அரசியல் பேசுவோம் – 1 : செம்பரிதி  (பேசப்படாதவற்றைப் பேசும் புதிய தொடர்)

Chempariithi’s  Arrasiyal Pesuvom-1

 

___________________________________________________________________________________________________________

 

ஏன் அரசியல் பேச வேண்டும்?

 

edit-politics-falgs“அரசியல் எனக்குப் பிடிக்காது” என்று பாவனை செய்வோரும் கூட, அது தொடர்பான தகவல்களைக் கவனிக்க இப்போது ஆர்வம் காட்டுவார்கள்.

 

மாணவர்கள் அரசியலுக்கு வரக் கூடாது எனச் சிலர் அறிவுரை கூறுவர்.

 

இங்கு அரசியல் பேசக் கூடாது என சில தேநீர்க் கடைகளில் எழுதி வைத்திருப்பார்கள்.

 

“உனக்கு எதுக்கு இந்த வயதில் அரசியல் எல்லாம்” என இளைஞர்களை புறந்தள்ளி நிறுத்தப் பார்ப்பார்கள் சில பெரியவர்கள்.

 

ஆனால், இவர்கள் அனைவருமே தேர்தல் வரும்போது மட்டும், “அடுத்து யாரு வருவா தம்பி… ஜனங்க என்ன பேசிக்கிறாங்க” என்று அந்த இளைஞர்களிடமே ஆரூடமும் கேட்பார்கள்.

 

ஆக, அறிவுரீதியாக விழிப்புணர்வு பெற்ற சமூகத்தில் அரசியல் என்பது தவிர்க்க முடியாத தன்னுணர்வு (பிரக்ஞை) என்பதே யதார்த்தம். இதைப் புரிந்தும் புரியாதவர்கள் போல பலரும் இருந்து விடுவதன் விளைவுதான் அத்தனை அரசியல் சீரழிவுகளுக்கும் காரணமாகிறது.

 

அரசியல் என்பது, தேர்தல் காலத்தில் மட்டும் பொழுது போக்குவதற்காக பேசப்படும் வெற்று அரட்டைக்கான கச்சாப் பொருள் அல்ல. சமூக மேம்பாட்டுக்கான கருவியாக அதனைப் பார்க்க வேண்டும் என்ற பாடத்தை எப்போது கற்கப் போகிறோம்…?

 

போகட்டும். தேர்தல் நேரத்திலாவது அரசியல் குறித்து சற்று தீவிரம் காட்டும் மனோபாவம் நமது மக்களிடம் இருப்பதுவரை ஆறுதலடையலாம். ஆனால், அது அய்ந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றத்தைத் தீர்மானிப்பதற்கான வாக்கு வங்கி அரசியல் என்ற அளவிலேயே நின்று விடுகிறது.

 

அதனைத் தாண்டி, ஒரு தேர்தலை அடிப்படை அரசியல் பகுப்பாய்வோடு அணுகுவதற்கு கற்றுக் கொள்ளும் போதுதான், ஒரு சமூகம் அது விரும்பும் தன்னிறைவை அடைய முடியும். மாற்றங்களும் சாத்தியமாகும். அரசியல் பரிணாமம் இல்லாமல், சமூக பரிணாமம் மட்டும் தனித்து நிகழ்வதற்கான சாத்தியமே இல்லை.

 

அந்த வகையில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திப்பதற்கு தீவிரமாகத் தயாராகி வரும் தற்போதைய அரசியல் கட்சிகளின் வரலாற்றுப் பின்னணிகளையும், அக்கட்சிகளை உருவாக்கி, வழி நடத்திய, நடத்தி வரும் அரசியல் ஆளுமைகள் குறித்தும் விரிவாக பார்க்க இருக்கிறோம். பழைய வரலாற்றின் ஊடாக சமகாலத்தை அவதானிக்கும் போதுதான் அதன் பின்னணியில் புதைந்திருக்கும் உண்மையான அரசியல் புரியும். வெகுசன உளவியலில் இதுவரை படிந்திருக்கும் சில பிம்பங்களுக்கும், அவை குறித்த சில உண்மைகளுக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கக் கூடும். அந்த உண்மைகள் இன்றைய தலைமுறையினருக்கு ஓரளவு தத்துவ வெளிச்சத்தைத் தந்தால், அதுவே இத்தொடருக்குக் கிடைத்த பயனும், வெற்றியுமாகும்.

