அரசியல் பேசுவோம் – 18 – தமிழகத்திற்கு இயற்கை சுவாசம் திரும்புவது எப்போது? : செம்பரிதி

Arasiyal pesuvom – 18

__________________________________________________________________________________

 

jaya“ராகுல்காந்தி, தா.பாண்டியன், வைகோ மாதிரி தலைவருங்க எல்லாம் கூடவா பொய் சொல்லுவாங்க…?”

 
தேநீர்க் கடையில் அன்றாடம் சந்திக்கும் அந்த எளிய  நண்பன் என்னிடம் இப்படிக் கேட்ட போது, என் கையில் இருந்த கண்ணாடிக் குவளையில் நிரம்பி இருந்த தேநீர், திடீரென விஷமாக மாறியது போல் இருந்தது.

 
என்ன சொல்வதென்று தெரியாமல் தலையைக் கவிழ்த்துக் கொள்ள நேர்ந்தது. அறிவுசார் நாணம் என்னைத் தலை குனிய வைத்தது.

 
கேட்டவர் சாமானியர்தான். ஆனால் அவர் எழுப்பிய கேள்வி சாமானியமானதல்ல.
திருமாவளவன் போனார். அதையே சொன்னார்.
சீமான் போனார். அதையே சொன்னார்.

 

தா.பாண்டியன்…. இன்றைக்கு இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்பவர்களில் வயதிலும், அறிவிலும் மூத்த தலைவர். அவரும் வந்து பார்த்து விட்டு அதையே சொன்னார்.

 

இன்னும் ஜி.ராமகிருஷ்ணன், புதியதமிழகம் கிருஷ்ணசாமி என இந்த வரிசை நீள்கிறது.

 

 

இவர்களெல்லாம் போதாது என்று டெல்லியில் இருந்து ராகுல்காந்தி வேறு திடீரெனப் பறந்து வந்தார். அவரும் அதையேதான் சொல்லிப் போனார்.

 

 

இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் அப்பல்லோவுக்கு வந்தார். அச்சரம் பிசகாமல் “முதல்வர் உடல்நலம் தேறி வருவதாக” அப்படியே ஒப்பித்துப் போனார். கூடுதலாக மருத்துவர் ரிச்சர்டிடம் விவரங்களைக் கேட்டறிந்ததாக ஒரு தகவலை சொல்லிச் சென்றார். அத்துடன் அவர் கடமையை முடித்துக் கொண்டு விடாமல், ஆளுநர் வித்யாசாகர் ராவையும் வைகோ சென்று சந்தித்தார். ஆளுநர் எனது நண்பர் என்ற முறையில் சந்திக்க வந்ததாக கூறினார். முதலமைச்சர் உடல்நலம் குன்றியிருப்பதால் துணை முதலமைச்சர், பொறுப்பு முதலமைச்சர் போன்ற தேர்வுகளுக்கோ, நியமனங்களுக்கோ அவசியமே இல்லை என ஆணித்தரமாக சொல்லிச் சென்றார்.

 
ஒருவழியாக திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினும் துரைமுருகன் உள்ளிட்டோருடன் அப்பல்லோ வந்து, மற்றவர்களைப் போலவே அமைச்சர்களிடம் நலம் உசாவிச் சென்றிருக்கிறார்.

 
ஊடகங்களுக்கு இவற்றை ஒளிபரப்புவதில் எந்தச் சங்கடமும் இல்லை. குறுக்கே எந்தக் கேள்வியும் இல்லாமல், அப்பல்லோ வந்து பார்த்துச் செல்லும் “தலைவர்”கள் சொல்லுவதை அப்படியே ஒளிபரப்பும் கடமையை அச்சுப் பிசகாமல், செய்து வருகின்றன. நடிகர் சங்கப் பிரச்னை முதல் நாடாளுமன்ற விவகாரங்கள் வரை, அன்றாடம் தொலைக்காட்சிகளில் வந்து, ஒப்பனை கலையாமல் ஒய்யாரமான வார்த்தைப் போர்களை நடத்திக் காட்டும் வாய்மேடைக் கலைஞர்களும் கூட, முதலமைச்சர் உடல் நலம் தேறி வரவேண்டும் என்ற வேண்டுதலைத் தவிர வேறு எதுவும் பேசுவதில்லை.

