“மதுவிலக்கு” போதையில் தள்ளாடும் தமிழக அரசியல்! : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

Chemparithi article on tasma protest

______________________________________________

 

tasmac 1தமிழகத்தில் “மதுவிலக்கு” முழக்கம் மிகப்பெரிய அரசியல் சங்கநாதமாக உருவெடுத்திருக்கிறது.

 

மது, மதியை மயங்கச் செய்வது, உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிப்பது என்பன போன்ற எளிய உண்மைகள் எல்லோருக்கும் தெரிந்தவைதான்.

 

“அந்தக் காலத்துல இப்படியெல்லாம் இல்லைப்பா” என்ற கிராமத்து முதியவர்களின் “அப்பாவித்தனமான” ஒழுக்க வாதம் சார்ந்த முனகல், இப்போது அரசியல் கட்சிகளின் முழக்கமாக மாறியிருப்பதுதான் தற்போதைய வினோதம்.

 

மதுவுக்கு எதிரான போராட்டம் என்பது புதியதல்ல. தமிழகத்தில் தந்தை பெரியார் அதற்காக தனக்குச் சொந்தமான தென்னை மரங்களையே வெட்டிச் சாய்த்த வரலாற்றை அதற்கான அதிகபட்ச உதாரணமாகவே சொல்லலாம். ஆனால், மதுவுக்கு எதிரான குரல் என்பது ஒழுக்கவாதம் சார்ந்த போராட்டமாகவும், அறிவுரையாகவும் இருந்து வந்திருக்கிறதே தவிர, தேர்தலை முன்வைத்துக் களமாடும் அரசியல் சதுரங்கக் காயாக அது வடிவெடுத்ததில்லை.

 

சரியாகவோ, தவறாகவோ அது இப்போது நடந்திருக்கிறது. இது தேர்தலுக்காக நடைபெறும் போராட்டமல்ல, கூட்டணிக்கான கட்டியமல்ல என்று அரசியல் கட்சிகள் கூறினாலும், மதுவுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றிணைய முடியாமல் தனித்தனிக் குழுக்களாக களத்தில் நிற்பதே அதற்குச் சான்று.

 

இதில், வருந்தத் தக்க உண்மை என்னவென்றால், ஆளும் கட்சிக்கு அழுத்தம் கொடுப்பதாக நினைத்து இவர்கள் நடத்தும் போராட்டம், அதற்கு மாறான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதுதான்.

 

அதாவது, தமிழகத்தின் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்குச் சாதகமான சூழலை, மிக இயல்பாகவே ஆளும் தரப்புக்கு இது ஏற்படுத்திக் கொடுத்தி விடும்.

 

அதற்கான அடையாளங்களை இப்போதே நீங்கள் பார்க்கலாம்.

 

கடந்த நான்கு ஆண்டுகளாக பெருமளவுக்கு முடங்கிக் கிடக்கும் அரசு இயந்திரம்…

 

சென்னை உள்ளிட்ட பெரு, சிறு நகரங்களில் குண்டும் குழியுமாகச் சீரழியும் சாலைகள்…

 

தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் ஏராளமான திட்டங்கள்…

 

லஞ்ச லாவண்யம் எப்போதுமே உள்ளதுதான் என்றாலும், சதவீத அளவில் அது அதிகரித்திருப்பதும், கடந்த ஓராண்டுகாலமாக அது உக்கிரமடைந்திருப்பதும்…

 

கனிம மணல் களவு போவது…

 

கிரனைட் மலைகளே காணாமல் போவது…

 

மணல் கொள்ளை மாபியாக்களின் சதுராட்டம் அதிகரித்திருப்பது…

 

கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் வெகு இயல்பான அன்றாட நிகழ்வுகளாகி இருப்பது…

 

டெல்டா விவசாயிகளுக்கு சம்பா சாகுபடிக்காவது போதிய தண்ணீர் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்திருப்பது…

 

விவசாயம் ஒரு வாழ்வாதாரத் தொழிலாக இனி மாறவே முடியாது என்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது…

 

மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை முற்றிலும் வணிகமயமாகி, ஏழைகளுக்கு அது இனி எப்போதுமே எட்டாது என்ற நிலை ஏறத்தாழ உறுதியாகிவிட்டிருப்பது…

 

இப்படி, அரசு, அரசியல், சமூக ரீதியாக நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் எத்தனையோ பிரச்னைகளை, மதுவிலக்கு முழக்கம் எனும் தண்ணீரை ஊற்றி அணைத்தாகி விட்டது.

 

நியாயமான சில கோரிக்கைகள் கூட, தர்க்க நியாய உள்ளீடுகள் அற்ற வெற்றுக் கூச்சலாகவும், வெகுசன முழக்கமாகவும் மாறுவதும் கூட, ஒருவிதமான பெரும்பான்மைச் சமூக போதைதான். அதில் எந்த நிதானமும் இருக்காது. மதுவிலக்கு முழக்கமும் இப்போது அப்படி ஒரு அரசியல் போதையாக உருவெடுத்து வருவதுதான் ஆபத்தாகத் தெரிகிறது.

