முக்கிய செய்திகள்

உதிரா பூக்கள் – 4 – தத்துவராயர் தரிசனம் : சுந்தரபுத்தன்

Sundharabuddhan‘s Uthira pookkal -4

______________________________________________________________________________

 

தத்துவராயர்தரிசனம்

 

thathuvarayar 1

ரெங்கையா முருகனைச் சந்திப்பது என்பது ஏதோ வரலாற்றுக் காலத்தில் பயணிப்பதுபோல இருக்கிறது. “ஒரே வெயிலா இருக்கே… வேலை எப்படி போய்க்கிட்டிருக்கு” என்ற சாதாரண விசாரிப்புகளில் இருந்து விலகியிருக்கும் அவரது உரையாடல்கள். ஏதாவது ஒரு புதிய குறிப்புகளை நம்மிடம் எப்போதும் சேர்த்துக்கொண்டே இருப்பார். மண்ணில் புதையுண்டுபோன பழம்பெரும் வரலாறுகளின் மறக்கப்பட்ட கண்ணிகளைத் தேடியலையும் யாத்ரீகர்.

 

 

கடந்த வாரத்தில் எறும்பூதூர் சென்று தத்தவராய சுவாமிகளின் குருபூஜையில் கலந்துகொண்டதாகச் சொன்னார். யார் அந்த தத்துவராயர்? என அவரிடம் ஆச்சரியத்துடன் கேட்டேன். இவர்தான் என்று ஆர்வம்பொங்க சொல்லத் தொடங்கினார்…

 

 

விருத்தாசலம் – சேத்தியாதோப்புக்கு இடையே உள்ள சிற்றூர் எறும்பூதூர். இன்று இரும்பூர், எறும்பூர் என்று உள்ளூர் மக்களால் வழங்கப்படுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டில் சொரூபானந்தர், தத்துவராய சுவாமிகள் என்று இரு ஞானிகள் வாழ்ந்தனர். இவர்களில் ஒருவர் சொரூப விசாரத்தைப் பிரதானமாகவும், மற்றவர் தத்துவ விசாரத்தை பிரதானமாகவும் கடைபிடித்து வந்ததால் சொரூபானந்தர் என்றும் தத்துவராயர் என்றும் அழைக்கப்பட்டார்கள்.

 

 

இருவரும் பாலைவனத்திற்குள் வழிதப்பி வந்து நீர் தேடி அலைந்த மான்களைப் போல குருவைத் தேடி அலைந்தனர். பல காலம் தேடியும் குரு கிடைக்காததால், சொரூபானந்தர் தெற்கு நோக்கியும், தத்துவராயர் வடக்கு நோக்கியும் குருவைத் தேடி யாத்திரை சென்றனர்.

 

 

திருபைஞ்ஞீலிக்கும் திருவெள்ளறைக்கும் இடையே உள்ள கோவர்த்தனம் என்ற ஊரில் சிவப்பிரகாசர் என்ற குருவை கண்டடைந்தார் சொரூபானந்தர். ஒரு புதரில் இருந்து வெளிப்பட்ட அந்த குரு, தான் தேடிய சீடன் இவனே என்றும் அதிதீவிர பக்குவத்தை அடைந்துள்ளான் என்றும் “நினைவரிய வொரு பிரமம் நீயே…” என்று உபதேசிக்க, சொரூபானந்தர் அப்போதே சகஜ நிஷ்டை அடைந்தார்.thathuvarayar 2

 

 

வடக்கு நோக்கிச் சென்ற தத்துவராயர், குருவைக் காணமுடியாமல் வாடிய பயிராய் தெற்கு நோக்கித் திரும்பினார். முதலில் குருவை அடைபவர், குருவை அடையாத அடுத்தவருக்கு குருவாக அமைய வேண்டும் என்ற ஒப்பந்தப்படி சொரூபானந்தரே உபதேசம் செய்து தத்துவராயரை சீடராக ஏற்றுக்கொண்டார்.

 

 

தமிழ்வழி வேதாந்தத்திற்கு முதல் புள்ளி வைத்தவர் தத்துவராயர். நாட்டுப்புற பாடல் மெட்டில் வேதாந்தக் கருத்துகளை சாமான்யர்களுக்கும் கொண்டு சேர்த்தவர். கவிதை பொழியும் திறன்பெற்ற தத்துவராயரை வேதாந்த நூல்களை எழுதத் தூண்டினார் குருவான சொரூபானந்தர். சிவப்பிரகாச வெண்பா, தத்துவாமிர்தம், திருத்தாலாட்டு, அமிர்தசாகரம், அடங்கன்முறை, பெருந்திரட்டு, குறுந்திரட்டு, ஈசுவர கீதை, பிரம்ம கீதை, அஞ்ஞவதைப் பரணி என பல தத்துவ வேதாந்த நூல்களை
எழுதினார்.

 

தத்துவராயர் எழுதிய நூல்களில் சசிவன்னபோதம் மிக முக்கியமான நூலாக கருதப்படுகிறது. ஒரு நாள், இந்த தத்துவ ஞானியின் சமாதியைக் கண்டடைந்த பொன்னம்பல சுவாமிகள், 1895 ஆண்டு எறும்பூரில் பெருங்கோயிலாக எழுப்பி குடமுழுக்கு கண்டார். இத்தலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் குருபூஐையில் தமிழகத்தின் திசைகளில் இருந்தும் துறவிகள் கலந்துகொண்டு அருளானந்தம் பெறுகின்றனர்.

 

தமிழ்வழி வேதாந்த இலக்கிய மரபு குறித்து விரிவான ஆய்வு நூல் ஒன்றை எழுதிவரும் ரெங்கையா முருகன், “அதுவொரு தெய்வீக அனுபவம். ஒரே இடத்தில் எத்தனை சந்நியாசிகள். அவர்களுக்கு இப்படியான திருத்தலங்களில் நிகழும் குருபூஜைகளில் கலந்துகொள்வதே பிறவியின் பெரும் பயனாக இருக்கிறது. இப்படியும் ஒரு துறவுலகம் இயங்கிக்கொண்டிருப்பதை அங்கே பார்க்கமுடிந்தது. என்னையும் அவர்களுடன் அமரவைத்து ஆசி வழங்கினார்கள்” என்று நெகிழ்கிறார்.

 

ரெங்கையா முருகனின் பேச்சில் தத்துவராயரின் தரிசனம் பெற்று திரும்பியவனாக நானும் உணர்ந்தேன்.

 

______________________________________________________________________