பத்திரிகையாளர் ஒருவர், அமைச்சரின் நுனி மூக்குவரை விரல் நீட்டிக் கேள்வி கேட்கும் ஆளுமையோடு இருந்த காலம் அது. கருத்துகளை வெளிப்படுத்துவதற்காக ஏடுகள் வெளிவந்த காலம் போய், கட்சிகள் என்ற பெயரில் இயங்கும் கம்பெனிகளைக் காக்கவும், அவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு லாபத்தைப் பகிர்ந்து கொள்ளும் தரகு முதலாளிகளைத் தாங்கிப் பிடிக்கவுமாக பத்திரிகை உலகத்தின் பணி இப்போதெல்லாம் வேறாகிவிட்டது.

பல்வேறு தொழில்களையும் பாதுகாப்பதற்கான பெருமுதலாளிகளின் கேடயமாக பத்திரிகையும், ஊடகமும் மாறிப் போய் விட்ட நிலையில், இன்னும் அவற்றை ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக நம்ப வேண்டிய நிலையில் நாம் இருப்பதுதான் பரிதாபம்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக நாட்டின் ஒட்டு மொத்த பத்திரிகை, ஊடக உலகமும் ஒரே சங்கை ஊதும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கும், இந்தப் பின்னணிக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பதை விவரிக்கத் தேவையில்லை.      .

இத்தகைய சூழலில்தான் இந்திரா காந்தியின் அவசர நிலைப் பிரகடனம் குறித்து, அக்குவேறு ஆணிவேறாக பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ஆவேசத்துடன் அலசித் துவைத்து, காயப் போட்டுக் கொண்டிருக்கின்றனர். அவரநிலை நாட்டின் இருண்ட காலம் என்பது வரலாறு ஏற்றுக் கொண்ட உண்மை. அதை அமல்படுத்திய இந்திரா காந்தியே அதற்கான தண்டனையையும் அனுபவித்துவிட்டார். அது நடந்து நாற்பதாண்டுகள் ஆகிவிட்டன. அத்தகைய இருண்ட காலத்தை எதிர்த்து நின்று ஆட்சியைப் பிடித்த மொரார்ஜிதேசாய் உள்ளிட்ட பெரும் தலைவர்களாலேயே, சில ஆண்டுகளுக்குக் கூட அதனைத் தொடர முடியாமல் போனதும் கூட அந்த வரலாற்றின் ஒரு பகுதிதான். ஆனால், அதற்குப் பின்னர் பல முறை பெரும்பான்மையோடு ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ் கட்சி, மீண்டும் அந்தத் தவறைச் செய்யவில்லை. அதுமட்டுமின்றி இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய அடாவடித்தனமான எந்தச் செயலிலும் காங்கிரஸ் இறங்கவில்லை. காங்கிரஸ் மீது தமிழர்கள் என்ற முறையில் எங்களுக்கு மிக அழுத்தமான விமர்சனங்கள் உண்டு. அதேநேரத்தில், அந்த விமர்சனங்கள் நாட்டைக் காவிமயமாக்க எந்த வகையிலும் உதவிவிடக் கூடாது என்ற கவனமும் தமிழர்களுக்கு உண்டு. அது ஒருபுறம் இருக்கட்டும்.

நாற்பதாண்டு காலத்திற்கு முந்தைய இருண்ட காலம் குறித்து எகிறிக் குதித்து முழக்கமிடும் பாஜகவினர், இன்றைய காலம் குறித்த கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.

நான்கரை ஆண்டுகளாக நடப்பவையெல்லாம் என்ன…

வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு அறிவு ஜீவிகளும், சிந்தனையாளர்களும், பத்திரிகையாளர்களும் தேடிப்பிடித்து கொல்லப்பட்டனர். கல்பர்கி, கோவிந்த்பன்சாரே, தபோல்கர், பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் என அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது

போராட்டத்தைத் தூண்டி விடுவாதக கூறி, சமூக ஆர்வலர்களும், எளிய மக்கள் தொண்டர்களும் கைது செய்யப்படும் எல்லையைத் தமிழகம் தற்போது தொட்டுள்ளது.

