முக்கிய செய்திகள்

நான் பார்க்கும் உலகம் பாரதியிடம் இல்லை – ஞானக்கூத்தன் நேர்காணல் : சந்திப்பு ஷங்கர்ராமசுப்ரமணியன் (பழையது)

 

Gnanakkoothan Interview in The Hindu Tamil – Shankarramasubramaniyan

_______________________________________________________________________________________________________

 

விஷ்ணுபுரம்’ விருது பெற்றபோது ‘தி இந்து’வுக்காக அளிக்கப்பட்ட நீளமான பேட்டி யின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி இது. அவரது மறைவையொட்டிப் பிரசுரிக்கப்பட்டுள்ளது. (29.7.16)

 

உங்கள் நோக்கில் புதுக்கவிதை நிலைபெற்ற கதையைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்..Gnana kooth2

 

1958-ல் க.நா.சுப்பிரமணியன், சரஸ்வதி இதழில் புதுக்கவிதை என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். அப்போது இருந்து வந்த திராவிட இயக்க, பொதுவுடைமை இயக்கக் கவிதைகளுக்கு மாற்றாக ஒரு கவிதை வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு அது. பாரதிதாசனுக்குப் பிறகு பெரிய வெற்றிடம் இருந்த வேளை அது. அந்த வெற்றிடத்துக்குக் காரணம் பாடுபொருள் இல்லாமைதான். ஒன்று கட்சியைப் பற்றி எழுத வேண்டும். இல்லையெனில் பொதுவுடைமைக் கொள்கைகளை எழுத வேண்டும். இல்லையெனில் தீபாவளி, பொங்கலுக்கு வாழ்த்துக் கவிதை எழுத வேண்டும். அப்போது கவிதைகள் ‘கல்கி’ மற்றும் ‘கலைமகள்’ இதழ்களில், பண்டிகை நாட்களில் மட்டுமே பிரசுரிக்கப்பட்டன. இந்தச் சூழ்நிலையில் புதிய கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று எழுதினார். எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்றார். உரைநடையில் எழுதினால் தமிழ்ப் புலவர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்துவிட முடியும் என்ற கருத்தை க.நா.சு.வோடு சேர்ந்து பிச்சமூர்த்தியும் வைத்தார். 1959 ஜனவரியில் ‘எழுத்து’ இதழ் வெளிவந்தது. அதில் புதுக்கவிதைகளைப் பிரசுரிக்க ஆரம்பித்தார்கள். பத்துப் பேரோ, நூறு பேரோ படித்தால் போதும் என்ற நிலையில்தான் இந்த இயக்கம் தொடங்கியது.

 

நீங்கள் மற்றும் நண்பர்கள் சேர்ந்து ‘கசடதபற’ பத்திரிகை தொடங்கியதற்கான நோக்கம் என்ன?

 

கவிதையை விடுதலை செய்வது. தமிழை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதும் நோக்கமாக இருந்தது. அதில், ‘தமிழை எங்கே நிறுத்தலாம்?’ என்று ஒரு கவிதை எழுதியிருந்தேன். ‘சந்தியில் நிறுத்தாமல் இருந்தால் போதும்’ என்று சுஜாதா எழுதினார். பெரிய பத்திரிகைகளில் இருந்து கவிதைகளை விடுவித்து சுதந்திரமாக எழுத வேண்டும் என்று விரும்பினோம். மொழி, நாடு, மதம், மக்கள் என்று பேதம் பார்க்காமல் எல்லாரையும் சேர்த்துப் பார்க்கும் கவிதைகளை எழுத வேண்டும் என்று நினைத்தோம். இப்படி ‘கசடதபற’ வழியாக நவீன இலக்கியத்திற்கான கால்கோள் விழா நடந்தது.

 

புதுக்கவிதைகளை நீங்கள் எழுதத் தொடங்கும்போது உங்களுக்கு இருந்த எண்ணங்கள் என்ன?

 

கவிதை என்பதன் அடிப்படையில் பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ராமலிங்கம் பிள்ளை ஆகியோருடைய கவிதைகள் நாம் எழுத வேண்டிய கவிதைகளுக்கு உறுதுணையாக இருக்கப்போவதில்லை என்ற எண்ணம் தெளிவாக இருந்தது. பாரதியாரின் கவிதைகளையும் சேர்த்தே சொல்வேன். அவருடைய கவிதைகள் உயர்வானவை என்றே கருதுகிறேன். ஆனால், நான் பார்க்கும் உலகம் அவரிடம் இல்லை. பாரதியார் காலத்தில் பேருந்து இருந்தது. ரயில் இருந்தது. சினிமா அறிமுகம் ஆகிவிட்டது. ஆனால், யதார்த்த உலகம் அவரிடம் இல்லவே இல்லை. புதுக்கவிதை யதார்த்த உலகத்தைப் பிரதிபலிக்க வேண்டும். பாரதிதாசனிடம் இனரீதியான விருப்பு வெறுப்புக் கருத்துகள் இருந்தன. கட்சி சார்பில்லாமல் மனிதனின் நிலை என்னவாக இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும் என்பது எனது கருத்து. அதைத்தான் நான் ஏற்பியல் என்று சொன்னேன். அழகியல் என்பதைவிட ஏற்பியல் என்பது அர்த்த நெருக்கம் கொண்டதாக இருக்கிறது.

