மம்தா வியூகம்: மலருமா மாற்றணி?: செம்பரிதி

பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்கும் பணியில் மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பாணர்ஜி மும்முரமாக களமிறங்கி உள்ளார்.

டெல்லியி்ல் முகாமிட்டுள்ள அவர் செவ்வாய்க்கிழமை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், லாலு பிரசாத்தின் மகள்  மிசா பார்த்தி, சிவசேனா எம்பி, திமுக எம்பி கனிமொழி என பலரையும் சந்தித்துள்ளார். இன்று (புதன்கிழமை) பாஜகவில் இருந்து ஒதுங்கி இருக்கும் அதிருப்தியாளர்களான யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, சத்ருஹன் சின்ஹா போன்றோரை சந்திக்க உள்ளார். சோனியாவின் உடல்நிலை தேறிய பின்னர் அவரையும் சந்திக்க இருப்பதாக கூறியுள்ளார். சாமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி என மம்தாவின் சந்திப்பு நீளும் எனத் தெரிகிறது. அண்மையில் பாஜக, காங்கிரஸ் இரண்டுமே அல்லாத ஓர் அணியை உருவாக்க வேண்டும் எனக் கூறி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் மம்தாவைச் சந்தித்தது குறிப்பிடத் தக்கது. மம்தா தற்போது எடுத்துவரும் முயற்சி அதன் தொடர்ச்சியானதா, அல்லது காங்கிரசின் பின்னால் பாஜகவுக்கு அணி திரட்டும் முயற்சியா என்பது குறித்து தெளிவான காட்சிகள் தென்படவில்லை .இதனிடையே, பாஜகவையும், மத்திய அரசையும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருக்கும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, விரைவில் டெல்லி செல்ல இருப்பதாக கூறியுள்ளார். பாஜகவுக்கு எதிராக பேசும் அனைத்துத் தலைவர்களுமே, மாநில உரிமைகளுக்கான அரசியலை மையப்படுத்தி பேசுவதைப் பார்க்க முடிகிறது. பாஜகவுக்கு எதிரான இந்த புதிய அரசியல் அலை வலுவடைந்தால், மத்தியில் மாநில அளவிலான அரசியல், அதிகாரப் பங்கெடுப்பை உறுதிப்படுத்தும் ஓர் அரசு மீண்டும் அமைய வாய்ப்பிருக்கிறது. அதற்கு அரசியல் கட்சிகள் அளவில் ஏற்பட்டுள்ள இந்த உணர்வலை, மக்கள் திரள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். மாறாக, மோடியின் டிஜிட்டல் இந்தியா மகுடியில் நடுவயதினரும், இளைஞர்களும் மீண்டும் மயங்கி விட்டால், இந்தியாவின் எதிர்காலம் என்பது எல்லையற்று நீளும் இருட்டாகவே இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.