பணமதிப்பிழப்பின் வலியிலும், பாதிப்பிலும் இருந்து எளிய மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை.

விலைவாசி விண்ணை முட்டுகிறது. விவசாயம் நலிவடைந்து விட்டது. பெட்ரோல், டீசல் விலை நாள் தோறும் பற்றி எரிகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை காவிரியில் ஜூன் 12 தண்ணீர் திறக்கப்பட்ட காலங்கள் மறந்தே போயின.

நாட்டின் நெற்களஞ்சியமான டெல்டா பகுதி நெருக்கி பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது.

பாஜக ஆளும் மற்ற மாநிலங்களின் நிலை பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. அவர்களுடைய உற்ற உறவான சிவசேனா போன்றவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

பெண்கள் பாதுகாப்பில் மோசமான நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. நாட்டில் ஒரு மணிநேரத்திற்கு நான்கு பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அரங்கேறுவதாக கூறுகிறது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வு

எல்லாவற்றையும் விட்டு விட்டு ராமர் கோவிலைக் கட்டியே தீருவோம் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யா நாத் முன்னிலையிலேயே சாமியார் ஒருவர் முழங்குகிறார். ஆதித்யா நாத் புன்னகையுடன் அதை ஆமோதிக்கிறார். அதற்காக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆதித்யா நாத்தை உச்சி மோர்கிறார்.

இது எமர்ஜென்சியை விட மோசமான காலம் என மற்றவர்கள் கூறவில்லை. பாஜகவின் முன்னாள் மூத்த தலைவரும், வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவருமான யஷ்வந்த் சின்ஹா தான் அப்படிக் கூறியிருக்கிறார்.

அவர் என்ன சொல்கிறார்:

இப்போது பாஜக ஆட்சியில் நாட்டில் நிலவும் சூழல் எமர்ஜென்சியைக் காட்டிலும் மோசமாக இருக்கிறது. வரலாற்றில் எப்போதோ நடந்த நிகழ்வு இப்போது பாஜகவினரால் சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. அனைத்தும் வரும் தேர்தலை கணக்கிட்டுச் செய்யப்படுகிறது.

கடந்த எமர்ஜென்சியைப் போல், இப்போது எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறைக்குள் வைக்கப்படவில்லை, ஆனாலும் நிலைமை மோசமாகவும், அச்சம் சூழ்ந்தும், மக்கள் அச்சுறுத்தும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார்கள், மக்கள் எது குறித்தும் பேசுவதற்கு அஞ்சுகிறார்கள். மத்திய அமைச்சர்கள் கூட விதிவிலக்கு இல்லை. இந்தச் சூழல் இந்திராகாந்தி காலத்தில் இருந்த எமர்ஜென்சியைக் காட்டிலும் மோசமாக இருக்கிறது.

இப்போதுள்ள பாஜக அரசில் பல்வேறு மூத்த பத்திரிகையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு அவர்கள் அந்நிறுவனத்தின்மூலம் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். இன்றைய சூழல் மிகவும் மோசமாக இருக்கிறது. ஊடகங்கள் முழுவதுமாக மக்களுக்குத் தவறானவற்றை சித்தரிக்கும் தோற்றத்தை உண்டாக்குகின்றன

தற்போதைய ஆட்சி குறித்த நாட்டு மக்களின் உணர்வு, யஷ்வந்த் சின்ஹாவின் குரலாக வெளிப்பட்டிருக்கிறது.

இப்போது சொல்லுங்கள்… எமர்ஜென்சியை இருண்டகாலம் என்றால், இதை (ஜனநாயகம்) மருண்ட காலம் எனலாமா?

what about today?