முக்கிய செய்திகள்

நிமிர்ந்து நின்ற கிரேக்கம் – இந்தியா பாடம் கற்குமா? : செம்பரிதி

greece1கிரேக்க மக்கள் இப்படி செய்வார்கள் என்று ஐரோப்பிய ஒன்றியமும், மேற்கத்திய வல்லரசு நாடுகளும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

 

மிக மோசமான நெருக்கடியான காலக்கட்டத்திலும் கிரேக்க மக்கள், தங்களை மேலும் அடிமைகளாகவும், பிச்சைக்கார்களாகவும் ஆக்கக் கூடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இல்லை என்று துணிச்சலுடன் நிராகரித்துள்ளனர்.

 

உண்மையிலேயே அவர்களது இந்த முடிவு துணிச்சல் மிக்கதுதான். கடந்த ஜூன் 30ம் தேதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் பெற்றிருந்த கடனில் 10,500 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தி இருக்க வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த கெடு. (இதில் பெரும் பகுதி வட்டி என்பது சொல்லப்படாத தகவல்) ஆனால் கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் மேலும் 2 ஆண்டுகள் தவணையும், கூடுதலாகக் கொஞ்சம் கடனும் கேட்டார். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச நிதியம் மசியவில்லை. அதுமட்டுமின்றி, உரிய காலத்திற்குள் கடனைத் திருப்பிச் செலுத்தாத நாடு என்ற அறிவிப்பை வெளியிட்டு, கிரீஸ் என்ற தேசத்தையே தலைகுனிய வைத்தனர்.

 

அடுத்தபடியாக கிரீஸ் சிக்கன நடவடிக்கையைக் கடைப்பிடித்தால் கடன் பிரச்னை குறித்து பேச்சு நடத்தத் தயார் எனவும் அறிவிக்கப்பட்டது.

 

சிக்கன நடவடிக்கை என்றால் என்ன… மானியங்களை ரத்து செய்வது, வேலையில் இருந்து ஆட்களைக் குறைப்பது, சம்பளத்தைக் குறைப்பது, உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் பொதுத்துறை சேவைகளை பன்னாட்டுத் தனியார் நிறுவனங்களிடம் எந்த நிபந்தனையுமின்றி தாரை வார்த்து விடுவது, இப்படி போர் இல்லாமல், சண்டையில்லாமல், ஆயுதமில்லாமல் அந்த நாட்டையும், மக்களையும் முற்றிலுமாக அடிமைப்படுத்தி விடுவது. அங்குள்ள வளங்கள் எதுவும் அவர்களுக்குச் சொந்தமாக இருக்காது.

 

இந்த நிபந்தனைகளை ஏற்கத் தயாரா என்ற கேள்வி கிரீஸ் மக்களிடம் முன்வைக்கப்பட்டது. அதற்காக கடந்த ஞாயிற்றுக் கிழமை பொதுவாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை ஏற்க முடியாது என நிராகரியுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். மீண்டும் கடன் வேண்டும் என்றால் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனையை ஏற்றுக் கொள்வதாக வாக்களியுங்கள் என்று மற்றொரு தரப்பினர் வேண்டுகோள் விடுத்தனர்.

 

கிரீஸ் மக்களில் பெரும்பான்மையோர், முகத்தில் அறைந்தது போல், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிய முடியாது என மறுத்து வாக்களித்தனர். அதாவது நிபந்தனைகளை ஏற்க முடியாது என 61 விழுக்காட்டினரும், ஏற்க வேண்டும் என 34 சதவீதத்தினரும் வாக்களித்தனர். மீதமுள்ள 5 சதவீதத்தினர் வாக்களிக்கவில்லை.

 

இது துணிச்சலில்லையா?greece2

 

அதனால்தான் கிரீஸ் மக்கள் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு மூலம் புதிய அத்தியாயம் தொடங்கி வைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் பிரதமர் அஸெக்சிஸ் சிப்ரஸ் தெரிவித்துள்ளார்.

 

ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நிதியமைச்சகங்களின் தலைவரோ, போச்சு, நீங்க இதோட நாசமாப் போகப்ப போறீங்க என்ற வகையில் எச்சரித்துள்ளார்.

