ஊழலை ஒழிப்பது எப்படி? – மேனா. உலகநாதன் (பழையசோறு – 20.2.11, தினமலர் – செய்திமலர் (நெல்லைப்பதிப்பில் வெளிவந்த கட்டுரை)

Mena Ulaganathan’s Old article

________________________________________________________________________________________________________

 

ழலை ஒழிப்பது எப்படி?coruuption

மணிமேகலைப் பிரசுரம் வெளியிடும் புத்தகத்தின் தலைப்பைப் போல் இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா?

ஊழலுக்கு எதிராக தற்போது எழுந்துவரும் குரல்கள், வலிமையான அரசியல் அடித்தளத்துடன் கிளர்ந்தெழ வேண்டிய அந்த போராட்டத்தை, இப்படித்தான் மலினப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

ஆனால், அறுபது ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றில், அனைத்து அடித்தட்டு குடிமக்களின், அடிமனதில் ஓயாத அலையாக எழும்பி, எழும்பி ஓயும் இந்தக் கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை என்பதே உண்மை.

நேருகாலத்தில் நாட்டையே கலக்கிய முந்திரா ஊழல் தொடங்கி, தற்போதைய 2ஜி அலைக்கற்றை, மற்றும் இஸ்ரோ ஊழல் வரை அடி, முடி காண முடியாத மர்ம முடிச்சுகளுடன், ஊழல் எனும் அந்த விசித்திர மிருகம், வெற்றிகரமாக தனது பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

வலிமை வாய்ந்த ஜனநாயகத்தால் ஏன் இந்த மிருகத்தை வீழ்த்த முடியவில்லை?

ஊழல் எனும் பெருங்குற்றத்தை, அரசியல் கட்சிகள் எப்படியெல்லாம், தங்களது எதிரிகளைப் பழிவாங்குவதற்கான சந்தர்ப்ப ஆயுதமாக பயன்படுத்தி வந்திருக்கின்றன என்பதை கூர்ந்து கவனித்தால், இந்த வரலாற்றுத் தோல்விக்கான காரணம் புரியும்.

அதற்கு, நமது தமிழக அரசியலைச் சற்று பின்னோக்கிப் பார்த்தாலே போதும்.

அண்ணாவுக்குப் பின்னர் முதலமைச்சர் பதவியை ஏற்ற கருணாநிதி மீது, பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்றது. விஞ்ஞான ரீதியாக கருணாநிதி ஊழல் புரிந்துள்ளார் என அந்த கமிஷன் கூறியதாக பரபரப்பாக பேசப்பட்டது. (இப்போது விஞ்ஞானிகளே ஊழல் புரிவதை (இஸ்ரோ), எப்படி விமர்சிப்பது? அரசியல் ரீதியாக ஊழல் புரிந்துள்ளார்கள் எனலாமா?)

திமுக மற்றும் அதன் தலைவர் கருணாநிதி மீதான இந்த குற்றச்சாட்டு 1977 பொதுத்தேர்தல் களத்தில், அதிமுக அணிக்கு வசதியான ஆயுதமாக மாறியது. திமுகவைத் தோற்கடிக்கவும் இந்த ஆயுதம் ஓரளவுக்கு பயன்பட்டது.

எம்ஜிஆர் மறைந்ததை அடுத்து, ஏறத்தாழ 13 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போதும் பல்வேறு காரணங்களுக்காக அந்த ஆட்சி கலைக்கப்பட்டது.

1991ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார்.  ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, அமோக வெற்றி பெற்று அரியணை ஏறியது. அரசு நிர்வாகத்தில் அதுவரை இலை மறைவு காய் மறைவாக இருந்த ஊழல், வெளிப்படையான பரிவர்த்தனையாக மாறியது. ஊழலின் கரங்கள் சுடுகாடு வரை நீண்டன.