 

முதலில் தற்போதைய ஆளும் கட்சி என்ற வகையில் அதிமுக குறித்தும், அதனை நிறுவிய, மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என்றெல்லாம் அக்கட்சியினரால் மட்டுமின்றி, பொதுவெளியிலும் போற்றப்பட்ட எம்.ஜி.ஆர், குறித்தும் முதலில் பார்க்கலாம்.

 

எம்.ஜி.ஆர் எனும் முரண்பட்ட ஆளுமை

 

mgrநாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் 20ம் நூற்றாண்டு தமிழ்ச் சமூகத்தின் அரசியல் சார்ந்த வரலாறு குறித்துப் பேசும் போது, திராவிட இயக்கத்தின் ஒரு விதமான விளைச்சலாக, முக்கியமான தாக்கத்தையும், பெரும் விளைவுகளையும் ஏற்படுத்திய எம்.ஜி.ஆரைத் தவிர்த்துவிட்டு எதையும் பேச முடியாது.

 

எம்.ஜி.ராமச்சந்திரன் என அறியப்படும் எம்.ஜி.ஆரின் பிறப்பு வளர்ப்பு பற்றிய தகவல்கள் பரவலாக அனைவரும் அறிந்தததுதான். மருதூர் கோபால மேனன் – சத்யபாமா தம்பதிக்கு 1917ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி மகனாகப் பிறந்த எம்.ஜி.ஆரின் இளமைப் பருவம் அத்தனை வளமானதாக இல்லை என்பது தெரிகிறது. இலங்கையின் கண்டி மாவட்டத்தில் உள்ள நாவலப்பிட்டி கிராமத்தில் பிறந்த எம்.ஜி.ஆருக்கு இரண்டறை வயதாகும் போது அவரது தந்தையார் இறந்து விட்டார். கேரளாவில் தமது பாட்டானார் பெரும் லட்சாதிபதியாக இருந்தும், பெண் வாரிசுகளுக்கே சொத்து என்ற அங்குள்ள மரபுமுறை காரணமாக தங்களது குடும்பம் அனாதையாக்கப்பட்டதாகவும், அதனால் அந்த ஊரை விட்டு வெளியேறி இலங்கையின் கண்டியில் குடியேற நேர்ந்ததாகவும் எம்.ஜி.ஆர் பின்னாளில் கூறியுள்ளார். எம்.ஜி.ஆருக்கு ஏழு வயதாகும் போது கும்பகோணத்துக்கு அவரது குடும்பம் குடிபெயர்கிறது. அங்கு அவரது குடும்பத்துக்கு பாதுகாவலராக இருந்த வேலு நாயர் மூலம் எம்.ஜி.ஆரும், அவரது

மனைவி வி.என்.ஜானகியுடன் எம்.ஜி.ஆர்
மனைவி வி.என்.ஜானகியுடன் எம்.ஜி.ஆர்

சகோதரர் சக்கரபாணியும் நாடக வாய்ப்பைப் பெறுகின்றனர். நாடகங்களில் நடித்தபடியே சென்னைக்கு வந்து திரைப்பட வாய்ப்புகளைத் தேடுகின்றனர்.  1936ல் சதிலீலாவதி என்ற படத்தில் அறிமுகமான எம்.ஜி.ஆர், 1947ல் ராஜகுமாரி திரைப்படத்தில் நடிக்கும் வரை பெரிய அளவில் அறியப்படாத நடிகராகவே இருந்துள்ளார். இடைப்பட்ட காலத்தில் தியாகராஜ பாகவதர் தயாரித்த ராஜமுக்தி படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்த எம்.ஜி.ஆர், அதில் நாயகியாக நடித்த வி.என்.ஜானகி (வைக்கம் நாராயணி ஜானகி) மீது காதல் வயப்படுகிறார். பிரசவத்தின் போது இறந்து போன தனது முதல் மனைவி தங்கமணி சாயலில் இருந்ததே வி.என்.ஜானகி மீது எம்.ஜி.ஆர் ஈர்ப்பு கொள்ளக் காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. எம்.ஜி.ஆரின் இரண்டாவது மனைவியான சதானந்தவதியும் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்தததும் கூட இந்த “மூன்றாம் காதலுக்கு” காரணமாக இருக்கலாம். எப்படியோ, 1950ல் மருதநாட்டு  இளவரசியில் நாயகன் – நாயகியாக இணைந்து நடித்த எம்.ஜி.ஆரும் ஜானகியும்

