அரசியல் பேசுவோம் – 17 – ராம்குமார் மரணம் எழுப்பும் கேள்வியின் பயங்கரம்: செம்பரிதி

Arasiyal pesuvom – 17

__________________________________________________________________________________

ஒருவழியாக அந்த உண்மையின் உயிர் பறிக்கப்பட்டு விட்டது.

 

பொதுவாகவே தற்கொலை என்பது அவர்களாகவே தேடிக் கொள்ளும் முடிவாக இருப்பதில்லை. அது ஒரே நாளிலும் நடந்துவிடுவதில்லை. சுற்றி இருக்கும் சூழல் நெருக்கடியே ஒரு நபரை தற்கொலை எனும் விளிம்பிற்குத் தள்ளுகிறது. அப்படிப் பார்த்தால் தற்கொலை என்பது இந்தச் சமூகமும், அதன் அமைப்பும் சேர்ந்து நிகழ்த்தும் ஒரு படுகொலையே!hands

 

அந்தவகையில், ராம்குமார் மின்கம்பத்தை வாயால் கடித்துத்தான் இறந்தார் என்றே வைத்துக் கொண்டாலும், அவர் தற்கொலைக்கு தள்ளப்பட்டார் என்பதுதானே அதன் மறுபக்கச் செய்தி. மற்றவர்கள் நம்மைக் கொல்வதற்கு முன்னர் நாமே இறந்துவிடுவோம் என்ற நிலையில் தேர்வு செய்யப்படுவதுதானே அய்யா தற்கொலை. சட்டம் வேண்டுமானால் தற்கொலையையும், கொலையையும் பிரித்துப் பார்க்கலாம். ஆனால், மானுட அறப்படி தற்கொலையும், ஒரு கொலையே!

 

சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் சுவாதி என்ற பெண் கொல்லப்பட்டது முதல் ராம்குமார் மரணம் வரை, சட்டரீதியாகவும், சமூக ரீதியாகவும் எழுந்து நிற்கும் கேள்விகளுக்கும் எந்தக் கேள்விக்கும் இதுவரை தெளிவான விடை கிடைக்கவில்லை. இனியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான முன்னுதாரணங்களும் நம்மிடம் இல்லை.

 

தமிழகத்தில் உண்மையான காரணங்கள் அறியப்படாத மரணங்களும், படுகொலைகளும் நடப்பது முதல்முறையல்ல. கடந்த சில ஆண்டுகளாக அவற்றின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பது மட்டுமே அண்மைக்கால முன்னேற்றம்.

 

கோகுல்ராஜ் கொலைவழக்கு முடியுமுன்னரே அதை விசாரித்த விஷ்ணுப்பிரியா என்ற காவல்துறை அதிகாரி இறந்து விட்டார். அது தற்கொலை அல்ல என்ற அவரது பெற்றோரின் குற்றச்சாட்டு, இன்னும் அப்படியே அந்தரத்தில்தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது சுவாதி கொலை வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வருமுன்னரே, ராம்குமார் இறந்துவிட்டார். இதற்கு இடையே உடுமலைப்பேட்டை சங்கர் கொல்லப்பட்டது போன்ற நிகழ்வுகள் வேறு.

 

கோகுல்ராஜ், விஷ்ணுப்ரியா, உடுமலை சங்கர், ராம்குமார் எனத் தொடரும் மரணங்களில் உள்ள ஒற்றுமை என்ன என்பது அனைவரும் அறிந்ததே. இந்த மரணங்களுக்கான உடனடிக் காரணிகள் வேறாக இருக்கலாம். ஆனால், இவை அனைத்தின் அடியாளத்திலும் அச்சுறுத்தக் கூடிய அழுத்தமானதொரு சமூக நீரோட்டம் இருப்பதை மறுக்க முடியாது.

 

எளிய மக்களை, வலியவர்களிடமிருந்து பாதுகாப்பதற்கான வாய்ப்பு மற்ற எந்த அரசியலமைப்பைக் காட்டிலும், ஜனநாயகத்தில் அதிகம் உள்ளது என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால், அண்மைக் காலமாக இந்தியத் துணைக் கண்டத்தின் அளவிலும், தமிழகத்திலும் நிகழ்கின்ற இதுபோன்ற மரணங்களைப் பார்க்கும் போது, எளிய மக்களுக்கான பாதுகாப்பை வழங்குவதற்கான திண்மையும், அறமும் ஜனநாயகம் என்ற இந்த அமைப்புக்கு இருக்கிறதா, இருக்குமா என்ற அடிப்படையான கேள்வி எழத் தொடங்கி உள்ளது. ஜனநாயகத்தின் மீது இத்தகைய அவநம்பிக்கை ஏற்படுவது என்பது மிகவும் ஆபத்தானது.

 

ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் எனப்படும் நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிநிர்வாகம், பத்திரிகைத்துறை ஆகிய அமைப்புகள், சமூக வல்லாதிக்க சக்திகளின் விருப்பத்திற்கேற்ப வளைந்து கொடுக்கும் போக்கு அதிகரித்து விட்டதை அறிவு நேர்மையும், அற உணர்வும் உள்ள எவராலும் மறுக்க முடியாது. அவற்றின் விளைவாகவே எளிய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் இதுபோன்ற மரணங்கள், – அது கொலையோ, தற்கொலையோ எதுவாக இருந்தாலும் – மிக எளிதாகவே கடந்து செல்லப் படுகிறது. அதுமட்டுமல்ல, அதிகார அமைப்பின் தரப்பு சொல்வதை மட்டுமே எதிரொலித்து, சமூகத்தின் பொதுப்புத்தியிலும் அது நிலைநிறுத்தப்பட்டும் விடுகிறது.

 

ராம்குமாரின் மரணத்திலும் இப்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் தனது தரப்பைச் சொல்வதற்கான வாய்ப்பு மட்டுமல்ல, அவகாசம் கூட வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. வழக்கு விசாரணை தொடங்கு முன்னரே, ராம்குமாரின் கதை முடிந்து விட்டது.

 

எளிய மக்களுக்கு ஓரளவேனும் பாதுகாப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளித்து வந்த ஜனநாயக அமைப்பில் எங்கோ பெரும் விரிசல் விழுந்து விட்டதோ என்ற கேள்வியையே இந்த நிகழ்வுகள் நமக்குள் ஏற்படுத்துகின்றன.

 

ராம்குமாரின் மரணம் எழுப்பும் இந்தக் கேள்வியின் பயங்கரம் எத்தனை பேருக்கு உறைத்திருக்கும்?

 

_____________________________________________________________________________________