 
ஒரு மாநிலத்தின் முதல்வர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், உடல்நலம் குன்றிய நிலையில் மருத்துவ மனையில் இருக்கிறார் என்றால், ஆட்சியை நடத்திச் செல்பவர் யார் என்ற அப்பாவி மக்களின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக இவர்களில் யாரும் கருதவுமில்லை. கவலைப்படவுமில்லை.

 
அப்பல்லோ வாசலில் நின்று பேசிச் செல்லும் தலைவர்களின் வார்த்தைகளை அந்த அப்பாவி மக்கள் இன்னும் கூட நம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

 
கட்சி நிர்வாகிகளோ முதல்வர் உடல்நலம் பெற வேண்டி மண் சோறு சாப்பிட்டும், அலகு குத்தியும் தங்களது “பேரன்பை” வெளிப்படுத்துவதோடு கடமை முடிந்து விட்டதாகக் கருதுகிறார்கள்.

 
முதலமைச்சரின் உடல்நலம் முழுமையாக தேற வேண்டும் என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், முதல்வரைப் பார்க்கவே முடியாத நிலையில் அன்றாடம் அப்பல்லோ வந்து அதிமுக நிர்வாகிகளைப் பார்த்துப் பேசிவிட்டு ஊடக மேடையில் அட்சரம் பிசகாமல் ஒரே மாதிரியான வாசகங்களைப் பேசி நடிக்க வேண்டிய அவசியம் இத்தனை தலைவர்களுக்கும் நேர்ந்தது எப்படி என்பதுதான் புரியவில்லை. இந்த விசாரணையை, இவர்கள் நினைத்தால் அதிமுக முக்கியப் புள்ளிகளிடம் தொலைபேசியிலேயே விசாரித்து விடலாமே…

 
அதற்காக நேரில் வந்து, உள்ளே வாசல் வரை போய், பின்னர் திரும்பி வந்து, ஊடகங்களை கூட்டி, சென்றோம், விசாரித்தோம் என்று ஊரறிய பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் என்னவோ?
டெல்லியில் இருந்து வந்த ராகுல்காந்தி கூட முதல்வரின் உண்மையான உடல்நிலை குறித்து தெளிவான விவரங்கள் எதையும் கூறவில்லையே என்ற சாமானியனின் கேள்விக்கு, ஊடகங்களோ, பத்திரிகைகளோ இதுவரை உரிய பதிலைக் கூறவில்லை. அதைப் பெறுவதற்கான முயற்சியைக் கூட எடுக்கவில்லை.

 
சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவாரியான வாக்குகளை அளித்து, ஆட்சிக் கட்டிலில் அமரவைத்த அந்த அடித்தட்டு மக்களுக்கு உண்மையை அறிந்து கொள்ளும் உரிமை இருக்கிறதா இல்லையா? உங்களுக்கு ஓட்டுப் போடும் நேரத்தில் மட்டும் அவர்கள் வேண்டும். மற்ற நேரங்களில் அவர்கள் மனதில் எழும் எந்தக் கேள்விக்கும் நீங்கள் பதில் சொல்ல மாட்டீர்கள். தப்பித் தவறி யாராவது கேள்வி எழுப்பினால், அதைக் கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று ஆவேச மிரட்டல்கள் வேறு. அப்படி என்றால் வாக்கு என்ற தங்களது உரிமையை உங்களுக்காக அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்களே… அவர்களது ஜனநாயக உரிமைக்கு நீங்கள் சொல்லும் பதிலென்ன…?

 
ஜனநாயக நாட்டில் தங்களை ஆள்பவர்கள் யார், தங்களது அரசை தற்போது நடத்திச் செல்பவர்கள் யார்? என்பது போன்ற கேள்விகளை எழுப்புவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படையான உரிமையாகும்.