1996ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக ஆட்சியின் இந்த வெளிப்படையான ஊழல், திமுகவின் கையில் ஆயுதமாக மாறிச் சுழன்றது. மூப்பனார் தலைமையிலான த.மா.கா வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட திமுக, அந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு என பல வழக்குகள் தொடரப்பட்டன. அவர் கைதும் செய்யப்பட்டார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கரன்சிகளை ஆற்றிலும், குளத்திலும் கொட்டி எரித்த காட்சிகள் எல்லாம் அப்போது அரங்கேறின.

2001ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தது. இந்த முறை ஊழலை விட, எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற ஜெயலலிதாவின் எதேச்சதிகாரப் போக்கே அவருக்கு எதிரியானது. இதனால் 2006 ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு சுலபமானது.

தற்போது மீண்டும் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு வசதியாக ஸ்பெக்ட்ரம் ஊழல் எனும் ஆயுதம் அதிமுகவுக்கு கிடைத்துள்ளது. நிச்சயமாக, இந்த தேர்தலில், எதிர்க்கட்சியினரின் முக்கியப் பாடு பொருளாக ஸ்பெக்ட்ரம் ஊழல் இருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

இப்போதே அதிமுகவினரும், அந்த அணிக்கு ஆதரவாக சில அறிவு ஜீவிகளும், ஊழலுக்கு எதிரான தங்களது குரலை உரத்து எழுப்பத் தொடங்கி உள்ளனர். ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு ஊழல் எதிர்ப்புச் சங்கை ஊதத் தொடங்கி உள்ளன.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டால், ஊழல் ஒழிந்துவிடும் என்று, ஓங்கி, உரத்துச் சொல்லத் தொடங்கி உள்ளனர்.

அப்படியே வைத்துக் கொள்வோம். இதற்கு முன்னர் அப்படி நடந்திருக்கிறதா?

மத்தியிலும், மாநிலத்திலும் இந்த அறுபது ஆண்டுகளில் ஏற்படாத ஆட்சி மாற்றமா?

ஏன் ஊழல் ஒழியவில்லை.

ஊழலை நியாயப்படுத்துவதற்காகவோ, எவரையும் ஆதரிப்பதற்காகவோ  இந்தக் கேள்வியை எழுப்பவில்லை.

பொருளாதாரச் சீர் கேடு என்ற அரசியல் சமூகப் பெருநோயின் வெறும் அறிகுறி மட்டுமே ஊழல் எனும் வெளிப்பாடு. அதுவே மூல நோயல்ல. ஊழலை ஒழிக்கிறேன் பேர்வழி என்று, விஜயகாந்தைப் போல வீராவேசத்தோடு புறப்பட்ட பலர், அந்த மகாநதிக்குள் கரைந்து போகும் மர்மமும் கூட இதுதான்.

குறிப்பிட்ட ஒருவரிடமே பணம் குவிவதற்கான வாய்ப்பு…. பெரும் பரிவர்த்தனையும், லாபமும் ஈட்டக்கூடிய தொழில்கள் அனைத்தையும், பன்னாட்டு, உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு பங்குபோட்டுக் கொடுப்பது… அவற்றில் மக்களுக்கு இருக்கும் பொருளாதார உரிமையை அடியோடு மறுக்கும் முதலாளித்துவத்தின் சூட்சுமமான கட்டமைப்பை வலிமைப் படுத்த உதவும் அரசியல் வாதிகள்…

இப்படி, நம் புலன்களுக்கு எட்டாத நுண்தளங்களில் இருந்து ஊற்றெடுக்கும் ஊழலின் பிரவாகத்தை, வெற்றுக் கூச்சல்களால் அணைபோட்டுத் தடுத்து விட முடியாது.

பின் எப்படித்தான் தடுப்பது?

அதனைத் தடுக்க, ஆட்சி மாற்றத்துக்குப் பதிலாக அரசியல் மாற்றம் தேவை.