உண்மையிலேயே நாயகன் – நாயகியாக இணைந்து விட்டனர். விளைவு… முதல் கணவரான கணபதி பட்டுக்கும், வி.என்.ஜானகிக்கும் இடையே பிரச்சனை முற்றியது. குழந்தை “அப்பு” என்ற சுரேந்திரனுடன் ஜானகி வீட்டை விட்டு வெளியேறுகிறார். இது நடந்தது சுமார் 1952 எனத் தெரிகிறது. லாயிட்ஸ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் எம்.ஜி.ஆர் ஜானகியைக் குழந்தையுடன் குடிவைக்கிறார். இரண்டாவது மனைவி சதானந்தவதி உயிரோடு இருந்ததால் ஜானகியை முறைப்படி அல்லது சட்டபூர்வமாக அவரால் மணந்து கொள்ள இயலவில்லை. வீட்டில் சகோதரர் சக்கரபாணி உள்ளிட்டோரின் எதிர்ப்பு வேறு. ஒரு வழியாக 1962ல் சதானந்தவதி இறந்த பின்னர், அதே ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி ஜானகியைப் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார். அடுத்த கட்டமாக ராமாவரம் தோட்ட வீட்டில் ஜானகியுடன் குடியேறுகிறார். முதல் கணவர் கணபதி பட்டுக்குப் பிறந்த ஜானகியின் மகன் அப்புவை, தனது மகனாக தத்தெடுத்துக் கொள்கிறார். ஜானகியின் தம்பி நாராயணனின் நான்கு பிள்ளைகளையும் கூட எம்.ஜி.ஆர் பின்னாளில் வளர்ப்புப் பிள்ளைகளாகத் தத்தெடுத்துக் கொண்டார். ஆக, எம்.ஜி.ஆரின் அக வாழ்க்கை என்பது ஏகப்பட்ட சிக்கல்களும், சிடுக்குகளும் கொண்டதாகவே இருந்துள்ளது. குழப்பங்களும், இருண்மையும் மலிந்த அவரது வாழ்வின் மற்றொரு பக்கம் அது.

 