 

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், தற்போது எழுந்து பரவி வரும் “மதுவிலக்கு புரட்சி”யின் முக்கியப் பாடுபொருளாக திமுகவும், அதன் தலைவர் கருணாநிதியும் மாறியிருப்பதுதான். ஆளும் கட்சியை விட அதிகமாக திமுகவையும், அதன் தலைவர் கருணாநிதியையும்தான் பலரும் திட்டித் தீர்க்கிறார்கள்.

 

தமிழருவி மணியன், பழ.நெடுமாறன் போன்றவர்கள் எல்லாம், மதுவாடையே இல்லாமல் இருந்த தமிழகத்தை, குடிக்க வைத்துச் சீரழித்தது திமுகவும், கருணாநிதியும்தான் என்ற ரீதியில் பேசுகிறார்கள்.

 

கருணாநிதிக்குப் பிறகு நீண்டகாலம் – பத்து ஆண்டுகள் – எம்.ஜி.ஆர் ஆட்சி நடத்தினார். பின்னர் ஜெயலலிதாவும் மூன்று பருவங்களாக ஆட்சி நடத்தி வருகிறார். அவர்கள் மீதெல்லாம் இவர்களுக்கு எந்த விமர்சனமும் இருப்பதில்லை. திட்டுவதற்கு ஏதுவானவர் கருணாநிதி மட்டும்தான் என்பதால், அதனை ஒரு சுவாரஸ்யமான அரசியல் பணியாக பலரும் செய்து வருகிறார்கள். “சோ”வானவர்கள் வாழ்நாள் முழுவதும் செய்த பணி அதுதானே!

 

திமுக பதவிக்கு வந்த பின்னர் மதுவிலக்கை ரத்து செய்த அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, 1974ல் மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்தி விட்டுத்தான் ஆட்சிக்கட்டிலில் இருந்து இறங்கினார். அவசர நிலை அல்லோல கல்லோலத்துக்குப் பிறகு 1977ல் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர், 1980 வரை மதுவிலக்கை நடைமுறையில்தான் வைத்திருந்தார். பின்னர் அவராலும் சமாளிக்க முடியால்தான் 1981ஆம் ஆண்டு மார்ச் மாதம் மதுவிலக்கை ரத்து செய்தார். ஆனால் முன்னர் கள்ளுக்கடைகளாக இருந்த மதுபானக் கடைகள், பின்னர் நவநாகரிக மதுபான பார்களாக மாறின. கள் இறக்குவது தடைசெய்யப்பட்டது. மதுபானக்கடைகளை ஏலத்தில் எடுக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. அரசியல் புள்ளிகள் மறைமுகமாகச் சம்பாதிப்பதற்கான பெரும் வர்த்தகக் களமாக மதுவணிகம் உருவெடுத்தது இந்தக் காலக்கட்டத்தில்தான். அது மட்டுமல்ல, மிக மோசமான எரிசாராய ஊழலும் எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான் நடந்தது. ஆனால், தற்போது திமுக தலைவர் கருணாநிதியை திட்டித் தீர்க்கும் மது எதிர்ப்புப் புனிதர்கள், மதுவிலக்கு வரலாற்றின் இந்தக் குறிப்பிட்ட காலக்கட்டத்தை வசதியாக மறைத்து விடுகிறார்கள்.

 

பழ.நெடுமாறன், தமிழருவி மணியன் போன்ற சிலர் மதுவாடையே இல்லாத தமிழகம் இருந்ததாகக் கூறுகிறார்கள். சங்க இலக்கியங்களிலும், புராணக் கதைகளிலும் வரும் தேரலையும், சோமபாணத்தையும் இவர்கள் என்னவாகக் கருதுகிறார்கள் என்று புரியவில்லை.

 

அப்படி என்றால் மதுவை எதிர்ப்பது தவறா? என்ற கேள்வியை நீங்கள் கேட்பது புரிகிறது.

 

அதைவிட முக்கியமான பிரச்னைகளில் எல்லாம் இவர்கள் இத்தனை ஆர்வம் காட்டாதது ஏன் என்பதுதான் நமது கேள்வி.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மதுவிலக்கை தீவிரமாக வலியுறுத்துகிறார். அதில் மிகப்பெரிய நியாயம் இருப்பதை மறுப்பதற்கில்லை. குடிநோயாலும், விபத்துகளாலும் உயிரிழப்பவர்களில் தலித் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை புள்ளி விவரங்களே கூறுகின்றன. அவற்றை உடனடியாகத் தவிர்க்கவும், தடுக்கவும் மதுவிலக்கு தேவை என்ற யதார்த்தத்தை புறந்தள்ளிவிட முடியாது. அதே நேரத்தில், ஏழை, எளியவர்களுக்கு இலவசமாகக் கிடைக்க வேண்டிய கல்வி, விலைமதிப்பற்ற பண்டப் பொருளாக மாறிவருவதை இத்தனை தீவிரத்துடன் திருமாவளவனைப் போன்ற தலைவர்கள் எதிர்க்காதது ஏன் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