 

அதுமட்டுமல்ல, கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக தமிழகமே இனம் தெரியாத அச்சத்திலும், பதற்றத்திலும் மூழ்கி வருவது இவர்கள் யாருமே அறியாததா என்ன?

 
இப்போது ஆவேசமாகவும் ,ஆணித்தரமாகவும் பேசும் வைகோக்களாகட்டும், தா.பாண்டியன்களாகட்டும், சீமான்களாகட்டும் அடித்தட்டு மக்களின் இந்தக் கேள்விக்கு ஒரே ஒரு நேர்மையான பதிலைக் கூறலாமே!
இது ஒருபுறமிருக்க, ராகுல் காந்தி அப்பல்லோ வந்து சென்றது அரசியல் நாகரிகத்தின் உச்சம் என்று பலர் சொன்னதுதான் இந்த நாடகத்தின் உணர்ச்சிகரமான உச்சக்கட்டக் காட்சி.

 
தமிழகத்தில் காணாமல் போய்க் கொண்டிருந்த காங்கிரசை கூட்டணி சேர்த்து, சட்டப்பேரவையில் சில இடங்களைப் பெறவேணும் காரணமாக இருந்த திமுக தலைவர் கருணாநிதியை, அவர் முதுமை கருதியோ, வயது கருதியோ, ஒருமுறை கூட சென்று பார்க்காதவர்தானே ராகுல்காந்தி என்ற இந்த நாகரிக கோமான்!
பாட்டி இந்திராகாந்தியால் ஒருமுறை, அப்பா ராஜீவ்காந்தியால் மறுமுறை என ஆட்சியை இழக்க வைத்த கசப்பான அனுபவங்களையெல்லாம் மறந்து, சோனியாவை தியாகத் திருவிளக்கே என விளித்த கலைஞருக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.

 

இன்னொரு பக்கம் சுப்பிரமணியன் சுவாமி வேறு புறப்பட்டு விட்டார். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து விட்டது. உடனே குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று தனது வழக்கமான ஆட்சிக் கவிழ்ப்பு வேலையை ஆரம்பித்து விட்டார்.

 

முதலமைச்சருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு விட்டால் உடனே ஆட்சியைக் கலைத்து விட வேண்டியதுதானா? அடுத்த கட்டத்தில் இருக்கும் யாரோ ஒருவரை பொறுப்பேற்று நடத்திச் செல்லச் சொல்வதுதானே சரியான அணுகுமுறையாக இருக்கும். அதைச் செய்யாத போது சுப்பிரமணிய சுவாமிகள் இந்த மாதிரி வேலையை ஆரம்பித்து விடுவார்கள் என்பது அதிமுகவையும், தமிழகத்தின் தற்போதைய ஆட்சியையும் நிழலாக இருந்து இயக்குபவர்களுக்கு தெரியாதா என்ன?

 
குறைந்த பட்சம், தங்களை நம்பி வாக்களித்த இந்த மக்களைப் பார்த்து பரிதாபப் பட்டேனும், ஆட்சி நிர்வாகம் முடங்கிவிடாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வலியுறுத்துவதுதான் நேர்மையான அரசியல் வாதிகளின் கடமையாக தற்போது இருக்க முடியும். முதலில் அதிமுகவைக் காலம் முழுவதும் காப்பாற்ற நினைக்கும் தா.பாண்டியன்களும், வைகோக்களும், பழ.நெடுமாறன்களும் அதைச் செய்து, அக்கட்சியையும், ஆட்சியையும் சு.சாமிகளிடமிருந்து காப்பாற்றும் வேலையைப் பார்க்கட்டும். பிறகு தங்களது கருணாநிதி ஒழிப்பு என்ற வாழ்நாள் லட்சியப் பயணத்தைத் தொடரலாம்.

 

ஏனென்றால், தற்போது செயற்கை சுவாசத்தில் இருப்பது முதலமைச்சர் மட்டுமல்ல. தமிழகமும்தான்.

 

_____________________________________________________________________________