Chemparithi’s Special Article
_________________________________________________________________________________________________
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத பாடுபொருளாக அண்மைக்காலமாக உருவெடுத்து வருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
“நமக்கு நாமே – விடியல் மீட்புப் பேரணி” என்ற பெயரில் அவர் நடத்தி வரும் சுற்றுப்பயணம், ஸ்டாலினின் அரசியல் வாழ்வில் இதுவரை இல்லாத அளவிற்கு அவரைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அதற்கான உத்திகளை வகுத்துக் கொடுக்க பெரும் படையே பின்னணியில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களும், இன்னபிற தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் அவருக்கு இதைச் சாத்தியப்படுத்தி இருக்கலாம். அதில் தவறும் இல்லை.
எனினும் அவற்றையெல்லாம் தாண்டி, பல்வேறு தரப்பு மக்களையும் சந்திக்கும் ஸ்டாலின், அவர்களது பிரச்னைகளைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதை நாம் உணர முடிகிறது. இந்தப் பயணத்தைப் பொறுத்தவரையில், விமர்சனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு, ஸ்டாலினின் உழைப்பு பொருட்படுத்தக் கூடிய ஒன்று என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
70 களின் மத்தியில் அரசியலுக்குள் பிரவேசித்த ஸ்டாலின், அவசரநிலை கால நெருக்கடி போன்ற கடுமையும், கசப்பும் நிறைந்த அனுபவங்களைச் செரித்துக் கடந்த பின்னர்தான் பொதுவெளிக்கு வர முடிந்தது. 45 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை என்பது அத்தனை சுருக்கமானதோ, எளிதானதோ அல்ல. இந்த 45 ஆண்டுகாலத்திலும் அவர் அரசியலை விட்டு ஒதுங்கியோ, விலகியோ நின்றதில்லை.
80கள் முழுக்க கட்சிப்பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஸ்டாலின், தலைவரின் மகனாக இருந்தும் இளைஞரணி என்ற எல்லைக்குள்ளேயே களமாடி வந்தார். 90களில் அடுத்த கட்டத்துக்கு வந்த ஸ்டாலின் ஒரு கட்டத்தில் சென்னை மாநகராட்சியின் மேயராகப் பதவியேற்றார். அந்தப் பதவியில் இருந்த போது, நிர்வாக ரீதியாக அவர் மேற்கொண்ட பல பணிகள் கவனத்தைப் பெற்றன. பாலங்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளை, அதிகாலை 7 மணிக்கே நேரில் சென்று பார்வையிடும் பழக்கம் அப்போதே அவருக்கு இருந்தது.
பின்னாளில் எம்.எல்.ஏவாக, அமைச்சராக அவர் ஆற்றிய பணிகளிலும் கூட (ஒப்பீட்டளவில்) மிகப்பெரிய குறைகளைக் கூறிவிட முடியாது.
ஆனாலும், கட்சியினரை அவர் நடத்துகின்ற விதம், மக்களை அணுகுகின்ற முறை, நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த முடிவுகள் என அவர் மீது வைக்கப்படும் பல விமர்சனங்களை அர்த்தமற்றவையாகக் கருத முடியவில்லை.
அவற்றையெல்லாம் விட, பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு திமுகவின் கருத்தீர்ப்பு மையமாக கலைஞர் கருணாநிதி விளங்கியதைப் போல, ஸ்டாலினால் அந்த இடத்தை எட்டிப் பிடிக்க முடியவில்லை என்ற விமர்சனமே அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் திமுகவைப் போன்ற ஓர் இயக்கத்தை வழிநடத்த வெறும் நிர்வாகத் திறன் மட்டும் போதுமானதல்ல. தத்துவார்த்த ரீதியான தலைமைப் பாங்கும் அவசியமானதாகும்.
கட்சியின் முக்கிய இடத்தைப் பிடிப்பதில் ஸ்டாலினுக்கு இருக்கும் உண்மையான முட்டுக் கட்டை கருத்துரீதியான அவரது போதாமையே தவிர, கருணாநிதி அல்ல. அப்படியே ஒருவேளை இருந்தாலும் கூட, தக்கனவற்றை காலம் தகுந்த இடத்தில் வைக்கும் என்ற இயற்கையின் பரிணாமக் கோட்பாட்டின் படி ஸ்டாலினின் முக்கியத்துவத்தை யாராலும் தடுத்துவிட முடியாது.
அந்த வகையில், தற்போதைய சுற்றுப்பயணம் திமுகவின் கருத்தீர்ப்பு மையமாக ஸ்டாலின் உருவெடுக்க உதவினால், அதுவே அவருக்குக் கிடைத்த வெற்றிதான்.
எனினும், திராவிட இயக்கம் தற்போது எதிர்நோக்கி இருக்கும் அரசியல் ரீதியான பல கேள்விகளுக்கும், சவால்களுக்கும் விடைகாண இந்தப் பயணம் உதவுமா என்பதுதான் அதைவிட முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
இந்தக் கேள்விக்கு பளிச்சென்ற பதில் நமக்குக் கிடைக்கவில்லை.
