Thamizharivom – Patitru pathu 3
_____________________________________________________________________________________________________________
பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும், தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர், முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் பயின்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் மதுரகவி எனப் போற்றப்பட்ட பெரும்புலவரும், சைவத்துறவியுமான தவத்திருமதுரகவி ஆண்டவர் சுவாமிகளின் மகள் வயிற்றுப் பேரனுமாவார். மதுரை தமிழ்ச்சங்கத்தில் கற்றுத் தேர்ந்த வெள்ளாடைத் துறவி தவத்திரு நாராயணசுவாமியால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழ் வாரிசுமாவார். சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளத்தில், மெய்யப்பன், சௌந்தரநாயகி (மதுரகவி ஆண்டவர் சுவாமி மகள்) தம்பதியருக்குப் பிறந்த புலவர் மெய்யாண்டவர் தமிழாசிரியராக, தலைமையாசிரியராக, பின்னர் கல்வித்துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். தமிழில் தலைசிறந்த சொற்பொழிவாளரான இவர் செந்தமிழ் இலக்கியங்களைப் படிப்பதும், பரப்புவதுமாக தமது தமிழ்வாழ்வைத் தொடர்ந்து வருகிறார்.
______________________________________________________________________________________________________
பதிற்றுப்பத்து நூல், பழங்காலத் தமிழ் பேசும் மக்களைப் பற்றியும் சேரமன்னர்களைப் பற்றியும் அறிந்து கொள்வதற்குப் பெரிதும் துணை புரிகிறது. இதில் முதல் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. எஞ்சிய பத்துகள் மட்டுமே கிடைத்துள்ளன. இரண்டாம் பத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பாடி, உம்பர்காட்டு ஐந்நூறு ஊர்களையும், முப்பத்தெட்டு ஆண்டுகள் தென்னாட்டு வருவாயில் ஒரு பகுதியையும் பரிசிலாகப் பெற்றார். மூன்றாம் பத்தில் பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌதமனார் பாடியுள்ளார். நான்காம் பத்தில், களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடி நாற்பது நூறாயிரம் பொன்னும் ஆட்சியில் ஒரு பாகமும் பெற்றார்.
ஐந்தாம் பத்தில் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பரிசிலாகப் பெற்றார். ஆறாம் பத்தில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை பாடி ஒன்பது பாடினியார் நச்செள்ளைபாடி ஒன்பது துலாம் பொன்னும், நூறாயிரம் பொற்காசையும், மலை மீது நின்று கண்ணிற்கண்ட நாட்டையும் பரிசிலாகப் பெற்றார். எட்டாம் பத்தில் பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில் கிழார்பாடி ஒன்பது நூறாயிரம் பொற்காசையும், அரசுரிமையையும் பரிசிலாகப் பெற்றார். ஆனால், அவர் அரசுரிமையை மன்னர்க்கே திருப்பி அளித்துவிட்டார். ஒன்பதாம் பத்தில் குடக்க இளஞ்சேரல் இரும்பொறையைப் பெருங்குன்றூர்க் கிழார் பாடி, முப்பத்திரண்டாயிரம் பொற்காசுகளையும் வேறு பரிசில்களையும் பெற்றார்.
சேர மன்னர்களின் நாட்டு வளம், கொடைத்திறன், மக்கள் வாழ்க்கை, படைச் சிறப்பு, மனை மாட்சி முதலியவற்றை இந்நூலால் அறிய முடிகிறது.
தற்போது சேர நாட்டில் அதாவது கேரள மாநிலத்தில் தமிழ் மொழி வழக்கில் இல்லை. மலையாள மொழி பேசப்படுகிறது. தமிழும், வடமொழியம் கலந்து பிறந்தவை தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளுவம் ஆகியவை.
வித்துவான் எம்.நாராயணவேலுப் பிள்ளை பதிற்றுப்பத்துக்கு உரை கண்ட பெரும் புலவர்களில் ஒருவர். அவர் சேரர் மரபுமுறை பற்றிய வரையறை, காலம் முதலியவற்றை ஒரு வரைபடம் மூலம் எளிதாகவும், தெளிவாகவும் வழங்கியுள்ளார். முனைவர். ச.வே.சுப்பிரமணியம் புலவர்கள் பெயர் அவர்களை ஆதரித்த வள்ளல்களாம் சேரமன்னர்கள் பெயர் காலம் முதலியவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
(நிழல் நகலாக இணைக்கப்பட்டுள்ளதைக் காண்க)
இத்தகு வரையறையும், சேர மன்னர் பரம்பரையினர் போரில் வென்ற வெற்றிச் சிறப்பையும், பதிற்றுப் பத்து அழகுமிளிர விளக்கும் பாங்கு நம் விழிகளை வியப்பில் ஆழ்த்துகிறது.
(தொடர்ந்து அறிவோம்)
___________________________________________________________________________________________________________