 

சொந்தநாட்டின் எதிர்கால வளத்தையும், சுயச்சார்பையும் காப்பாற்ற இப்போதைய கசப்பையும், துயரையும் ஏற்க கிரீஸ் மக்கள் தயாராகிவிட்டார்கள். யாருக்கோ வட்டியைக் கட்டுவதற்காக வாழ்நாளைக் காவு கொடுப்பதைவிட, நாட்டின் சுயச்சார்புப் பொருளாதாரத்திற்கு வித்திடுவதற்காக அந்த்த தியாகத்தைச் செய்யலாமே என அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

 

கந்துவட்டியில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பம், ஆண்டுக்கணக்கில் வாங்கிய அசலைவிடப் பலமடங்கு வட்டியாகி விட்டது. இனி அசலை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வதில்லையா… அப்படித்தான் இப்போது கிரீஸ் மக்களும் சொல்லி இருக்கிறார்கள்.

 

கிரீஸூக்கு நேர்ந்த சிக்கல்தான் என்ன?

 

இரண்டாம் உலகப் போரின் போது மிக மோசமான பொருளாதாரச் சீரழிவுக்கு இலக்கான கிரேக்கம், 1950 கள் முதல் 1980 கள் வரையிலான காலக்கட்டத்தில் ஸ்திரமான பொருளாதார வளர்ச்சியைக் காண்கிறது. அதற்குப் பிந்தைய காலத்தில் அதாவது 2000 ஐ ஒட்டிய காலத்தில் மற்ற நாடுகளைப் போலவே உலகமயம் என்ற சுழலுக்குள் சிக்கிய கிரீஸ், பிரமிக்கத் தக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்தததாகக் கருதப்பட்டது. ஆம். அந்த வளர்ச்சியை ஒரு தோற்றப் பிழையாகவே இப்போது பார்க்க வேண்டி இருக்கிறது. காரணம் அந்த வளர்ச்சி, சேவைத்துறை அதாவது தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் பொருளாதாரப் பரிவர்த்தணை சார்ந்தவையாகவே இருந்தன. அதாவது சுமார் 72 சதவீதம் பேர் இந்தத் துறைகளை நம்பியே வாழ்ந்து வரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். 12 சதவீதம் மட்டுமே விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தின் பங்காக சுருங்கி விட்டது.

 

19 வது நூற்றாண்டில், விவசாயம் உள்ளிட்ட சுய உற்பத்தி, கப்பல் போக்குவரத்து, ஏற்றுமதி இவற்றின் மூலம் தனது பொருளாதாரத்தன்மையை உறுதிப் படுத்தி வந்த கிரீஸ், 20ம் நூற்றாண்டின் இறுதியில் (ஜூன், 2000) ஐரோப்பிய யூனியன் என்ற பொருளாதாரப் பெருவலைக்குள் சிக்கிக் கொண்டது. இதன் பின்னர் தகவல் தொழில் நுட்பம் போன்ற சேவைத் துறையே கிரீஸ் பொருளாதாரத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்தது. அதனை முக்கியத் துறையாகக் கருதி கடனை வாங்கி அதனை வளர்த்தது. கடைசியாக கடனாளி நாடு என்ற பெயருடன் தற்போது கலங்கி நிற்கிறது.

 

இதனை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லலாம். அதாவது இப்போது நம் ஊர்களில் சில தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வானளாவிய கட்டடங்களில் இயங்குவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதற்கு நிலம், தண்ணீர், மின்சாரம் இவை அனைத்தும் மிகக் குறைந்த விலையில் நமது அரசுகளால் வழங்கப்படுகிறது. காரணம், இதன் மூலம் நமது பொருளாதாரம் வளர்வதாகவும், வேலைவாய்ப்புப் பெருகுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் நடப்பது என்ன…?

 

அந்தத் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் நமது மக்கள் தொகையில் 2 சதவீதத்தினர் கூடத் தேறமாட்டார்கள். அவர்களுக்கும் பணி உத்தரவாதம் இல்லை. எந்தச் சட்டப் பாதுகாப்பும் இல்லை. 40 வயதாகிவிட்டால் எந்தக் காரணமும் கூறாமல் அந்தப் பணியாளரை வீட்டுக்கு அனுப்பிவிட முடியும். அவர் அதுவரை வாழ்ந்த வாழ்க்கை திடீரெனக் கானல் நீராகும். இது பணியாளர்களின் கதி.