 

இருக்க இடமும், குடிக்கக் கஞ்சியும், உடுத்த உடையும் இல்லாமல் புழுக்களைப் போல சாலை ஓரங்களிலும், சாக்கடை ஓரங்களிலும் உழன்று கொண்டிருக்கும் எளிய மக்களின் வாழ்வாதாரத்தில் எந்த மாற்றமும் ஏற்படாமலேயே 69வது சுதந்திர தினத்தையும் கொண்டாடிக் களைத்து விட்டோம். விளிம்பு நிலை மக்களுக்கான தங்களது அரசியல் மூலம், அந்த மக்களின் வாழ்நிலைத் தரத்தை ஓரங்குலம் கூட நகர்த்த முடியவில்லையே என்ற ஆதங்கமோ, ஆத்திரமோ திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்றவர்களுக்கு ஏற்படாதது ஏன்?

 

வழக்கம்போல மதுவிலக்குப் போராட்டக் களத்தில் உணர்ச்சிப் பிளம்பாக உரத்துக் கூவிக் கொண்டிருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சமூகத்தின் அடிநாதமான மற்ற பிரச்னைகளுக்கும் இதே ஆக்ரோஷத்துடன் குரல் கொடுக்கலாமே…

 

ஈவிகேஎஸ் இளங்கோவன், விஜயகாந்த் போன்றவர்கள் எல்லாம் மதுவிலக்கு குறித்துப் பேசுவது ஒரு அரசியல் நகைச்சுவை என்பதைத் தவிர அதில் விமர்சிப்பதற்கு எதுவும் இல்லை.

 

பாமகவோ மதுவிலக்கு அரசியல் தங்களுக்கு மட்டுமே உரித்தானது எனக் கனாக் கண்டு கொண்டிருந்த நேரத்தில், திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் எனக் கூறி, கருணாநிதி அதைக் கபளீகரம் செய்து விட்டாரே என ஆத்திரப்படுகிறது.

 

இவர்கள் எல்லோரும் விதைப்பதை அறுவடை செய்வதற்கான தருணத்தை எதிர்நோக்கி, அமைதியாக வேடிக்கை பார்த்தபடி காத்திருக்கிறது அதிமுக தலைமை.

 

ஆக, மதுவிலக்கு எனும் அரசியல் போதை தலைக்கேறி, கட்சிகள் ஆடும் கூத்தை எப்போதும் போல், அரசியல் அரங்கின் வண்ணமயமான காட்சி மாற்றங்களாகக் கருதி மக்களும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

 

ஆனால் மதுவிலக்கு கொள்கை தொடர்பான உண்மையான தீர்வுக்கும், தற்போதைய அரசியல் களேபரங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே யதார்த்தம்.

 

கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என பல ஆண்டுகளாகக் கூவிக் கூவிக் களைத்துப் போன விவசாய அமைப்பின் தலைவர் நல்லுசாமி என்பவர், தனது அந்தக் கோரிக்கையைக் கைவிடும் அளவுக்கு மனம் நொந்து போன தகவல், ஊடகங்களில் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. நாட்டு மதுக்கடைகளைத் திறப்பதன் மூலம், அந்நிய மற்றும் அரசியல் பெருமுதலாளிகளின் மதுபான ஆலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

 

கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டால், உடலுக்குத் தீங்கு விளைவிக்காது ஆரோக்கியமான மது, குறைந்த விலையில் உழைத்துக் களைத்த மக்களுக்குக் கிடைக்கும். தென்னை, பனை மூலம் வருவாய் கிடைப்பதால் கிராமப்புற பொருளாதாரத் தற்சார்பு இயல்பாகவே வளரும். போலித்தனமான மது எதிர்ப்பால் இந்த உண்மை குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டதுதான் வேதனை.

 

மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே, மனிதனின் உணவைப் போலவும், காற்றைப் போலவும் மது அவனது வாழ்வில் இரண்டறக் கலந்திருப்பது என்ற உண்மை தற்போதைய மதுவிலக்குப் போராளிகள் யாரும் அறியாத ஒன்றல்ல. ஆனால், வெளிநாட்டு மதுபானங்களும், அதன் பக்க விளைவான கள்ளச்சாராயமும் தான் மதுவை சீரழிவுக்கான விஷமாக மாற்றியவை என்ற உண்மையும் கூட இவர்களுக்குத் தெரியும். ஆனாலும் அரசியலில் உண்மையை விட, பொய்தானே எப்போதுமே ஆதாயத்தைத் தரக் கூடியதாக இருக்கும். அதனால்தான் மதுவிலக்கு என்பது புதிய போதையாக தமிழக அரசியலை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. மது எதிர்ப்பு என்ற இந்தப் புதிய போதை, தமிழ்ச் சமூகத்தை, அதன் காத்திரமான அரசியலில் இருந்து வெகுதூரத்திற்கு இழுத்துச் சென்று விட்டதே என்பதுதான் அறிவு நேர்மையுடன் சிந்திப்பவர்களின் தற்போதைய வேதனை.

______________________________________________