காரணம் திராவிட இயக்கம் எதிர்கொண்டுள்ள சிக்கல் என்பது தற்போது ஜெயலலிதா மட்டுமல்ல! மோடி என்ற முகமூடி அணிந்து இந்தியா முழுவதும் அணிவகுக்கத் தொடங்கி இருக்கும் சங்கப் பரிவாரங்களின் பண்பாட்டு ரீதியான படையெடுப்பும் கூடத்தான்.
இந்திய வரலாற்றில் பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள் கொல்லப்படுவது போன்ற நிகழ்வுகள் முன்னெப்போதும் நிகழ்ந்தது கிடையாது. மாட்டிறைச்சியின் பெயரால் வன்முறைகளும், கொலைச் செயல்களும் அரங்கேறியதில்லை.
“ஈஸ்வர அல்லா தேரே நாம்” என்று சொன்னதற்காக காந்தியடிகள் சுடப்பட்ட நிகழ்வை, இந்துத்துவவாதிகள் கையில் அதிகாரம் கிடைத்தால், இவையெல்லாம் நடக்கும் என்பதற்கான எச்சரிக்கையாகவே இப்போது புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
65 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அதிகாரம் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதன் விளைவுகள்தான் தாத்ரியில் இக்லக் என்ற இஸ்லாமியர் கொல்லப்பட்டதும், கர்நாடகாவில் கல்பர்கி என்ற பகுத்தறிவுச் சிந்தனையாளர் சிதைக்கப்பட்டதுமாகும்.
எழுத்தாளர்கள், படைப்பாளிகள், திரைக்கலைஞர்கள், விஞ்ஞானிகள் என எல்லோரையும் இத்தகைய நிகழ்வுகள் அச்சப்பட வைத்துள்ளன. தங்கள் வாழ்நாள் சாதனைகளுக்காக அளிக்கப்பட்ட விருதுகளையே திருப்பி அளித்து வருகிறார்கள். மதச்சார்பற்ற நாடு என்ற மகத்தான அடையாளத்தை இந்தியா இழக்கத் தொடங்கி இருப்பதாக அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஆனால், காவி பயங்கரவாதத்தின் தாக்கம், தமிழகத்தை மெல்ல நெருங்கி வருவதை உணர முடிகிறது. கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அண்மைக் காலமாக நிகழ்ந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் அதற்குச் சான்று. திராவிடம் எனும் பகுத்தறிவுக் கருத்தியல் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் தமிழ் மண்ணை இந்துத்துவவாதிகள் குறி வைத்திருப்பதையும் இவற்றின் மூலமாக அறிய முடிகிறது. தங்களது காவிப் பயிரை தமிழ் மண்ணில் நட்டு வளர்ப்பதற்கு தருணம் பார்த்துக் காத்திருக்கும் காவிப்படையுடன் கை கோர்த்துக் களமாடத் தயாராகி வருகின்றன, இங்குள்ள சாதியவாத சக்திகள்.
திராவிட இயக்கத்தின் வெகுசன அரசியல் திறட்சியாக எஞ்சி நிற்கும் திமுக எதிர் கொள்ள வேண்டிய உண்மையான அரசியல் சிக்கல் என்பது இந்துத்துவவாதிகளின் இத்தகைய அச்சுறுத்தல்தான்.
இதை ஸ்டாலின் உணர்ந்திருக்கிறாரா?
விடியல் மீட்புப் பயணத்தின் போது, திமுகவில் இருப்பவர்கள் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள் தான் என்று கூறுவதால் மட்டும், காவிக் கும்பலின் வேலைத்திட்டத்தை கூர்மழுங்கச் செய்துவிட முடியுமா?
அவர் சந்தித்த இளைஞர்களிடம் இந்துத்துவா குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வியே முன்வைக்கப்பட்டதாகத் தெரியவில்லையே!
ஆதிக்க சக்திகளுக்கு திமுக இப்போதும் சிம்ம சொப்பணமாகத் திகழ்வதற்கு அதன் வாக்குவங்கிப் பலம் மட்டுமே காரணமல்ல. கருத்தியல் சார்ந்த அதன் தத்துவார்த்த அடித்தளமே காரணம். அடித்தளத்தை ஆட்டம் காண வைத்துவிட்டு, அரங்கை மட்டும் அலங்கரித்து என்ன பயன்?
திமுக என்பது தேர்தலைச் சந்திக்கும் அரசியல் கட்சிதான். அனைத்துத் தரப்பினரின் வாக்குகளும் அதற்குத் தேவைதான். ஆனால் அதையெல்லாம் தாண்டி ஆதிக்க சக்திகளுக்கு எதிரான தனது போராட்டத்தை எப்போதுமே அது விட்டுக் கொடுத்தது இல்லை.
“சோ”க்களுக்கும், சு.சாமிகளுக்கும், தினமணிகளுக்கும், தினமலர்களுக்கும் யார்மீதும் வராத கோபம் கருணாநிதி மீது மட்டும் வரக் காரணம் என்ன?
