முக்கிய செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல் : பாலியல் சர்ச்சை குறித்த விவாதமாக மாறிய வேட்பாளர்கள் விவாதம்

US Election: The Candidates debate turn out in to sex scam stories

______________________________________________________________________

 

trump vs hilaryஏதோ இந்தியாவில் மட்டுமே அரசியல் என்பது தனிமனித விமர்சனங்களை நோக்கித் தரம் தாழ்ந்து விட்டதாக எண்ணி இனி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. உலகமே உற்றுக் கவனிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலிலும் கூட தனிமனித விமர்சனம் தான் பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது.

 

கடந்த 2005ம் ஆண்டு பெண்கள் குறித்து தாம் தெரிவித்த கருத்து ஏற்படுத்திய சர்ச்சை பூதத்தின் பிடியில் சிக்கி, ட்ரம்ப் தவித்து கொண்டிருந்த நிலையில் இந்த இரண்டாவது விவாதம் நடைபெற்றதால் பெருமளவு கவனத்தை ஈர்த்திருந்தது. அப்படி ட்ரம்ப் என்னதான்யா சொன்னார் பெண்களைப் பற்றி என்கிறீர்களா….

 

“பிரபலமாக இருக்கறவங்க தொட்டா பொண்ணுங்க பெரிசா கண்டுக்க மாட்டாங்க” என்ற பெண்கள் குறித்த தனது பிரத்யேக கண்டு பிடிப்பை அவர் சொல்லி இருந்தார். அந்த வீடியோ இப்போது வெளியாகி இப்படி அவரைச் சிக்க வைக்கும் என்று அவர் நினைத்திருக்க வாய்ப்பில்லை.

 

பெண்கள் பற்றி ட்ரம்ப் கூறிய கருத்து, எந்த வேகத்தில் வளர்ந்ததோ அதை விட வேகமாக அவரது செல்வாக்கைச் சரிய வைத்து விட்டது. எதிர்க்கட்சிக் காரர்கள் மட்டுமின்றி, ட்ரம்ப் சார்ந்துள்ள குடியரசுக் கட்சியில் உள்ளவர்களே கடும் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கி விட்டனர். கடந்த 2012ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மெக்கெய்ன், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கண்டலீசா ரைஸ் போன்றவர்களே ட்ரம்ப்பின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். அது மட்டுமின்றி நிபந்தனையின் அடிப்படையில் ஆதரிப்பதற்கான தகுதியைக் கூட ட்ரம்ப் இழந்து விட்டதாக மெக்கெய்ன் சீறி விழுந்திருந்தார்.

 

ட்ரம்ப் இந்த மாதிரிச் சிக்கலில் மாட்டித் திணறிக் கொண்டிருந்த தருணத்தில் தான், அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் மோதிய இரண்டாவது நேரடி விவாத நிகழ்ச்சி செயின்ட் லூயிஸ் நகரில் இன்று காலை நடைபெற்றது. இதில் ஹிலரி கிளிண்டனும் டொனால்ட் ட்ரம்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டினார்கள்.

 

வரும் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் அதிபருக்கான தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்பும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் இரண்டாவது நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.

 

அவ்விவாத நிகழ்ச்சியில் பெண்களைத் தரக்குறைவாகப் பேசியவர், வரிகட்டாமல் ஏமாற்றியவர் என டொனால்ட் ட்ரம்ப் மீது ஹிலரி கிளிண்டன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். இதற்குப பதிலளித்த ட்ரம்ப், அரசு மின்னஞ்சல்களை ஹிலரி அழித்ததாகவும், வெளியுறவு அமைச்சராகத் தோல்வியடைந்ததாகவும் கூறினார். ஹிலாரியின் கணவர் பில் கிளிண்டன் மீது எழுந்த பாலியல் புகார் குறித்தும் ட்ரம்ப் பேசத்தவறவில்லை. கணவர் குறித்த பாலியல் புகார் பற்றிய கேள்விக்கு பதிலளிக்க ஹிலாரி மறுத்துவிட்டார்.

 

இந்த விவாத நிகழ்ச்சியில் சிரியா விவகாரம், லிபியாவில் நடந்த யுத்தம், அகதிகள் பிரச்னை போன்றவை குறித்து பொதுமக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்தனர். 90 நிமிடங்கள் நடைபெற்ற இவ்விவாதத்தில் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க வேட்பாளர்களுக்கு 2 நிமிடங்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

 

இந்த விவாத நிகழ்ச்சி தொடர்பான சி.என்.என். தொலைகாட்சியின் கருத்துகணிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலரி கிளிண்டன் 57 சதவிகித ஆதரவு பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிடும் குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்பும் 34 சதவிகிதம் பெற்றுள்ளார். முன்னதாக கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெற்ற முதல் விவாத நிகழ்ச்சியில் ஹிலரி 62 சதவிகித ஆதரவுடன் வெற்றி பெற்றார்.

 

ஆக அமெரிக்க அதிபர் தேர்தலும் கூட நம் ஊர் அரசியலைப் போல, தனிமனித தாக்குதல் தளத்துக்கு இறங்கிவிட்டதைக் காண முடிகிறது. அதிலும் பெரும்பாலான பேச்சுகள் பாலியல் புகார்களாகவும், சர்ச்சைகளாகவுமே இருக்கின்றன… (நம் ஊர்த் தலைவர்கள் பரவாயில்லைங்கிறீங்களோ….). பாலியல் புகார்கள் குறித்த சர்ச்சை என்பதால் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் விவாத நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவே சென்றது எனலாம்.

 

முழுவதுமே கருத்துகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு தனிமனிதர்களும் அவர்களது குணாதிசயங்களும் அரசியல் அரங்கில் முன்னணி இடத்தைப் பிடிக்கும் காலம் இது போல… தனிமனிதர்களைச் சுற்றிச் சுழலும் அரசியலால், மக்களுக்கு என்ன பயன் இருக்கப் போகிறது என்ற கேள்விக்குத்தான் நம்மிடம் பதில் இல்லை.

 

  • நடப்பு குழு

 

____________________________________________________________________