 

நீங்கள் உங்கள் இளம்பருவத்தில் தமிழரசுக் கழக ஆதரவாளராக இருந்தீர்கள். அந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்…

 

1952ஆம் ஆண்டு எனக்கு 14 வயது. இலக்கணம் எல்லாம் தெரியாமலேயே கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டேன். காவிரி தஞ்சை மாவட்டத்தில்தான் உற்பத்தியாகிறது என்று நம்பியிருந்தேன். எங்கள் ஊர் கோயில் கோபுரம்தான் உலகிலேயே பெரியது என்று நினைத்திருந்தேன். அப்போதுதான் ம.பொ.சி. எங்கள் ஊருக்கு வந்தார். அவர் திராவிட இயக்கத்துக்கு எதிராகப் பேசினார். “தமிழ்நாடு என்பது தனி, சுயநிர்ணயம் வேண்டும். உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குத் தோள் கொடுப்போம்” என்று பேசினார். அவரைத் தாக்கினார்கள். அந்தக் கூட்டத்தில் நான் இருந்தேன். அவர் மூலமாகத்தான் தமிழ்நாடு என்ற ஒன்று இருக்கிறது, அதற்கு எல்லைகள் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். அவர் பேச்சு என்னைக் கவர்ந்தது. தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர்கள் அனைவரும் தமிழர்கள் என்று அவர் சொன்னது எனக்குப் பிற்பாடு திருப்திகரமான விளக்கமாக இருந்தது.

 

திராவிட அரசியல் தமிழ்ப் பண்பாட்டில் ஏற்படுத்திய தாக்கங்களை உங்கள் கவிதைகளில் கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள். அதற்காகவே அதிகம் அறியப்படவும் செய்கிறீர்கள்..

 

மேடையில் ஒரு பேச்சாளன் பேசுகிறான். அவன் திமுகவாக இருக்கலாம், காங்கிரஸ்காரனாக இருக்கலாம், அவன் பொதுமனிதனின் பார்வையில் எப்படிப் படுகிறான் என்பதே எனது கவிதையின் கவலையாக உள்ளது. இவையெல்லாம் தனிமனிதனின் வாழ்க்கையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதன் மீது எனது கவிதைகள் கவனம் செலுத்துகின்றன. தனிப்பட்ட வகையில், திராவிட இயக்கங்களால் தமிழ்ச் சமூகத்திற்குப் பெரிய நன்மைகள் விளையவில்லை என்பது என் கருத்து. அவர்களால் பண்பாடு போச்சு. மக்களிடத்தில் வேற்றுமை பெருகியது என்றும் நினைக்கிறேன். இட ஒதுக்கீடு போன்ற கொள்கைகளில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. ஆனால், அதை எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நடைமுறைப்படுத்தியிருக்கும்.

 

உங்கள் கவிதைகளில் மனிதன் குறையுள்ளவனாக இருக்கிறான். கடவுள் நடராஜர் மேஜை நடராஜராகக் குறும்வடிவம் எடுக்கிறார். கடவுள் ஓட்டை தேவனாராக வருகிறார். நவீன வாழ்வை உங்கள் கவிதைகள் குறைபாடுள்ளதாக, அபத்தமாகப் பார்க்கிறதா?

 

பல நூற்றாண்டுகளாக ஒரு பண்பாடு காக்கப்பட்டுவந்தது. இன்று நாம் பேசுகிறோம். ஆரியர்கள் ஆதிக்கம், இஸ்லாமியப் படையெடுப்பு, தலித்துகளின் அடிமை நிலை, பெண் அடிமைப் போக்கு என நாம் இன்று பேசும் எல்லாமே ஒரு நெடிய கால வரலாற்றை முன்னிறுத்திப் பேசுபவை. ஆனால் ஒரு முழு வாழ்க்கை உடைந்துபோய்விட்டது. தொட்டால் பால் திரிவது மாதிரி எல்லாமே இடிந்துபோய்விட்டது. எனது கவிதைகள் இடிந்ததை, உடைந்ததைப் பேசுகின்றன.

 

உள்ளடக்க ரீதியில், சொல்லல் முறையில் என்ன விதமாகப் புதுக்கவிதை மேம்பட வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

 

கவிதைகளில் சமயம் போய்விட்டது. உலகத்துக்கும் தனிமனிதனுக்கும் இடையே உள்ள ஆழ்ந்த உறவு பற்றிய பார்வை இல்லை. ஒரு பொருள் ஏகத்தன்மை உடையது அல்ல. அதில் இன்னொரு பொருளின் சாயலும் இருக்கும். உலகத்துக்கும் எனக்கும், எனக்கும் மிருகங்களுக்கும், எனக்கும் பட்சிகளுக்கும் உள்ள பேதாபேதங்கள் ஆகியவற்றை ஆழ்ந்து பார்க்க வேண்டும். அஃறிணைப் பொருட்களைக்கூட நாம் நம்முடையது என்று சொல்கிறோம். இந்த உறவுகள் எப்படி வருகின்றன? எனது குவளையை நீங்கள் எடுத்துச் சென்றுவிடலாம். எனது கையை எடுத்துச் செல்ல முடியாது. ஆனால், எனது குவளையை நீங்கள் உடைத்தால் எனது கையை உடைப்பதுபோல கத்துகிறேன்; ஏன்? சமயம் என்பது கடவுளை வழிபடுவதைச் சொல்லவில்லை. தத்துவ விசாரங்கள் போய்விட்டன. கடவுள் வழிபாட்டை எதிர்த்தவுடன் தத்துவத்தையும் விட்டுவிட்டார்கள். ஆனால் அது தேவை!

 

நன்றி – தி இந்து தமிழ்

______________________________________________________________________________________________________________