புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்

மூத்த தமிழறிஞர் புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் புலவர் மாமணி விருதை வழங்கி சிறப்பித்தார்.

சிவகங்கை எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் 30.12.2018 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முனைவர் சேது குமணனுக்கு கல்வி மாமணி விருதும், புலவர் ஆறு.மெ.மய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருதும், புலவர் முத்து சண்முகத்திற்கு, கவிமாமணி ரெ.முத்து கணேசனார் விருதும் வழங்கப்பட்டன.

புலவர் மாமணி பட்டம் பெற்ற புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர், சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளம் கிராமத்தில் பிறந்தவர். திருவையாறு தமிழ்க் கல்லூரியில் புலவர் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழ் இலக்கண மாமேதே கி.வே.கோபாலய்யரின் மாணாக்கர் ஆவார். தமிழும், சைவமும் தமது இரு கண்களாக கொண்டு வாழ்ந்து வரும் புலவர் மெய்யாண்டவர், தமிழாசிரியராகவும், தலைமையாசிரியராகவும் பின்னர் வட்டாரக் கல்வி வளர்ச்சி அலுவலராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். 

நிகழ்ச்சிக்கு வந்தோரை, எழுத்தாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பேராசிரியரும் எழுத்தாளருமான அய்க்கண், செயலாளர் கவிஞர் கா.நாகப்பன், பொருளாளர் பேராசிரியர் நா.சுப்பிரமணியன் ஆகியோர் வரவேற்று சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் காப்பிய கவிஞர் மீனவன் வாழ்த்துரை வழங்கினார். கிராமியப் பாடல்களைப் பாடும் வெற்றியூர் தமயந்தி, தமது சகோதரர் புலவர் மெய்யாண்டவரை பாராட்டி கவிதை பாடினார்.

விருதுகளை வழங்கி உரையாற்றிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், அனைவரையும் பாராட்டினார். கஜாபுயலால் பாதிக்கப்பட்டோர் துயரம் தீர வேண்டும் என்பதே இந்தப் புத்தாண்டில் தமது சிந்தனையாகவும், கோரிக்கையாகவும் இருப்பதாக அடிகளார் தமது உரையில் குறிப்பிட்டார்.

ஒளிப்பதிவுகள் சில…