நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதற்கு இன்னும் நான்கைந்து மாதங்கள் இருக்கின்றன.
ஆனாலும் அரசியல் களம் இப்போதே அதற்கான கொதிநிலையை அடைந்து விட்டது.
40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து, நாடாளுமன்றத் தேர்தல் மைதானத்தில் முதல் பந்தய வீரனாகக் களம் குதித்துள்ளது அதிமுக.
நாடுமுழுவதும் மோடி அலை வீசுவதாகப் பலர் புகழ் பாடிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் தனக்கான அலையை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கிவிட்டார் ஜெயலலிதா.
நாளை காலை (டிச-15 ஞாயிறு) நடைபெற உள்ள பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்ததுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
டெல்லி சென்று ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து, இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் பிரச்சாரப் பீரங்கியாகத் தான் பணியாற்றப் போவதை பிரகடனம் செய்துவிட்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
பாமகவும் அதே பாணியில் சென்று, பாஜக ஜோதியில் ஐக்கியமாகி விட்டதற்கான அறிவிப்பை எந்த நேரத்திலும் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக கூட்டணிக் கணக்குகள் தொடங்கிவிட்டன.
இதில், பெருக்கல் யார், கழித்தல் யார் என்பது சில தினங்களில் தெரிந்துவிடும்.
சில தினங்களுக்கு முன்னர் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர், குரு, பிதாமகர், நண்பர் இப்படிப் பலவாறாகப் “புகழ”ப் படும் சோ மகனின் திருமணத்தில் திமுக தலைவர் கருணாநிதி நேரில் கலந்து கொண்டது, பல்வேறு அரசியல் யூகங்களுக்கு இடமளித்தது.
திமுகவையும், கருணாநிதியையும் விமர்சிப்பதையே தனது பத்திரிகையின் பாடுபொருளாக வைத்திருப்பவர்தான் சோ என்றாலும், கருணாநிதியுடன் தனிப்பட்ட முறையில் எப்போதுமே அவர் நட்புபாராட்டி வருபவர் என்பது அனைவரும் அறிந்த செய்திதான்.
இருப்பினும், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதுவும் பாரதிய ஜனதா தலைவர்கள் பலர் பங்கேற்கும் திருமணத்தில், கருணாநிதி கலந்து கொண்டது கவனத்தை ஈர்த்ததில் வியப்பில்லை. அத்திருமணத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்காததையும் எதார்த்தமான நிகழ்வாகக் கருதிவிட முடியாது.
இதனால், பத்தாண்டு கால நண்பனாக இருந்த காங்கிரசைக் கழற்றிவிட்டு, பாஜகவின் பக்கம் நெருங்க திமுக திட்டமிட்டு வருவதாக எழுந்துள்ள அரசியல் கணக்குகளைப் புறந்தள்ளி விடுவதற்கில்லை.
இந்த நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தான் பாரதிய ஜனதாவின் பிரதானப் பாடுபொருளாக இருக்கும்.
திமுகவைக் கூட்டணியில் வைத்துக் கொண்டு, பாஜகவினால் அதனை உரத்துப் பேச முடியுமா என்ற கேள்வியிலும் அர்த்தமிருக்கிறது.
அப்படியே திமுகவுக்கும், பாஜவுக்கும் கூட்டணி அமைந்தாலும், அது நெருடலில்லாத உறவாக நீடிக்க முடியாது என, இருதரப்பைச் சேர்ந்தவர்களுமே கருதுகின்றனர். அதே நேரத்தில், நாடு முழுவதும் பாரதிய ஜனதாவுக்கு செல்வாக்கு அதிகரித்திருப்பதாகக் கருதப்படுவதால், காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி சேர்வதைவிட, பாரதிய ஜனதாவுடன் சேர்வதையே, திமுக மாவட்டச் செயலலாளர்கள் பலரும் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
நாளை காலை (டிச-15 ஞாயிறு) சென்னையில் நடைபெற உள்ள அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் அனைவருமே தங்களது கருத்தைத் தெரிவிக்க உள்ளனர். முன்னதாக சனிக்கிழமை மாலை இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதியும், பொருளாளர் ஸ்டாலினும், கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் கருத்தைக் கேட்டறிய உள்ளதாகவும் தெரிகிறது.
இதனிடையே, பாரதிய ஜனதா தலைவர் அருண்ஜெட்லியை, திமுக மூத்த தலைவர் டி.ஆர் பாலு சந்தித்ததாகவும், இதில், கூட்டணி ஏற்படுவதற்கான சுமுக முடிவு எட்டப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த திமுகவை அருகில் வைத்துக்கொண்டு, காங்கிரஸ் அரசுக்கு எதிரான முழக்கங்களை முன்வைக்க முடியாது என்ற தயக்கமே அதற்குக் காரணம்.
இந்த நிலையில், தேமுதிகவை இணைத்துக் கொண்டு, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற கட்சிகளுடன் தேர்தலைச் சந்திக்க திமுக முடிவு செய்யவாய்ப்பிருக்கிறது.
தமிழகத்தில் எ
இதனால், தனித்துவிடப்படும் காங்கிரஸ், தேமுதிகவைச் சேர்த்துக் கொள்ள முயற்சிப்பது, அமையவில்லை என்றால் தனித்தே போட்டியிடுவது என முடிவெடுக்கக் கூடும்.
ஆக, 2014 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தைப் பொறுத்தவரை இருமுனைப் போட்டியாக இருக்காது என்பது தெளிவாகி விட்டது. அது திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என நான்கு முனையாக இருக்குமா அல்லது தேசியக் கட்சிகளில் ஒன்று ஏதோ ஓர் அணியில் இடம்பெற்று மூன்று முனையோடு நிற்குமா என்பது சில தினங்களில் தெரிந்துவிடும்.
பாஜக தனது கூட்டணி குறித்து திங்கள் கிழமை (டிச–16) அறிவிக்க இருப்பதால் அப்போது, தமிழக அரசியல் போர்க்களத்தில் எத்தனை முனைகள் என்பது தெரிந்துவிடும்.
அப்போது, கூட்டணி குறித்த கொள்கைக்கணக்குகள் அனைத்தையும், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற ஒற்றை வாசகத்தைப் பயன்படுத்தி, ஒரே வீச்சில் கலைத்துப் போட்டுவிடும் அரசியல் கட்சிகளின் உச்சக்கட்ட சாகசக் காட்சிகளையும் நாம் கண்டு ரசிக்கலாம்.
மகத்தான இந்த மக்களாட்சியில், மக்கள் என்ற அப்பாவிகளுக்கு வழங்கப்படும் ஒரேவாய்ப்பு அதுமட்டும்தானே?
மேனா.உலகநாதன்