இன்றைய இளையதலைமுறைக்கு அரசியல் பிடிப்பதில்லை. பிடித்துவிடக் கூடாது என்பதில், கல்வி வியாபாரிகள் முதல், ஊடகங்கள் வரை கவனமாக இருக்கின்றன. முதலாளித்துவம் ஊழலுக்கான சூட்சும வலையை இங்கிருந்துதான் பின்னத் தொடங்குகிறது.

இந்த அரசியல் தீண்டாமை உணர்வுதான், ஊழலின் ஆழமான ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. அரசியல் என்றால், அதிமுகவும், திமுகவும் மட்டுமல்ல என்ற உண்மையை ஊடகங்கள் வசதியாக மறைத்துவிடுகின்றன.

அரசியல் அகற்றப்பட்ட சமூகம் பண்படுத்தப்படாத களர் நிலைத்தைப் போல. அனைத்துச் சீர்கேடுகளும் தங்கு தடையின்றி புதர்களைப் போல மண்டிப் பெருகும்.

இந்தியாவில் தனியார் மயமும், தாரளமயமும் அறிமுகப்படுத்தப்பட்டு 18 ஆண்டுகள் ஆகின்றன. இந்த பதினெட்டு ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்றுள்ள ஊழல் பரிவர்த்தனையின் மொத்த தொகை 73 லட்சம் கோடி என்று, பெருமுதலாளிகளை ஆதரிக்கும் சில ஊடகங்களும், பத்திரிகைகளுமே சொல்கின்றன.

இதைப் புரிந்து கொள்ள, இன்றைய இளைஞர்களுக்கு உண்மையான அரசியல் அறிவு தேவை.

தனியார் நிறுவனங்கள் கையில் பெருந்தொழில்கள் ஒப்படைக்கப்பட்டால், நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடைபெறும் என பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் அது இப்போது பொய்யாகி இருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகள் மலிவான விலையில் ஒதுக்கப்பட்ட நடவடிக்கை ரகசியமாகவே அரங்கேறி இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கூட, நாம் இந்த உண்மயைத் தெரிந்து கொள்ள முடியாது. பிரச்சனை என வந்த பிறகு, பெரு முதலாளிகளின் தந்திரங்கள் அனைத்தும் அம்பலமாகின்றன.

இதில், ஆ.ராசா உள்ளிட்ட அனைவருமே அரசியல் கூலிகள். ரயில்வே நிலையத்தில் சுமைதூக்குவதற்கு உரிமம் பெற்ற போர்ட்டர்களைப் போல, மக்களின் உடைமைகளை முதலாளிகளுக்கு தாரைவார்க்க ஆட்சி அதிகாரம் என்ற உரிமத்தைப் பெற்றிருப்பவர்கள். அவ்வளவுதான்.

இதனைப் புரிந்து கொள்ள அரசியல் அறிவு தேவை.

அது இப்போது இளைஞர்களிடம் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வெற்றிடமும், மூடத்தனமும்தான், நாட்டின் ஒட்டு மொத்த சொத்தையும் கொள்ளையடிக்கும் அளவுக்கு பெருமுதலாளிகளுக்கு துணிச்சலைத் தந்துள்ளது.

ஆட்சி மாற்றங்களால் ஊழலை ஒழித்து விடலாம் என்று உரத்துப் பேசுபவர்களின் உள்நோக்கம், ஊழலை ஒழிப்பதல்ல. மக்களைச் சுரண்டுவதற்கான உரிமையை, தேர்தல் மூலம், அடுத்த முறை தாங்கள் பெறுவது மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஊழலை ஒழிக்க ஆட்சி மாற்றம் மட்டுமே போதாது. அடிப்படையான அரசியல், சமூக, பொருளாதார அமைப்பில், அணுகுமுறையில் மாற்றம் தேவை என்ற உண்மையை, கருத்து நேர்மையும், அறிவு நாணயமும் உள்ள அனைவரும் உரத்துச் சொல்ல வேண்டிய தருணம் இது.

– மேனா.உலகநாதன்

______________________________________________________________________________________________________________