கருணாநிதியுடன் எம்.ஜி.ஆர்
கருணாநிதியுடன் எம்.ஜி.ஆர்

இவற்றுக்கு இடையே எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் அரங்கேறி இருந்தன. தனது இளம் பருவத்தில் பழுத்த காங்கிரஸ் காரராக வலம் வந்த எம்ஜிஆர் 1953ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து, பகுத்தறிவுக் கொள்கை பேசும் முன்னணி நடிகர்களில் ஒருவரானார். இதற்கு அண்ணாவுடனான சந்திப்பு முக்கியக் காரணம் என்று சொல்லப்பட்டாலும், அதுமட்டுமே காரணமன்று. 1947ம் ஆண்டு, எம்ஜிஆர் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி படத்திற்கு வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதியுடனான நெருக்கமான நட்பே எம்ஜிஆரின் கருத்து ரீதியான மாற்றத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. தற்போதைய தேவைக்காக வரலாற்றின் உண்மையான தகவல்களை திரித்தும், மறைத்தும் கூறுவது சிலருக்கு வாடிக்கையாகப் போய்விட்டது. ஆனால், உண்மை என்பது இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டதாகத் தானே இருக்கிறது. கோவையில் தங்கி இருந்த போது எம்.ஜி.ஆருக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் நிலவி வந்த நட்பு மிக ஆழமானதாக இருந்திருக்கிறது. காந்தியடிகளின் நூல்களை எம்.ஜி.ஆரும், அண்ணாவின் எழுத்துகளை கலைஞரும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டிருக்கின்றனர். ஒருகட்டத்தில், தமிழகத்தின் தற்போதைய தேவை திராவிட இயக்கக் கொள்கைகளும், அண்ணாவின் தலைமையுமே என்பதை எம்.ஜி.ஆரின் அக உணர்வு ஏற்கிறது. இதன் விளைவே அண்ணாவுடனான சந்திப்பும், அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளும். கலைஞரின் அரசியல் வாழ்க்கையில் எம்.ஜி.ஆர் செய்த உதவிகளை பிரமாதப் படுத்தி எழுதிவரும் ஒரு கும்பல், அதற்கு முன்பு நடந்தவற்றைப் பற்றிக் குறிப்பிடுவதே இல்லை. எம்.ஜி.ஆர் வளரும் கதாநாயக நடிகராக இருந்த போதே, கலைஞர் கருணாநிதி நாடறிந்த எழுத்தாளராக, பேச்சாளராக, அரசியல் பிரமுகராக பிரபலமாகி இருந்தார். 50 கள் தொடங்கி, திமுகவில் இருந்து வெளியேற்றப்படும் வரை, எம்.ஜி.ஆரை ஓர் அரசியல் ஆளுமையாக பரிணமிக்க வைத்ததில் கலைஞர் கருணாநிதிக்கு பெரும் பங்கு இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு முன்பாகவே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திராவிடர் கழகத்தில் இருந்தார். லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் இருந்தார். கவிஞர் கண்ணதாசனும் இருந்திருக்கிறார். ஆனால், இவர்கள் அனைவரையும் விட கொள்கை அளவில் திராவிட இயக்கத்தில் இருந்து பிரித்தறிய முடியாதவராக கலைஞர் கருணாநிதி மட்டுமே நிலைத்தும், நீடித்தும் வந்திருப்பதை நாம் பார்க்க முடிகிறது. திருநீறு, குங்குமம் துலங்க மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கண்ணதாசன், கருணாநிதியின் கருத்துத் தாக்கம் காரணமாகவே திராவிடர் இயக்கத்தில் இணைந்திருக்கிறார். பின்னாளில் தொடங்கிய இடத்திற்கே வந்து விட்டார். அதே போல சிவாஜி கணேசனும் பின்னாளில் பகுத்தறிவுச் சிந்தனையில் இருந்து வெளிவந்துவிட்டார். எம்.ஜி.ஆரும் அத்தகைய ஒருவரே. திராவிட இயக்கத்தின் கொள்கைகளை அவரது திரைப்படங்களில் பிரதிபலித்தாலும், பெரியார் குறித்த எந்தப் பதிவும் அவரது திரைப்படங்களில் இடம் பெற்றதில்லை. எம்.ஜி.ஆர் படங்களில், காட்சிகளின் பின்னணியில் காந்தி, அண்ணா நிழற்படங்கள் இடம் பெற்றதைப் போல, பெரியாரின் படம் இடம் பெற்றதே இல்லை. அதிமுக தொடங்கப்பட்டு முதலமைச்சர் ஆன காலத்தில் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று வரும் அளவுக்கு குறைந்த பட்சக் கொள்கை அடையாளங்களைக் கூட எம்.ஜி.ஆர் எந்தத் தயக்கமும் இல்லாமல் உதிர்த்து விட்டார்.

 

எம்.ஜி.ஆரின் அரசியல் என்பது திட்டவட்டமான கொள்கைத் திட்டங்களோ, தெளிவான கோட்பாடுகளோ இல்லாதது. அதுமட்டுமின்றி, சமூகத்தின் நச்சு சக்திகளாக சாராயம் காய்ச்சுபவர்களாகவும், கூலிப்படைகளாகவும், அடியாட்களாகவும் சுற்றித்திரிந்த போக்கிலிகள் அனைவரையும் (இன்றைய சொல்லாடலில் கூற வேண்டுமென்றால் அல்லக்கைகள்), கனவான்களாகவும், தனவான்களாகவும்,  அரசியல் தலைவர்களாகவும் ஆக்கி அழகுபார்த்தார் எம்.ஜி.ஆர். மக்களுக்கும், அரசுக்கும் சொந்தமான அத்தனை உடைமைகளையும், தான் உருவாக்கிய சுரண்டல் கூட்டத்துக்கு விசுவாசிகள் என்ற அடிப்படையில் வாரி வழங்கி அகமகிழ்ந்தார்.

 

இத்தகைய முரண்பட்ட ஆளுமையான எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டது ஏன்… அதிமுக உருவானது எப்படி… அதைத் தொடங்கும் போது எம்.ஜி.ஆர் முழங்கியது என்ன… பின்னர் நடந்தவை என்ன… அப்போதெல்லாம் தமிழக அரசியலில் அவருக்கு துணைபோன சக்திகள் யார்… இவற்றையெல்லாம் தாண்டி அவர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்துக்குக் கிடைத்த நன்மைகள் என்ன என்பவை பற்றியெல்லாம் அடுத்தடுத்த பகுதிகளில் பார்ப்போம்.

 

(தொடர்ந்து பேசுவோம்)

 

______________________________________________________________________________________________________