 

சரி அந்த நிறுவனங்களால் நாட்டுக்கு ஏதோ கிடைப்பதாகக் கூறுகிறார்களே… ஒன்றும் கிடைப்பதில்லை. ஏதோ ஒரு நாட்டில் இருப்பவருடன் இங்கிருந்து பேசி, அவர்களுக்குத் தேவையான சில ஏற்பாடுகளைச் செய்யும் வேலைதான் இங்கே பெரும்பாலும் நடப்பது. வேறு சில மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களில் தயாரிக்கப்படுவதற்கும், வெகுமக்களின் தேவைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. அந்த உற்பத்தியும் சில பன்னாட்டு நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே பயன்படுகின்றன. இத்தகைய நிறுவனங்களுக்குத்தான் நமது மண்ணையும், அதில் இருந்து வரும் நீரையும், மின்சாரத்தையும் ஏறத்தாழ இலவசமாகத் தந்து கொண்டிருக்கிறோம். கேட்டால் ஏதோ ஜிடிபி கணக்கெல்லாம் சொல்லி உதார் விடுவார்கள். நமது கைக்கு எதுவும் கிட்டாது.

 

இயல்பான உற்பத்தி முறையாக இருந்து வந்த விவசாயம், இரும்பாலைகள் போன்ற சுயச்சார்புத் தொழிலாதாரங்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதை வெளிப்படையாகவே நாம் காண முடியும்.

 

இதைக் கேட்டால் அப்போதைய மன்மோகன் சிங், ப.சிதம்பரங்களும், தற்போதைய மோடி, அருண்ஜெட்லி பரிவாரங்களும் நம்மை பரிகசிக்கக் கூடும்.

 

அந்தப் பாதையில் போன கிரீஸ் கிறுகிறுத்துக் கீழே விழுந்து விட்டதே என்று கேட்டால், அது வேறு என்பார்கள். இபோதும் நமது ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் சொல்வது என்ன… கிரீஸ் நம் நாட்டில் ஒன்றும் பெரிய அளவில் முதலீடு செய்யவில்லை. அதனால் நமக்கு நேரடி ஆபத்தில்லை என்கிறார். இருக்கலாம். இப்போது பிரச்னை அதுவல்ல. கிரீஸ் போன்ற நாடுகள் நம்பிச் சென்ற பாதையில் தானே நாமும் போய்க் கொண்டிருக்கிறோம். இது நம்மை எங்கே கொண்டு போய்ச் சேர்க்கும் என்பதுதான்.
கிரேக்க மக்கள் ஒருவழியாக விழித்துக் கொண்டார்கள். அண்ணா போன்ற திராவிட இயக்கத் தலைவர்கள் கிரேக்க வரலாறு குறித்தும், அறிஞர்கள் குறித்தும் நமக்கு நிறையவே சொல்லித் தந்திருக்கின்றனர். அவர்கள் காட்டியதைப் போலவே தாங்கள் கம்பீரமும், சுயமரியாதையும் மிக்கவர்கள் என்பதை கிரேக்க மக்கள் இந்த பொதுத்தேர்தலில் அளித்த தீர்ப்பின் மூலம் நிரூபித்திருக்கின்றனர்.

 

கிரீஸ் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகினால் அதன் யூரோ நாணயமும் வெளியேற நேரிடும். அதனால்தான் கிரீஸை ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற அந்நாடுகள், அந்தக் கந்துவட்டிக் கனவான்கள் தயங்குகிறார்கள். அந்தப் பலவீனத்தை கிரேக்க மக்களும் புரிந்து கொண்டனர்.

 

கிரேக்கம் தன் புராதனமான வீரத்தில் இருந்தும், வீரியத்தில் இருந்தும் விவேகத்தைக் கற்றுக் கொண்டது. கிரீஸின் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் சொன்னதைப் போலவே, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேரம் பேசும் துணிச்சலையும், தார்மீக வலுவையும் அவருக்கு அந்த மக்கள் அளித்துள்ளனர்.

 

கிரீஸ் தரும் இந்த எச்சரிக்கையில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ளுமா?

 

chemparithi writes about Greece issue