குஜராத் கலவரத்தைக் காட்டிலும் கொடும் நிகழ்வுகளை அவர் அரங்கேற்றி இருக்கிறாரா? வியாபத்தை விட விஸ்வரூப ஊழல்களை அவர் புரிந்திருக்கிறாரா? சுதந்திர இந்தியாவின் முதல் முறைகேடாக அறியப்படும் முந்த்ரா ஊழலை கருணாநிதிதான் தொடங்கி வைத்தாரா? எதுவும் இல்லை. இந்திய அரசியல்வாதிகள் பலர் மீதும் இருப்பதைப் போல் அவர் மீதும் புகார்கள் கூறப்பட்டன. சொல்லப் போனால் அவற்றில் எதிலும் அவருக்குத் தண்டனை கூட விதிக்கப்படவில்லை.
ஆனாலும் கருணாநிதி மீது மட்டும் ஏன் இத்தனை கோபம்?
திராவிட இயக்கம் என்ற கருத்து வீரியத்தின் கடைசி எச்சம் அவர் என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு மதங்களுக்கும், கடவுளுக்கும், சாதிகளுக்கும் எதிராகப் பேசும் கருத்தாண்மை மிக்க தலைவராக கருணாநிதியை மட்டும்தானே காண முடிகிறது. எவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் பகுத்தறிவுச் சிந்தனைக்கான பேரரசியலின் குறியீடாக கருணாநிதி இன்றும் திகழ்கிறார். இது சூத்திரனின் ஆட்சிதான் என்ற சூளுரையோடு ஆட்சி நடத்தும் அவரது சுயமரியாதைத் துணிச்சலே ஆதிக்க வாதிகளின் நிம்மதியைக் குலைக்கிறது.
தனது நாற்பத்தைந்து ஆண்டுகால அரசியல் வாழ்வில் மு.க.ஸ்டாலின் இதையெல்லாம் கவனிக்காமல் இருந்திருக்க சாத்தியமில்லை. ஆனாலும், அவரைச் சுற்றி உள்ளவர்கள் ஏற்படுத்தும் தேர்தல் காலப் பரபரப்பு அச்சத்தாலும், வாக்குகளைத் தவற விட்டுவிடக் கூடாது என்ற பதற்றத்தாலும் விடியல் மீட்புப் பேரணியை வெறும் வாக்குச் சேகரிப்பதற்கான வழிமுறையாகச் சுருக்கி இருக்கக் கூடும். எனினும் அவருக்கான அரசியல் எல்லை அது மட்டுமல்ல என்பதை அவர் உணர வேண்டும்.
வாக்கு வங்கி அரசியல் களத்தில் வேண்டுமானால் ஜெயலலிதாவை உங்களது எதிரியாககக் கருதலாம். ஆனால், திமுக வட்டாட வேண்டிய அரசியல் களம் அத்துடன் முடிந்துவிடுவதல்ல.
பெரியார், அண்ணா காலத்தை விடவும் இப்போது திராவிட இயக்கத்தின் தேவை முக்கியமாகி இருக்கிறது. அப்போது வெறும் சாமியார்களாக இருந்தவர்கள் இப்போது அமைச்சர்களாகவும், அரசாள்பவர்களாகவும் அரியணை ஏறி இருக்கிறார்கள்.
எனவே, திமுக தனது கொள்கை முனையை மீண்டும் கூர் தீட்ட வேண்டிய காலம் இது. வெறும் கார்ப்பரேட் உத்திகளால் மட்டும் காலத்தை வென்றுவிட முடியாது. இயக்கத்தை கருத்து ரீதியாக மீள்கட்டமைப்புச் செய்ய வேண்டும். அதற்கு சிதறிக் கிடக்கும் திராவிடச் சிந்தனையாளர்களை ஒருங்கிணைத்து, அறிவுப் பட்டறைகளை உருவாக்கிப் பயிற்சிகள் அளித்திட வேண்டும். முன்னெப்போதையும் விட இளைஞர்கள் மத்தியில் சாதி ரீதியான மூட இணக்கமும், வெறியுணர்வும் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. திராவிட இயக்கம் விட்ட இடைவெளியை சாதியவாதிகள் நிரப்பி வருகிறார்கள். அதை இனம் கண்டும், இடம் கண்டும் தகர்த்தெறியும் ஆற்றல் திராவிட இயக்கத்திற்கு, குறிப்பாக திமுகவுக்கு மட்டுமே உண்டு.
எனவே விடியல் மீட்பு என்ற முழக்கத்தை, வெறும் அதிமுக ஆட்சிக்கு எதிரான முழக்கமாகச் சுருக்காமல், தமிழ்ச் சமூகத்தின் ஒட்டுமொத்த விடியலுக்கான மீட்புப் பிரகடனமாக விரிவு படுத்த வேண்டும் என்பதே திராவிட இயக்க ஆர்வலர்களின் பெரும் விருப்பமாக இருக்கிறது.
புரிந்து கொள்வாரா ஸ்டாலின்?
_________________________________________________________________________________________________